search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Karnataka Floods"

  கர்நாடகாவில் மழை வெள்ளம், நிலச்சரிவால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாமில் இருந்த பெண்ணுக்கு திருமணம் நடந்தது. அவர் கேரளாவை சேர்ந்தவரை கரம் பிடித்தார். #KarnatakaFloods #Marriage
  பெங்களூரு:

  கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் எம்மேட்டு பகுதியை சேர்ந்த மஞ்சுளாவுக்கு கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்த ராஜீஷ் என்பவருடன் 26-ந்தேதி (அதாவது நேற்று) திருமணம் செய்ய ஏற்கனவே நிச்சயம் செய்யப்பட்டிருந்தது.

  இந்த நிலையில் குடகில் ஏற்பட்ட மழை வெள்ளம், நிலச்சரிவால், மஞ்சுளாவின் வீடு இடிந்து விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக மஞ்சுளா மற்றும் அவருடைய பெற்றோர் உயிர் தப்பினர். தற்போது அவர்கள் மக்கந்தூரில் உள்ள நிவாரண முகாமில் தஞ்சம் அடைந்துள்ளனர். ஆனால் திருமணத்துக்காக சேர்த்து வைத்திருந்த நகை-பணம், பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் திட்டமிட்டபடி திருமணம் நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்தது.

  இந்தநிலையில் நிவாரண முகாமில் இருந்தவர்களும், தன்னார்வ தொண்டு அமைப்பினரும், மாவட்ட நிர்வாகமும் சேர்ந்து மஞ்சுளாவின் திருமணத்தை திட்டமிட்டபடி நடத்த ஏற்பாடு செய்தனர். இதனை அறிந்த முதல்-மந்திரி குமாரசாமி, மஞ்சுளாவின் திருமணத்துக்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும் என்று கூறியிருந்தார்.

  இந்தநிலையில் திட்டமிட்டபடி நேற்று மடிகேரி ஓம்காரேஸ்வரா கோவிலில் மஞ்சுளா-ராஜீஷ் திருமணம் நடந்தது. இதில் நிவாரண முகாமில் இருந்த மக்கள், தன்னார்வ தொண்டு அமைப்பினர் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு புதுமண ஜோடியை வாழ்த்தினர்.

  இந்த திருமணத்தில் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவித்யா கலந்து கொண்டு புதுமண தம்பதிக்கு அரசு சார்பில் ரூ.50 ஆயிரம் நிதி உதவி வழங்கி வாழ்த்து தெரிவித்தார். 
  மழை வெள்ளத்தால் வரலாறு காணாத அளவுக்கு சேதமடைந்துள்ள குடகில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரமாகியுள்ளன. விமானப்படைக்கு சொந்தமான விமானங்களில் உணவு, மருத்துவ பொருட்கள் குடகிற்கு கொண்டுவரப்பட்டன. #Kodagurain #KodaguFlood
  குடகு:

  மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை எழில் கொஞ்சும் குடகு மாவட்டம் அமைந்துள்ளது.

  எப்போதும் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலையை கொண்ட குடகு, மலைநாடு என்று அழைக்கப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக இடைவிடாது பெய்த கனமழையால் குடகு மாவட்டம் சீர்குலைந்துள்ளது. தென்மேற்கு பருவமழையால் இந்த ஆண்டு குடகு மாவட்டத்தில் வரலாறு காணாத சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து கனமழை கொட்டியதாலும், பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதாலும், மாவட்டத்தில் மடிகேரி, விராஜ்பேட்டை, சோமவார்பேட்டை ஆகிய 3 தாலுகாக்களிலும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

  எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. தொடர் மழையாலும், நிலச்சரிவாலும் ஆயிரக் கணக்கான வீடுகள் சேதமடைந்தன. மேலும் விவசாய நிலங்களும் மழை வெள்ளத்தில் மூழ்கின. மழை வெள்ளத்துக்கு இதுவரை குடகு மாவட்டத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

  மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பதற்காக தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், ராணுவ வீரர்கள், கடலோர காவல் படையினர், தீயணைப்பு படையினர், தன்னார்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது, மீட்கப்பட்டவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குவது என அவர்கள் முழுவீச்சில் பணியாற்றி வருகிறார்கள். குடகு மாவட்டத்தில் மடிகேரி, மக்கந்தூர், ஆலேறி, சுண்டிகொப்பா, பாலூர், தொட்டகுந்துபெட்டா, ஜோடுபாலா, சம்பாஜே உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவால் சிக்கிய 4 ஆயிரத்துக்கும் அதிகமான மக்களை தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், ராணுவ வீரர்கள் மீட்டு, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

  இதற்காக குடகு மாவட்டத்தில் 41 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளனர். அங்கு தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான வசதிகளை மாவட்ட நிர்வாகமும், மாநில அரசும் செய்து கொடுத்து வருகிறது. மழையால் பாதிக்கப்பட்ட குடகு மாவட்ட மக்களுக்கு கர்நாடக மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து உதவிகள் குவிந்த வண்ணம் உள்ளன.

  குடகு மாவட்டத்தில் மழை குறைந்தாலும், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை இன்னும் திரும்பவில்லை. அங்கு 24 மணி நேரமும் மீட்பு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்த நிலையில், நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களில் 3 பேர் யார் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர்கள் மடிகேரியை சேர்ந்த பசப்பா, அவருடைய மனைவி கவுரம்மா, இந்த தம்பதியின் மகள் மோனிஷா என்பது தெரியவந்துள்ளது. பசப்பா, சுள்ளியாவில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் ஊழியராகவும், கவுரம்மா தன்னார்வலராகவும் இருந்து வந்தனர். மோனிஷா கல்லூரி மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.

  மழை குறைந்துள்ளதால், மைசூரு மாநகராட்சி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான துப்புரவு தொழிலாளர்கள் குடகு மாவட்டத்துக்கு வந்துள்ளனர். அவர்கள் அங்குள்ள குப்பைகளை அப்புறப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். தல்லாட்டமனே-சம்பாஜே சாலை முற்றிலும் சேதமடைந்துள்ளது. மடிகேரி-மங்களூரு சாலையில் 37 கிலோ மீட்டர் சேதமடைந்துள்ளது. அங்கு 50 பொக்லைன் எந்திரங்கள் மூலம் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணிகளை நேற்று பிரதாப் சிம்ஹா எம்.பி. பார்வையிட்டார். பின்னர் அவர், சாலையில் கிடந்த குப்பைகளை அகற்றினார்.  குடகு மாவட்டத்தில் நேற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், ராணுவ வீரர்கள் உள்ளிட்டோர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் சோதனையிட்டு, யாராவது சிக்கி உள்ளனரா? என்று தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளனர். இந்த நிலையில், ஆபத்தான பகுதிகள், மீட்பு குழுவினரால் செல்ல முடியாத பகுதிகளில் ஹெலிகேமராக்கள் மூலம் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. ராணுவ வீரர்கள் ஹெலிகேமரா மூலம் ஆபத்தான பகுதிகளில் யாராவது சிக்கி உள்ளனரா? என்று தேடி வருகிறார்கள். மேலும், தண்ணீர் தேங்கி உள்ள பகுதிகளில் கடலோர காவல் படையினர் படகுகள் மூலம் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

  தற்போது குடகு மாவட்டத்தில் மழை நின்றுள்ளதால், மீட்பு பணிகள் துரிதகதியில் நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் தேவசூர், கல்லூர் பகுதியில் ஆபத்தான இடங்களில் சிக்கியிருந்த 67 பேரை தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மீட்டு, நிவாரண முகாம்களில் தங்க வைத்துள்ளனர். முக்கொட்லு பகுதியில் மழை வெள்ளத்தில் சிக்கியிருந்த 38 பேர், வனப்பகுதி வழியாக தப்பி வந்து திதிமதி கிராமத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

