search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "maize harvesting"

    • காட்டுப்பன்றிகளால் சேதமடைந்த சாகுபடிக்கும் எவ்வித நிவாரணமும் கிடைக்காமல் விவசாயிகள் பாதித்துள்ளனர்.
    • அறுவடை சீசனில் வாடகைக்கு விட்டால் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

    உடுமலை :

    பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனத்துக்கு உடுமலை, குடிமங்கலம் வட்டாரத்தில் பிரதானமாக மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டது. இரு வட்டாரங்களிலும் 40 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமாக இச்சாகுபடிக்கு விதைகள் நடவு செய்யப்பட்டு அறுவடை பணிகள் தீவிரமடைந்துள்ளது.

    இந்நிலையில் தொழிலாளர் தட்டுப்பாடு காரணமாக கடந்த இரு வாரங்களாக அறுவடை பணிகள் பாதித்து இழுபறி நீடிக்கிறது. பொங்கல் பண்டிகைக்கு முன்பாகவே அறுவடை பணிகள் பெரும்பாலும் நிறைவு பெற்றிருக்க வேண்டும். உடுமலை வட்டாரத்தில் அறுவடைக்கு ஆட்கள் கிடைக்காததால் தளிஞ்சி உட்பட மலைவாழ் கிராமங்களில் இருந்து தொழிலாளர்களை அழைத்து வந்துள்ளனர்.

    இவர்கள் சமவெளிப்பகுதிகளில் தங்கி அறுவடை பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஏக்கருக்கு 7,500 ரூபாய் வரை கதிர் மற்றும் மக்காச்சோள தட்டை அறுவடை செய்ய கூலியாக பெறுகின்றனர். இருப்பினும் தேவைக்கேற்ப தொழிலாளர்கள் இல்லாமல் பல ஆயிரம் ஏக்கரில் அறுவடை பணிகள் பாதித்துள்ளது.

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:- மக்காச்சோள சாகுபடியில் 110 நாட்களை தாண்டியும் அறுவடை செய்ய முடியவில்லை. கதிர்கள் முற்றிய பிறகும் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. அறுவடைக்கு தொழிலாளர்கள் கிடைக்காமல் அதிக பாதிப்பை சந்தித்துள்ளோம். சாகுபடி செலவு பல மடங்கு அதிகரித்துள்ளது. ஏக்கருக்கு 15 ஆயிரம் ரூபாய் வரை அறுவடைக்கே செலவிட வேண்டியுள்ளது. மழை பெய்தால் மணிகள் முளைவிடும் சூழல் உருவாகும்.

    எந்திரங்களை கொண்டு அறுவடை செய்யும் போது உலர் தீவனமாக மக்காச்சோள தட்டை பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்படுகிறது.எனவே இத்தகைய அறுவடை சீசனில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட தொழிலாளர்களை அறுவடை பணிக்கு பயன்படுத்தி கொள்ள அரசு உத்தரவிட வேண்டும்.இல்லாவிட்டால் அடுத்த சீசனில் மக்காச்சோளம் சாகுபடி செய்வதை கைவிடும் நிலை வரலாம் என்றனர்.

    மக்காச்சோள அறுவடைக்கு பல்வேறு பகுதிகளில் நேரடி எந்திர முறையை பின்பற்றி வருகின்றனர். நெல் அறுவடை எந்திரத்தில் சில மாற்றங்களை செய்து பயன்படுகின்றனர். இவ்வகை எந்திரங்களுக்கு தனியாரை மட்டுமே நம்பியிருக்க வேண்டியுள்ளது. ஒரு மணி நேரத்துக்கு 2,200 - 2,500 ரூபாய் வரை, வசூலிக்கின்றனர். இவ்வகை எந்திரங்களை வேளாண் பொறியியல் துறை வாயிலாக அறுவடை சீசனில் வாடகைக்கு விட்டால் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

    கடந்த சில ஆண்டுகளாக மக்காச்சோள சாகுபடியில், படைப்புழு தாக்குதலால் மகசூல் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகிறது. இந்தாண்டும் ஏக்கருக்கு 100 கிலோ கொண்ட 30 மூட்டைகள் கிடைப்பதே சிரமமாகியுள்ளது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் படைப்புழு தாக்குதல் பாதிப்புக்கு அரசின் நிவாரணம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. தொடர்ந்து தாக்குதலை கட்டுப்படுத்த, தேவையான மருந்துகளும் மானியத்தில் வினியோகிக்கப்பட்டது. இந்த சீசனில் மருந்துகளும் வழங்கவில்லை. நிவாரணமும் கிடைக்கவில்லை. இதனால், விவசாயிகள் அதிருப்தியில் உள்ளனர். குடிமங்கலம் வட்டாரத்தில் காட்டுப்பன்றிகளால் சேதமடைந்த சாகுபடிக்கும் எவ்வித நிவாரணமும் கிடைக்காமல் விவசாயிகள் பாதித்துள்ளனர். 

    தேனி பகுதிகளில் மக்காச்சோள அறுவடை பணிகள் தீவிரம் அடைந்து உள்ளது.
    தேனி:

    தேனி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கொடுவிலார்பட்டி, நாகலாபுரம், ஸ்ரீரெங்காபுரம், வெங்கடாசலபுரம், தருமாபுரி, தாடிச்சேரி, கோட்டூர், சீலையம்பட்டி, வேப்பம்பட்டி உள்பட பல்வேறு இடங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. கண்மாய் பாசனம், கிணற்றுப் பாசனம், மானாவாரி என இடத்துக்கு ஏற்ப சாகுபடி செய்யப்பட்டது.

    இங்கு சாகுபடி செய்யப்பட்ட மக்காச்சோளம் விளைச்சல் அடைந்து உள்ளதை தொடர்ந்து அறுவடை பணிகள் தொடங்கி உள்ளது. சில நாட்களாக அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இப்பகுதிகளில் போதிய அளவில் கதிரடிக்கும் களம் வசதி இல்லாததால் சாலைகளில் கொட்டி மக்காச்சோளத்தை பிரித்தெடுத்து வருகின்றனர்.

    இதனால், அரண்மனைப்புதூர்-காமாட்சிபுரம் சாலையில் பல இடங்களில் மக்காச்சோளக் கதிர்களை கொட்டி சோளத்தை பிரித்து எடுக்கும் பணிகள் நடந்து வருகிறது. வியாபாரிகள் நேரில் வந்தே கொள்முதல் செய்கின்றனர்.

    ஈரப்பதத்துடன் கூடிய மக்காச்சோளம் ஒரு குவிண்டால் (100 கிலோ) ரூ.1,750-க்கும், ஈரப்பதம் இல்லாமல் உலர வைத்தது ஒரு குவிண்டால் ரூ.1,900-க்கும் வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படுகிறது. வியாபாரிகள் நேரில் வந்து வாங்கிச் செல்வதால் விவசாயிகள் அவர்களிடம் விற்பனை செய்து வருகின்றனர்.
    ×