search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Information Technology Park"

    • தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
    • கோவை தகவல் தொழில்நுட்ப பூங்கா பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது.

    நாகர்கோவில்:

    அமைச்சர் மனோதங்கராஜ் இன்று நாகர்கோவிலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இந்த ஆண்டு மென்பொருள் ஏற்றுமதியில் நாம் சாதனை படைத்துள்ளோம். ரூ. 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி மதிப்பிலான மென்பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது. இது இந்திய அளவில் 3-வது இடம் ஆகும்.

    வரும் காலங்களில் இது கண்டிப்பாக மேலும் அதிகரிக்கும். 2030-ம் ஆண்டு ஒரு டிரில்லியன் டாலர் அளவிற்கு பொருளாதாரத்தை எட்ட வேண்டும் என்ற கணக்கில் முதலமைச்சர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

    ஐ.டி. துறையை பொறுத்தவரையில் 100 டிரில்லியன் டாலர் அளவிற்கு எட்ட வேண்டும் என்ற அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறோம். தொடர்ந்து அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

    தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தற்போது 6 லட்சத்து 15 ஆயிரம் சதுர அடியில் கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. எந்தெந்த இடங்களுக்கு தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் தேவையோ அங்கு அமைக்கப்படும் சோளிங்கநல்லூர், திருச்சி, கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பணிகள் நடைபெற்று வருகிறது.

    கோவை தகவல் தொழில்நுட்ப பூங்கா பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. நாகர்கோவிலில் தகவல் தொழில் நுட்ப பூங்கா அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. ஐ.டி.த்துறையை பொறுத்தவரையில் எதிர்காலத்திற்கு தேவையான வளர்ந்து வரும் தொழில் நுட்பங்கள் இன்னும் அதிகம் தேவைப்படுகிறது. இதனால் வேலை வாய்ப்புகள் அதிகம் பெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. வேலை வாய்ப்பு பெருகும் சூழ்நிலைகள் தான் தமிழ்நாட்டில் இன்று உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நீலகிரி மாவட்டத்தில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணை தலைவர் கூறினார்.
    கோத்தகிரி:

    நாட்டு மக்களின் குறைகளை அறியும் வகையில் அவர்களிடம் கருத்து கேட்கும் புதிய திட்டத்தை பிரதமர் மோடி அறிமுகப்படுத்தி உள்ளார். அதன்படி நாடு முழுவதும் அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும் மக்கள் தங்களது குறைகள் அல்லது கருத்துகளை படிவத்தில் பூர்த்தி செய்து அளிக்கும் வகையில் பெட்டிகள் வைக்கப்படுகின்றன. இந்த திட்ட தொடக்க விழா கோத்தகிரியில் நடைபெற்றது. காமராஜர் சதுக்கத்தில் உள்ள பா.ஜனதா மாவட்ட அலுவலகத்தில் நடந்த விழாவுக்கு மாவட்ட தலைவர் கேப்பிடல் போஜன் தலைமை தாங்கினார். மணிகண்டன் வரவேற்றார். செயற்குழு உறுப்பினர்கள் அன்பரசன், கணேசன். முருகன், ரெட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணை தலைவர் முருகன் கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நீலகிரியில் தாழ்த்தப்பட்டோர் வசிக்கும் கிராமங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. அதில் சேரம்பாடி பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது. பந்தலூரில் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. 36 சுய உதவி குழுக்களுக்கு ரூ.2½ கோடி கடன் வழங்கப்பட்டு உள்ளது. மத்திய அரசின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் நீலகிரியில் இதுவரை 1 லட்சம் பேர் இணைந்து உள்ளனர். விடுபட்டவர்களை இணைக் கும் பணி நடந்து வருகிறது. இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய மக்களுக்கு 800 வீடுகள் கட்டும் திட்டம் நிறைவேற்றப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. தாழ்த்தப்பட்டோர் தொழில் தொடங்க ரூ.493 கோடியில் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டு, அதற்கான பயிற்சி மற்றும் கடன் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

    விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படுவது, நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு வாக்குக்காக பணம் வழங்குவது போல உள்ளது என்று முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் குற்றம் சாட்டி உள்ளார். இது தவறான பிரசாரம். விவசாயிகளுக்காக கொண்டு வரப்பட்ட இந்த திட்டம் உடனடியாக நிறைவேற்றப்பட்டு, முதற்கட்டமாக தலா ரூ.2 ஆயிரம் அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இது நாடு முழுவதும் விவசாயிகளின் பிரதிநிதிகளை கலந்து ஆலோசித்து கொண்டு வரப்பட்ட சிறந்த திட்டம். இந்துஸ்தான் பிலிம் தொழிற்சாலையை புனரமைப்பது, பச்சை தேயிலைக்கு போதுமான குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்வது குறித்த வாக்குறுதி பா.ஜனதா தேர்தல் அறிக்கையில் இடம்பெறும்.

    படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கில் நீலகிரியில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பல்நோக்கு சிறப்பு ஆஸ்பத்திரி அமைக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும். கோத்தகிரியில் முத்ரா திட்டத்தின் கீழ் கடன் வழங்க வங்கிகள் தயங்கி வருவதாக கூறப்படுகிறது. எவ்வித பிணையும் இன்றி முத்ரா திட்டத்தின் கீழ் வங்கிகள் கடன் வழங்க வேண்டும். கடன் வழங்காத வங்கி மேலாளர்கள் மீது புகார் வந்தால், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    இதைத்தொடர்ந்து கோத்தகிரியில் தாழ்த்தப்பட்டோர் வசிக்கும் கேம்ப்லைன், இடுக்கொரை, அருள்நகர் ஆகிய பகுதிகளில் ஆணைய துணை தலைவர் முருகன் சென்று மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    மேலும் மார்க்கெட் பகுதியில் ஆய்வு செய்தார். அப்போது தாசில்தார் ரவிக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் கோல்டி சாராள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
    ×