என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kottivakkam murder"

    சென்னை கொட்டிவாக்கத்தில் ரவுடி கொலை வழக்கு தொடர்பாக 5 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சோழிங்கநல்லூர்:

    சென்னை கிழக்கு கடற்கரை சாலை, கொட்டிவாக்கம் காலனி பகுதியை சேர்ந்தவர் பாலாஜி (28). இவருக்கு நதியா என்ற மனைவியும் மூன்று மகன்களும் உள்ளனர்.

    நேற்று மாலை சுமார் 7 மணியளவில் கொட்டிவாக்கத்தில் உள்ள டாஸ்மாக் கடை அருகே நடந்துச் சென்ற பாலாஜியை, பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் ஓடஓட விரட்டி அரிவாளால் வெட்டியதில் பாலாஜி சாலையில் மயங்கி விழுந்தார்.

    இதைக்கண்டு அரசு மதுபான கடையில் மது அருந்த வந்தவர்களும் வாகன ஓட்டிகளும் அலறியடித்து ஓடினர். உடனடியாக பாலாஜியின் தந்தையும் உறவினர்களும் ஷேர் ஆட்டோவில் காயம் அடைந்த பாலாஜியை ஏற்றி அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

    தகவல் அறிந்து விரைந்து வந்த நீலாங்கரை போலீசார் பாலாஜியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சென்னை தெற்கு மாவட்ட, இணை கமி‌ஷனர் மகேஸ்வரி சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி மதுக்கடையில் பொருத்தியிருந்த சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தார்.

    போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட பாலாஜி மீது நீலாங்கரை காவல் நிலையத்தில் 2 வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரிய வந்தது.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவர் வீட்டில் சோதனை நடத்தியபோது கைத்துப்பாக்கியும், சயனைடும் கைப்பற்றப்பட்ட வழக்கில் போலீசார் பாலாஜி உட்பட 3 பேரை கைது செய்தனர்.

    பாலாஜி மீது 5 வருடத்திற்கு முன்பு மடிப்பாக்கத்தில் ஒருவரை கொலை செய்த வழக்கு நிலுவையில் உள்ளது.

    பாலாஜிக்கு பிடிக்காதவர்கள் யாராக இருந்தாலும் வி‌ஷ ஊசி போட்டு கொல்வதாக போலீசார் தெரிவித்தனர். வி‌ஷ ஊசி போட்டு ஏற்கனவே 3 பேரை கொன்றுள்ளார்.

    ரோட்டில் நடந்துசெல்லும் போது மற்றவர்களுக்கு தெரியாமல் ஊசி போடுவார். அவர்களுக்கு எறும்பு கடித்தது போல் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர். இந்த வழக்கில் அவர் ஜெயில் தண்டனை அனுபவித்து வெளியே வந்துள்ளார்.

    பின்னர் ஜாமீனில் வெளிவந்த பாலாஜி திருந்தி வாழ்ந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்களான பஷில், விக்கி உள்ளிட்ட மூன்று பேரை நீலாங்கரை போலீசார் ஒரு வழக்கில் கைது செய்துள்ளனர்.

    இந்த கைது சம்பவத்திற்கு பாலாஜி போலீசாருக்கு உளவாளியாக செயல்பட்டு காட்டி கொடுத்ததாக நினைத்து அவரை பழி வாங்கவே அவர்கள் கொலை செய்ததாக கூறப்படுகிறது.

    பாலாஜி கொலை தொடர்பாக பட்டினம்பாக்கம் மோதார் பகுதியில் பதுங்கி இருந்த ஐவின், பசூல், ராஜா, கார்த்திக், சஞ்சய் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேருக்கு இந்த கொலை வழக்கில் தொடர்பு இருப்பதாக நீலாங்கரை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    ×