என் மலர்

  நீங்கள் தேடியது "Jayalalithaa memorial house"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கட்ட வேண்டிய ரூ.16.75 கோடி வரி பாக்கிக்காக அவரது போயஸ் கார்டன் இல்லம் முடக்கப்பட்டதாக ஐகோர்ட்டில் வருமானவரித்துறை தெரிவித்துள்ளது. #VedhaNilayam #Poesgarden #MadrasHC
  சென்னை:

  முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5-ந்தேதி மரணமடைந்தார்.

  அவருக்கு மெரினா கடற்கரையில் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.

  ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வீட்டை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு கடந்த 2017-ம் ஆண்டு முடிவு செய்தது. இதற்காக அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்பேரில் தமிழக வருவாய்த்துறை அதிகாரிகள் போயஸ்கார்டன் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற அளவிடும் பணிகளில் ஈடுபட்டனர்.

  இதற்கு ஜெயலலிதாவின் உறவினர்களான தீபாவும், தீபக்கும் எதிர்ப்பு தெரிவித்தனர். போயஸ் கார்டன் இல்லத்தில் தங்களுக்கு உரிமை இருப்பதாக கோரி அவர்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

  இந்த நிலையில் போயஸ் கார்டன் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவது தொடர்பாக அந்த பகுதியில் வசிப்பவர்களிடம் அரசு சார்பில் கருத்து கேட்கப்பட்டது. அந்த பகுதியை சேர்ந்தவர்கள் ஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து கருத்து கூறினார்கள்.

  இதற்கிடையே ஜெயலலிதாவின் வீட்டை நினைவு இல்லமாக மாற்றக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐகோர்ட்டில் டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்தார்.

  நீதிபதிகள் வினீத் கோத்தாரி, அனிதா சுமந்த் ஆகியோர் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். கடந்த முறை இந்த வழக்கு விசாரணை நடந்தபோது, ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை நினைவு இல்லமாக மாற்றுவது குறித்தும், அவர் ஏதாவது வரி பாக்கி வைத்துள்ளாரா? என்பது குறித்தும் விளக்கம் அளிக்க வருமான வரித்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

  அதற்கு வருமான வரித்துறை சார்பில் இன்று சென்னை ஐகோர்ட்டில் பதில் அளிக்கப்பட்டது. வருமான வரித்துறை துணை ஆணையர் ஜி.சோபா அந்த பதிலை தாக்கல் செய்தார். அதில் கூறி இருப்பதாவது:-

  ஜெயலலிதா கடந்த 1990-91ம் நிதியாண்டு முதல் 2011-12ம் நிதியாண்டு வரை சொத்து வரி பாக்கியாக ரூ.10 கோடியே 12 லட்சத்து ஆயிரத்து 407 வைத்துள்ளார். 2005-06ம் ஆண்டு முதல் 2011-12ம் ஆண்டு வரை வருமான வரி பாக்கியாக ரூ.6 கோடியே 62 லட்சத்து 97 ஆயிரத்து 720 வைத்துள்ளார்.


  இதற்காக அவரது போயஸ் கார்டன் வீடு, அண்ணா சாலையில் உள்ள பார்சன் காம்ளக்சில் உள்ள தரை தளம் ஆகியவை கடந்த 2007-ம் ஆண்டு மார்ச் 13-ந்தேதி முடக்கம் செய்யப்பட்டது. 2013-ம் ஆண்டு மார்ச் 13ந்தேதி செயின் மேரிஸ் சாலையில் உள்ள அவரது சொத்து முடக்கம் செய்யப்பட்டது.

  ஐதராபாத், ஸ்ரீநகர் காலனியில் உள்ள வீடு கடந்த 2007-ம் ஆண்டு ஜூலை 31-ந்தேதி முடக்கம் செய்யப்பட்டது.

  இவ்வாறு வருமான வரித்துறை பதிலில் கூறப்பட்டுள்ளது.

  வருமான வரித்துறை சார்பில் ஆஜரான வக்கீல் சீனிவாசன் வாதாடுகையில், ‘ஜெயலலிதா செலுத்த வேண்டிய வரி பாக்கியை தமிழக அரசு செலுத்தி விட்டால், அவர் வாழ்ந்த போயஸ் கார்டன் வீட்டை நினைவு இல்லமாக மாற்றுவதற்கு எங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை’ என்று கூறினார்.

  அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல், கூறுகையில், ‘ஜெயலலிதாவின் சொத்து வரி மற்றும் வருமான வரிப் பாக்கியை தமிழக அரசு செலுத்த தயாராக உள்ளது’ என்றார்.

  உடனே நீதிபதிகள் குறுக்கிட்டு, ‘ஜெயலலிதா என்ற தனி நபரின் வருமான வரி பாக்கியை தமிழக அரசு எப்படி செலுத்த முடியும்?’ என்று கேள்வி எழுப்பினார்கள்.

  அதற்கு அட்வகேட் ஜெனரல் விளக்கம் அளித்து கூறியதாவது:-

  ‘ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீடு மற்றும் நிலத்தை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு ஆர்ஜிதம் செய்யும். அப்போது அந்த சொத்துக்குரிய மதிப்பு தற்போதைய சந்தை மதிப்பீட்டு அளவில் கணக்கிடப்படும்.

  அந்த தொகை ஜெயலலிதாவின் வாரிசுகளுக்கு வழங்கப்படும். அந்த தொகையில் இருந்து இந்த வரியை தமிழக அரசு செலுத்தும்.

  மேலும், போயஸ் கார்டன் வீட்டை தங்களுக்கு வேண்டும் என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, தீபக் ஆகியோரும் வழக்கு தொடர்ந்துள்ளனர். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், வாரிசுகளான அவர்கள் வரி பாக்கியை செலுத்துவார்கள்’.

  இவ்வாறு அட்வகேட் ஜெனரல் பதில் அளித்தார்.

  இதையடுத்து வருமான வரித்துறையின் அறிக்கையை படித்து பார்த்த நீதிபதிகள் கூறியதாவது:-

  1990 முதல் 2012-ம் ஆண்டு வரையிலான ஜெயலலிதாவின் சொத்து வரி பாக்கி 2005-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரையிலான வருமான வரி பாக்கித் தொகை மட்டுமே அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  அதன்பின்னர் வந்த நிதியாண்டில் அவர் வரி செலுத்தி விட்டாரா? என்று தெரியவில்லை. இந்த அறிக்கை அரைகுறையாக உள்ளது. எனவே, தெளிவான அறிக்கையை வருமான வரித்துறை தாக்கல் செய்ய வேண்டும்.

  அதேபோல, தமிழக அரசும் இந்த வரி பாக்கி செலுத்துவது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். விசாரணையை 2 வாரத்துக்கு தள்ளிவைக்கிறோம்.

  இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். #VedhaNilayam #Poesgarden #Jayalalithaa #MadrasHC
  ×