என் மலர்
நீங்கள் தேடியது "jewellery owner"
அரக்கோணம்:
அரக்கோணம் டவுன் காந்தி ரோடு பகுதியை சேர்ந்தவர் விகாஸ் (வயது 36). அதே பகுதியில் நகை கடை வைத்துள்ளார். இவர், தினமும் இரவு டிரிபில்ஸ் பேட்டை பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி செய்வார்.
வழக்கம் போல் நேற்றிரவும் உடற்பயிற்சி கூடத்திற்கு சென்றுவிட்டு 9 மணியளவில் பைக்கில் வீடு திரும்பினார். உடற்பயிற்சி கூடம் உள்ள பிள்ளையார் கோவில் தெருவில் முகத்தை கைக்குட்டை கட்டி மறைத்திருந்த மர்ம நபர்கள் 2 பேர் திடீரென விகாசின் பைக்கை வழி மறித்தனர்.
விகாசிடம் கத்தியை காட்டி மிரட்டிய கழுத்தில் இருந்த 13½ பவுன் டாலர் செயினை கழற்றி கொடுக்குமாறு கூறினர். விகாசும் பயத்தில் தங்க செயினை கழற்றி கொடுத்தார்.
செயினை பறித்த பிறகு 2 மர்ம நபர்களும், அவர்கள் வந்த பைக்கில் ஏற்றி மின்னல் வேகத்தை ஓட்டி தப்பிச் சென்று விட்டனர். இது குறித்து அரக்கோணம் டவுன் போலீசில் நகைக்கடை அதிபர் விகாஸ் நேற்றிரவே புகார் அளித்தார்.
போலீசார் உடனடியாக அந்த பகுதிக்கு விரைந்து சென்று செயின் பறிப்பு கொள்ளையர்கள் குறித்து விசாரித்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள ஒரு கண்காணிப்பு கேமராவில், செயின் பறிப்பு கொள்ளை காட்சிகள் பதிவாகியுள்ளது. ஆனால், மர்ம நபர்கள் முகத்தில் கைக்குட்டை கட்டி இருந்ததால் அடையாளம் காண முடியவில்லை.
ஆனாலும், போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.






