search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "keeping"

    • சேலத்தில் உள்ள அனைத்து மாரியம்மன் கோவில்களுக்கும் தாய் கோவிலாக கோட்டை மாரியம்மன் கோவில் விளங்குகிறது.
    • இந்த கோவிலில் சாமி தரிசனம் செய்ய விடிய விடிய நீண்ட வரிசையில் பொதுமக்கள் நின்று வழிபட்டனர்.

    சேலம்:

    சேலத்தில் உள்ள அனைத்து மாரியம்மன் கோவில்களுக்கும் தாய் கோவிலாக கோட்டை மாரியம்மன் கோவில் விளங்குகிறது. 500 ஆண்டுக்கு முன்பு சேரநாட்டை ஆண்ட சிற்றரசர்கள் காவல் தெய்வமாக கோட்டை மாரியம்மனை பிரதிஷ்டை செய்தனர். ஆனால், தற்போது அப்பகுதியில் கோட்டை கரைந்து காணாமல் போனாலும், மாரியம்மன் மழையாக அருள்பாலிக்கிறாள். மாரியம்மன் அக்னி திசை நோக்கி வலது காலை ஊன்றி இடது காலை மடக்கி வீராசனத்தில் வீற்றிருக்கிறாள். வலது மேற்கரத்தில் பாம்புடன் கூடிய உடுக்கையும், வலது கீழக்கரத்தில் திரிசூலமும், இடது மேற்கரத்தில் பாசமும், இடது கீழ்க்கரத்தில் கபாலமும், தீச்சுடருடனும் காட்சியளித்து வியப்பூட்டு கிறாள்.

    பொதுவாக அம்மன் தலங்களில் அரக்கன் தலை அவள் காலடியில் இருக்கும். ஆனால், இங்கு தாமரை மொட்டு இருக்கிறது. அம்மனின் காலடி தரிசனம் கிடைத்தால் அசுர குணம் கொண்டவர்கள் கூட அடக்கமான தாமரை மொட்டுபோல மாறிவிடுவார்கள் என்பதை விளக்கும் அம்சம் அது.

    பல்வேறு சிறப்புகள் பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் ஆடித்திருவிழா 15 நாட்கள் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஆடித்திருவிழா கடந்த மாதம் 26-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து கோவிலில் அம்மனுக்கு தினமும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன. நேற்று முன்தினம் சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் வைத்தல் நேற்று தொடங்கியது. நேற்று மாலை முதலே சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் அம்மனுக்கு பொங்கலிட்டு வழிபாடு நடத்தினார்கள்.

    இதற்காக கோவிலின் பின்புறம் சிறப்பு வசதி செய்யப்பட்டிருந்தது. அம்மனை வேண்டி பக்தர்கள் சாணத்தால் மெழுகிய மூங்கில் கூடையில் பொங்கல் வைக்க தேவையான பச்சரிசி, வெல்லம் மற்றும் பூஜை பொருட்களை சுமந்து வந்தனர். கோவிலில் பொங்கலிட்டு அம்மனுக்கு படைத்து வழிபட்டார்கள்.

    விடிய, விடிய ஆயிரக்கணக்கான பக்தர்கள் பொங்கல் வைத்தனர். மேலும் பக்தர்கள் பலர் மாவிளக்கு எடுத்து வந்தும் அம்மனை வழிபட்டனர். அம்மன் நேரடியாக பக்தர்களிடம் அமுது வாங்கி உண்கிறார் என்பதை உணர்த்தும் விதமாக கோவிலில் நைவேத்தியம் படைப்பது அம்மனை குழந்தையாக பாவித்து ஊட்டிவிடப்படுகிறது. இதனால் பொங்கல் வைக்கும் பக்தர்கள் அம்மனுக்கு படைத்த பின்னர் அதில் ஒரு பகுதியை அங்கு நிற்கும் பக்தர்களுக்கு தானமாக அளிக்கிறார்கள்.



    இதே போன்று மாவிளக்கு, கூழ் போன்றவையும் தானமாக வழங்குகின்றனர். திருவிழாவின்போது கோவிலில் எங்கு திரும்பினாலும் தான தருமம் நிகழ்வது இந்த கோவிலின் மற்றொரு சிறப்பாகும். அம்மனை வேண்டி இந்த கோவிலுக்கு சென்றால் நம் வேண்டுதலும் நிறைவேறி வயிறும் நிறைந்து மன மகிழ்வுடன் திரும்புவார்கள். ஆடித்திருவிழாவில் பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்து வருதல் நிகழ்ச்சிகள் நாளை (வியாழக்கிழமை) வரை நடக்கிறது.

