search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "karuppanna swamy"

    திருப்பரங்குன்றம் அருகே உள்ள உச்சிக்கருப்பணசாமி கோவிலில் முக்கனிகள் படையல் விழா நடைபெற்றது. இதில் ஆண் பக்தர்கள் மட்டும் கலந்து கொண்டு சாமிக்கு மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளை படைத்து வினோத வழிபாடு நடத்தினர்.
    திருப்பரங்குன்றத்தை அடுத்த தனக்கன்குளம் செல்லும் வழியில் உச்சிகருப்பணசாமி கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் சாமிக்கு உருவம் கிடையாது. ஆனால் பெரிய அளவிலான 2 கல்தூண்கள் கருவறையாக அமைந்துள்ளது. இங்கு காற்றின் வேகத்திற்கு அசைந்து ஒலி கொடுக்கும் வெங்கல மணிகளும், கல்தூண்களுக்கு மையத்தில் 5 அடி உயரமுள்ள 2 அரிவாள்களும் உள்ளன.

    இந்த கோவிலில் தொன்று தொட்டு ஆண் பக்தர்கள் மட்டுமே வழிபட்டு வருகிறார்கள், கோவிலில் தரும் விபூதியை ஒவ்வொரு பக்தரும் அவரவர் நெற்றியில் பூசிக்கொள்கின்றனர். அதேவேளையில் கோவிலைவிட்டு வெளியேறும் போது அவர்கள் நெற்றியில் பூசிய விபூதியை அழித்து விட்டு செல்கின்றனர். இத்தகைய கட்டுப்பாடுகள் கொண்டு காவல் காக்கும் கோவிலாக விளங்குகிறது, உச்சிக்கருப்பணசாமி கோவில். இங்கு ஒவ்வொரு செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் கனரக வாகனங்கள், லாரி, கார் போன்ற மோட்டார் தொழில் செய்பவர்கள் இங்கு வந்து வழிபட்டு சென்றால், எவ்வித சேதமுமின்றி, தொழில் நல்ல முறையில் நடைபெறும் என்பது அவர்களின் நம்பிக்கை.

    இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் பவுர்ணமிக்கு அடுத்த வெள்ளிக்கிழமை அன்று கனி மாற்றும் திருவிழா தொன்று தொட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வருடத்திற்கான கனி மாற்றும் விழா நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி திருப்பரங்குன்றம் பெரிய ரதவீதியில் உள்ள சாமி பெட்டி இருக்கும் இடத்திலிருந்து ஏராளமான ஆண்கள் ஆயிரக்கணக்கில் வாழை, மாம்பழம் மற்றும் பலா பழங்களான முக்கனிகளை ஒரு வாகனத்தில் வைத்து அலங்காரத்துடன் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக உச்சிக் கருப்பணசாமி கோவிலுக்கு வந்தனர்.

    அங்கு உச்சிக்கால வேளையில் சாமிக்கு குவியலாக முக்கனிகள் படைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான ஆண் பக்தர்கள் திரண்டு வந்து பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். இந்த வழிபாட்டு நிகழ்ச்சியில் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்பது ஐதீகமாக கருதப்படுகிறது. பக்தர்கள் அனைவருக்கும் பழங்கள் பிரசாதமாக வழங்கப்பட்டன.

    அதை பக்தர்கள் தங்களின் தேவைக்கு எடுத்து சாப்பிட்டு விட்டு மீதியை கோவில் வளாகத்திலேயே வைத்து விட்டு சென்று விடுவார்கள். பிரசாத பழங்களை வீட்டுக்கு கொண்டு செல்லக்கூடாது என்பது போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் இந்த கோவில் வழிபாட்டு நிகழ்ச்சிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. வழிபாடு முடிந்த பின்பு அனைவரும் தங்களது நெற்றியில் பூசிய விபூதியை அழித்து விட்டு கோவிலிலிருந்து வெளியே சென்றனர்.
    நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நாவலடி கருப்பண்ணசாமி முற்றுப்பெறாத நிலப்பிரச்சினை, நிலம், வீடு வாங்குவது, விற்பது தொடர்பான பிரச்சினைகள், வேலையின்மை, போன்ற பிரச்சனைகளை தீர்த்து வைப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர்.
    நாமக்கல் மாவட்டத்தில் ஒரு கடவுளையே ஜட்ஜ் சாமி என்று பக்தர்கள் மனு கொடுத்து வழிபாடு செய்கிறார்கள். சீமைத்துரை ஜட்ஜ் நாவலடி கருப்பண்ணசாமி என்றழைக்கப்படும் அந்த சாமி வீற்றிருக்கும் கோவில், நாமக்கல் மாவட்டம், மோகனூருக்கு அருகே ஒரு கிலோமீட்டர் தொலைவில் குமரிபாளையம் கிராமத்தில் இருக்கிறது. இந்தக் கோவிலின் முன்பகுதியில் அழகிய பிரமாண்டமான இரண்டு குதிரை வாகனங்கள் உள்ளன.

    பக்தர்கள், தங்களது பிணி நீங்கவும், விவசாயம் செழிக்கவும், குழந்தை வரம், வராக்கடன் கிடைக்கவும் இத்தல இறைவனை வேண்டிக்கொள்கின்றனர். மேலும் முற்றுப்பெறாத நிலப்பிரச்சினை, நிலம், வீடு வாங்குவது, விற்பது தொடர்பான பிரச்சினைகள், வேலையின்மை, படிப்பு, திருமணம் என தங்கள் கோரிக்கைகளை மனுவாக எழுதி சமர்ப்பிக்கின்றனர்.