  குடகில் இடைவிடாது கொட்டி தீர்த்த கனமழையால், மாவட்டம் முழுவதும் மொத்தம் 3,800 மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. பல்வேறு கிராமங்கள் மற்றும் நிவாரண முகாம்கள் இரவு நேரங்களில் இருளில் தான் இருக்கின்றன. இந்த நிலையில், குடகு மாவட்டத்தில் மின் பிரச்சினையை சரி செய்யும் பணியில் செஸ்காம் (சாமுண்டீஸ்வரி மின்சார வாரியம்) சார்பில் 18 குழுவினர் ஈடுபட்டுள்ளனர். அவர்கள், சாய்ந்து விழுந்த மின்கம்பங்களை அப்புறப்படுத்தி, புதிய மின்கம்பங்களை நடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

  இதுகுறித்து செஸ்காம் ஜூனியர் என்ஜினீயர் ராம்தாஸ் கூறுகையில், குடகு மாவட்டத்தில் மின்பாதையை சரி செய்யும் பணியில் ஏராளமான ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சுண்டிகொப்பா மண்டலத்தில் பணிகள் முடிவடைந்து விட்டதால், மாதாபுரா நிவாரண முகாமிற்கு மின் வினியோகம் செய்ய உள்ளோம். இந்த பகுதியில் தான் அதிகபட்சமாக 150 முதல் 200 மின்கம்பங்கள் வரை சாய்ந்துள்ளன என்றார்.

  குடகு மாவட்ட போலீசாரும் மாயமானவர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள். 3 இடங்களில் ஹெலிகேமராக்கள் மூலம் தேடி வருகிறார்கள். இந்த நிலையில், குடகு மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 9 பேர் மாயமாகி இருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. நிவாரண முகாம்களில் உள்ள மக்கள் உடைமைகளையும், உறவுகளையும் இழந்து தவித்து வருகிறார்கள். வீடுகளை இழந்தவர்களுக்கு தற்காலிகமாக அலுமினிய கொட்டகை அமைத்து கொடுக்கவும், ஒரு குடும்பத்துக்கு தலா ரூ.3,800 வழங்கவும் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

  இந்த நிலையில் குடகு மாவட்ட கலெக்டர் ஸ்ரீவித்யா நேற்று மழை சேதங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இதையடுத்து அவர், நிவாரண முகாம்களில் தங்கி உள்ள மக்களுக்கு வேறு பகுதியில் நிரந்தரமாக வீடு கட்டி கொடுக்க மாநில அரசு இடங்களை தேர்வு செய்து வருவதாகவும், இதனால் யாரும் ஆதங்கப்பட வேண்டாம் என்றும் தெரிவித்தார்.

  குடகு மாவட்டத்தில் உள்ள 41 முகாம்களிலும் நேற்று சுகாதார துறை சார்பில் மருத்துவ முகாம் நடந்தது. மழை நின்றுள்ளதால், மக்களை தொற்றுநோய்கள் எதுவும் தாக்காமல் இருக்க முகாம்களில் தங்கி உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டது. மேலும் மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

  இந்த நிலையில் நேற்று காலை மாநில சுகாதார துறை மந்திரி சிவானந்த பட்டீல், நிவாரண முகாம்களுக்கு சென்று பார்வையிட்டார். பின்னர் அவர், மக்களுக்கு அனைத்து வகையான மருத்துவ வசதிகளும் செய்து கொடுக்க வேண்டும் என்று சுகாதார துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

  இந்த நிலையில் நேற்று இந்திய விமானப்படைக்கு சொந்தமான ‘எம்.ஐ.-17’ ரக 2 விமானங்கள் நேற்று குடகிற்கு வந்தன. அந்த விமானங்கள் குசால்நகரில் உள்ள ஹாரங்கி அணை பகுதியில் வந்திறங்கின. அந்த விமானங் களில் இருந்து உணவு மற்றும் மருந்து பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் வந்தன.

  பின்னர் அதிகாரிகள், ஹெலிகாப்டர்களில் சென்று குடகு மாவட்டத்தில் மழை பாதித்த பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதனால், குடகு மாவட்டத்தில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், ராணுவ வீரர்கள், இந்திய விமான படை வீரர்கள் இணைந்து நிவாரண பணிகளையும், மீட்பு பணிகளையும் தீவிரமாக செய்து வருகிறார்கள். விமான படை ஹெலிகாப்டர்கள் மூலம் மக்களுக்கு உணவு பொட்டலங்கள் வீசப்பட்டன.   #Kodagurain #KodaguFlood
  ×