    நேற்று மாலை முதலே கோவிலுக்கு திரளான பக்தர்கள் வர தொடங்கினர். கோவில் முன்பிருந்து மேற்கு பகுதி வழியாக தென்புற வாசல்வரை பக்தர்கள் வரிசையாக நின்று வழிபட்டனர். எந்தவித நெரிசலும் இல்லாமல் பக்தர்கள் சுய கட்டுப்பாட்டுடன் பொறுமையாக நின்று அம்மனை தரிசனம் செய்தது கோட்டை மாரியம்மன் மீதான அளவுகடந்த பக்தியை காட்டுகிறது என்றனர் பெரியவர்கள்.

    இன்று (புதன்கிழமை) கோவிலுக்கு அதிகாலை முதலே பக்தர்கள் வர தொடங்கினர். இன்றும் விடிய விடிய லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் கூடுதல் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சேலம் மாவட்ட மக்கள் அம்மனை தரிசிக்க வசதியாக இன்று சேலம் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்க தாகும். கோட்டை பெரிய மாரியம்மனின் தங்கைகளாக கருதப்படும் சேலம் செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன், குகை காளியம்மன், மாரியம்மன், அம்மாபேட்டை செங்குந்தர் மாரியம்மன், சேலம் சின்ன மாரியம்மன் உள்ளிட்ட 8 பேட்டை மாரியம்மன் ஆலயங்கள் மட்டுமின்றி மாநகரில் உள்ள அம்மன் கோவில்களிலும் இன்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

    கோட்டை மாரியம்ம னுக்கு மண் பொம்மைகளை பக்தர்கள் நேர்த்திக்கடனாக வழங்குகிறார்கள். பக்தருக்கு உடலில் எந்த உறுப்பில் பாதிப்பு உண்டாகிறதோ, அந்த உறுப்பை மண் பொம்மையாகச் செய்து அன்னைக்கு சமர்ப்பிக்கிறார்கள். இந்தப் பரிகார நடைமுறையை 'உருவாரம்' என்று சொல்கிறார்கள். சுமார் 2 அடி உயரம்வரையிலான பொம்மைகளில் வேப்பிலை சொருகி கோவில் முன்பு வைப்பார்கள். இந்த பொம்மைகள் கடவுளை வணங்கும் என்பது இன்றும் தொடரும் நம்பிக்கை. பொங்கல் வைப்பது, மாவிளக்கு எடுத்தல், தீச்சட்டி எடுத்து வருதல், அலகு குத்துதல், முளைப்பாரி எடுத்து வருதல் என பக்தர்கள் அம்மனுக்கு நன்றிக்கடனாக நேர்த்திக்கடன் செலுத்தி னார்கள்.

    அம்மனுக்கு உச்சிகால பூஜைக்கு பிறகு, நிவேதன அமுதூட்டி பிறகு மணி அடிப்பார்கள். இந்த மணி சத்தம் கேட்டபிறகுதான் சேலம் நகர மக்கள் அன்றைய முதல் உணவு உட்கொள்வது என்பது அந்த காலத்திய வழக்கம். இக்கோயிலில் வழிபடுவோருக்கு விசேஷ சக்திகள் கிடைக்கும் என்கிற நம்பிக்கையும் உண்டு.

    81 அடி உயர ராஜகோபுரம்

    கோட்டை மாரியம்மன் கோவிலில் 1982-1989-ம் ஆண்டிலும் திருப்பணிக்குழு அமைக்கப்பட்டு 81 அடி உயர ராஜகோபுரம் கட்டி முடிக்கப்பட்டது. 1.7.1993-ந் தேதியன்று கும்பாபிசேகம் நடைபெற்றது. இந்த ராஜகோபுரம் 81 அடி உயரமும்,42அடி 8 இஞ்ச் நீளமும் 30அடி அகலமும் கொண்ட கோபுரம் ஆகும். ராஜகோபுரம் கட்டி 29 ஆண்டுகளை கடந்த நிலையில் இந்த ராஜ கோபுரம் பக்தர்களின் நீண்ட கால கனவாகி அம்மன் அருளால் நிறைவேறியதாக பக்தர்கள் கூறுகிறார்கள்.

    ராஜ கோபுரம் கட்ட வேண்டி பக்தர்கள் உண்ணா நோன்பு இருந்து பல்வேறு வேண்டுதல்களையும் முன்வைத்தனர். அம்மன் அருளாலேயே ஐந்து நிலை கோபுரம் உருவானதாக பக்தர்கள் மெய்சிலிர்க்க கூறுகிறார்கள்.

    அதே போன்று பெரிய மாரியம்மனுக்கு சிற்ப வேலைப்பாடுகளுடன் பிரமாண்டமான கல்மண்டபத்துடன் கூடிய ஆலயம் உருவாகி வருகிறது. சூட்சுமங்கள் நிறைந்த அன்னையின் ஆலயம் வளர சேலம் மாநகரையும் வளர்ச்சி அடைய செய்து வருகிறாள் என்கின்றனர் பக்தர்கள்.

    ×