    நாவலடியானிடம் தங்கள் குறைகளை கூறி மனு எழுதி கொடுக்க வருபவர்களும், களவுப்போன பொருட்கள் திரும்ப கிடைப்பதற்கும் இங்கு அது தொடர்பாக கோரிக்கைகளை மனுவாக எழுதி வைக்கிறார்கள். அதேபோல் காரியம் கைகூடியவுடன் அவர்கள் காணிக்கை செலுத்த வருவதும் தொடர்கிறது என்பதை காணும் போது நாவலடியானின் மகிமை கண்கூடாக தெரிகிறது.

    ஒவ்வொரு நாளும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கோவிலில் பூஜைகள் நடைபெறும். சிறப்பு பூஜையாக இரவு 12 மணிக்கு மேல் நாவலடியானுக்கு சத்திய பூஜை நடைபெறும். சத்திய பூஜைக்கு மல்லிகை, சம்பங்கி மலர்கள் பயன்படுத்தப்படும். சாமிக்கு செவ்வரளி, மல்லிகை, சம்பங்கி, செவ்வந்தி, ரோஜா போன்ற பூக்களால் மலர் பந்தலிட்டு வழிபாடு நடைபெறும்.
    மோகனூர் நாவலடி கருப்பண்ண சாமி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    நாமக்கல் மாவட்டம் மோகனூரில் பிரசித்தி பெற்ற நாவலடி கருப்பண்ணசாமி கோவில் உள்ளது. சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான இக்கோவிலில், ராஜகோபுரம், காளியம்மன், மாரியம்மன், அரண்மனை சாவடி விநாயகர், சிவன் கோவில் நுழைவுவாயில் முன் உள்ள விநாயகர் கோவில்கள் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

    முன்னதாக கடந்த 13-ந் தேதி, காளியம்மன், நாவலடியான், மாரியம்மன் கோவிலில் கிராம சாந்தி பூஜையுடன் நிகழ்ச்சிகள் தொடங்கியது. தொடர்ந்து, 14-ந் தேதி கணபதி, நவக்கிரகம், லட்சுமி ஹோமம் நடைபெற்று, மாலை விநாயகர் வழிபாடு, வாஸ்துசாந்தி நடைபெற்றது. பின்னர் 15-ந் தேதி யானை, குதிரை, ஒட்டகம், பசுக்கள் செண்டைமேளம், கரகாட்டத்துடன் காவிரி ஆற்றில் புனிதநீராடிய பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்துக்கொண்டு, சிவன் கோவில் முன்பு உள்ள இரண்டு விநாயகர் கோவில், காளியம்மன் கோவில், அரண்மனை சாவடி விநாயகர் கோவில், மாரியம்மன் கோவில் வழியாக, நாவலடியான் கோவில் வந்தனர். தொடர்ந்து பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்று மாலை முதல்கால யாக பூஜை தொடங்கியது.

    நேற்று முன்தினம் காலை வேதபாராயணம், இரண்டாம் கால யாகபூஜை, மதியம் கோபுரங்களுக்கு கலசங்கள் வைத்து, விமானம் கண் திறப்பு, அஷ்டபந்தன மருந்து சாற்றுதல், மாலை மூன்றாம் காலயாக பூஜை நடைபெற்றது. இரவு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

    விழாவில் நேற்று அதிகாலை 4 மணிக்கு மேல் நான்காம் கால யாகபூஜை செய்து, யாகசாலையில் இருந்து கடம் புறப்படுதல், காலை 5.30 மணிக்கு மேல், அரண்மனை சாவடி விநாயகர், சிவன் கோவில் நுழைவுவாயில் உள்ள மணியன்குல, கண்ணந்தகுல விநாயகர் கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து காலை 6.30 மணிக்கு மேல், காளியம்மன் கோவில், ராஜகோபுரம், பரிவார கோபுரங்கள் கும்பாபிஷேகம், காலை 8 மணிக்கு மேல் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம், தொடர்ந்து காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் செல்லாண்டி அம்மன், நாவலடி கருப்பண்ணசாமி, நாவலடியான் ராஜகோபுரத்துக்கு மகா கும்பாபிஷேகம், மகா தீபாராதனையும் நடைபெற்றது.

    கோபுர கலசங்கள் மீது புனிதநீர் ஊற்றப்பட்டதுடன், கூடியிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டன. அப்போது ராஜகோபுரத்தை கருடன் மூன்று முறை சுற்றியதை பார்த்த பக்தர்கள் வானத்தை நோக்கி இருகரம் கூப்பி வணங்கினார்கள். அப்போது வானத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவப்பட்டது. தொடர்ந்து, சிறப்பு அபிஷேகம், மகாதீபாராதனை, நடைபெற்றது.

    விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு, பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. விழாவில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் தங்கமணி, போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி.பாஸ்கர் மற்றும் நாமக்கல், சேலம், கரூர், திண்டுக்கல், ஈரோடு, திருச்சி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த குடிபாட்டு மக்களும், பல்லாயிரக்கணக்கான பக்தர்களும் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவையொட்டி கோவை மண்டல போலிஸ் ஐ.ஜி. பாரி தலைமையில், சேலம் சரக டி.ஐ.ஜி. செந்தில்குமார், நாமக்கல் போலீஸ் சூப்பிரண்டு அருளரசு மேற்பார்வையில் 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதற்கான ஏற்பாடுகளை, கொங்குவேளாளர் சமூக மணியன்குல, கண்ணந்தகுல குடிபாட்டு மக்கள், பரம்பரை அறங்காவலர் குழு மற்றும் ஆலயத்திருப்பணிக்குழு செய்து இருந்தனர். 
    ×