search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kartha Veeryarjuna"

    • குலம் தழைக்க குலதெய்வ வழிபாடு அவசியம்.
    • இழந்ததை மீட்டுத்தரும் வல்லமை உடைய தெய்வம் கார்த்த வீர்யார்ஜூனர்.

    குலம் தழைக்க குலதெய்வ வழிபாடு அவசியம். குலதெய்வமாக வணங்கும் கடவுள்கள் பெரும்பாலும் அவதாரமாகவோ, மனிதனாகவோ மண்ணில் பிறந்து, நமக்கு வழிகாட்டியாக, நம்மை காப்பதற்காக வாழ்ந்தவர்களே. குலதெய்வமாக இல்லா விட்டாலும் பல கடவுள்களின் பிரார்த்தனைகள், பரிகாரங்கள் நம் சங்கடங்களை நிவர்த்தி செய்ய ஆண்டவனால் அடையாளம் காட்டப்பட்டவை.

    கலியுகத்தில் சொத்துக்களை இழப்பது, பொருட்கள் திருடு போவது, குடும்பத்தில் உள்ளவர்கள் பிரிந்து போவது. இளம் வயதில் சாவின் விளிம்பிற்குச் செல்லும் அளவு நோய்வாய்ப்படுவது சகஜமாகிவிட்டது. இப்படி இழந்ததை மீட்டுத்தரும் வல்லமை உடைய தெய்வம் கார்த்த வீர்யார்ஜூனர்.

    கிருதயுகத்தில் சத்ரிய வம்சத்தில் ஹேஹய நாட்டில் மகிஷமதியை தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த கிருதவீரன் - பத்மினிக்கு பிறந்தவர், கார்த்த வீர்யார்ஜூனர். இவர் சுதர்சன சக்கரத்தின் அம்சமாகப் பிறந்த தத்தாத்ரேயர், 'சப்தமி ஸ்நபனம்' என்னும் விரதத்தை உபதேசம் செய்து அதன் மூலம் பிறந்தவர். தத்தாத்ரேயரை குருவாக ஏற்று வேத மந்திரங்கள் கற்று பணிவிடை செய்து நினைத்தபோது ஆயிரம் கரங்களைப் பெறும் வல்லமை பெற்றவர்.

    மேலும் மகாவிஷ்ணுவைத் தவிர வேறு எவராலும் மரணம் ஏற்படாத வரத்தையும் பெற்றவர். இவர் 85 ஆயிரம் ஆண்டுகள். மூன்று உலகங்களையும் ஆண்டதாக புராணங்கள் சொல்கின்றன.

    ராமாயணத்தில் ராவணனை பற்றி குறிப்பிடும் பொழுது, கார்த்த வீர்யார்ஜூனர் ராவணனோடு போரிட்டு வெற்றி பெற்றதாக ஒரு குறிப்பு உள்ளது. ஐயப்பனின் 18 படிகளில் 7-ம் படியாக கார்த்த வீர்யார்ஜூனர் இருப்பதாகவும், குருவின் சொல் கேட்டு சாஸ்தா வழிபாடு செய்ததாகவும் சொல்லப்படுகிறது. காமதேனுவை பொது சொத்தாக்க வேண்டும் என்ற நோக்கத்தில், ஜமதக்னி முனிவரைக் கொன்று காமதேனுவை கவர்ந்து சென்றார் கார்த்த வீர்யார் ஜூனர்.

    இதனால் விஷ்ணுவின் அவதாரமான ஜமதக்னி முனிவரின் மகன் பரசுராமருடன் போரிட நேர்ந்தது. இதில் பரசுராமரால் கொல்லப்பட்டு முக்தி அடைந்தார். தன் நாட்டு மக்களின் வளமான வாழ்வுக்காக போரிட்டதால், அவரை காக்கும் கடவுளாக திகழ மகாவிஷ்ணு அருள்பாலித்தார்.

    கார்த்த வீர்யார்ஜூனருக்கு மூலக்கோவில் உஜ்ஜைனியில் மகேஸ்வரர் என்ற இடத்தின் அருகே அகல்யாபாய் கோட்டையில் உள்ளது. தமிழகத்தில் கும்பகோணம் மாவட்டம் குடவாசல் அருகில் உள்ள சேங்காலிபுரம் ஆலயத்திலும் இவருக்கு தனி சன்னிதி இருக்கிறது.

    வாலாஜா பேட்டை தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் நான்கு அடி உயரத்தில் நின்ற கோலத்தில், பச்சைக் கல்லில் கார்த்த வீர்யார்ஜூனர் திருமேனி அமைக்கப்பட்டுள்ளது. இழந்ததை மீட்டுக் கொடுக்கும் இறைவனாக 16 செல்வங்களை வழங்கும் விதத்தில் 16 திருக்கரங்களோடு, காப்பதற்குரிய 16 ஆயுதங்களோடும், சுதர்சன சக்கரத்துடன் காட்சி தருகிறார். காலில் பாதரக்சை, பார்த்தசாரதிப் பெருமாள் போல் மீசை, கதை, சங்கு, சக்கர தாரியாக யந்திரங்களுடன் கார்த்த வீர்யார்ஜூனர் அருள்பாலிக்கிறார்.

    செவ்வாய் அல்லது புதன்கிழமைகளில் நம்பிக்கையுடன் பூஜை, ஹோமம் செய்து, கார்த்த வீர்யார் ஜூனரை வழிபட்டால் கடன்தொல்லை நீங்கும். இழந்த சொத்து, தொலைந்த பொருள், பிரிந்து சென்ற உறவுகள், நலிந்த உடல் ஆரோக்கியம், அடகு வைத்த நிலம், நகை அனைத்தும் கிடைப்பது திண்ணம். கலியுகத்தில் காக்கும் கடவுளாக மனிதனின் மனக்குழப்பத்தை தீர்க்கும் வகையில் அருள்பாலிக்கும் கார்த்த வீர்யர்ஜூனரை வணங்கி ஆரோக்கியம், ஐஸ்வரியம், ஆனந்தம் பெற கீழே உள்ள கலோகத்தை சொல்லுங்கள்.

    'ஓம் கார்த்த வீர்யாய வித்மஹே

    மஹா சூஷ்மாய தீமஹி தந்நோ ஸ்ர்ஜுநஹ் ப்ரசோதயாத்'.

    ×