search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "hadiya"

    இஸ்லாமிய வாலிபரை திருமணம் செய்துகொள்ள மதம்மாறி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கை சந்தித்து வெற்றிகண்ட கேரளாவை சேர்ந்த கல்லூரி மாணவி ஹாதியாவின் தந்தை பா.ஜ.க.வில் இணைந்தார். #Hadiya #Hadiyafather #KMAsokan
    திருவனந்தபுரம்:

    கேராளாவைச் சேர்ந்த இளம்பெண் ஹாதியா இஸ்லாமிய மதத்திற்குமாறி தனது காதலன் ஷபீன் ஜகான் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், ஜகானுக்கு தீவிரவாத பின்புலம் இருப்பதால் இந்த திருமணத்தை ரத்து செய்ய வேண்டும், ஹாதியாவை தனது வசம் ஒப்படைக்க வேண்டும் என ஹாதியாவின் தந்தை நீதிமன்றத்தை நாடினார்.

    இந்த வழக்கை விசாரித்த கேரள ஐகோர்ட் ஹாதியாவின் திருமணம் செல்லாது என தீர்ப்பளித்தது. ’24 வயதுப்பெண் மனதளவில் உறுதியாக இருக்க வாய்ப்பில்லை எனவே அவரை எளிதாக ஏமாற்றலாம்’ என அந்த தீர்ப்பில் நீதிபதிகள் பரபரப்பு கருத்து தெரிவித்திருந்தனர்.

    இதற்கிடையே, ஜகானின் தீவிரவாத பின்புலம் குறித்த குற்றச்சாட்டை தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வந்தது.

    கேரள ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து ஹாதியாவின் கணவர் ஜகான் சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்த வழக்கில் தலைமை நீதிபதி தீபக் மிஷ்ரா தலைமையிலான அமர்வு முக்கிய தீர்ப்பை வழங்கியது.

    ஹாதியா படித்து வரும் சேலம் கல்லூரியின் முதல்வர் அவருக்கு காப்பாளராக இருப்பார் என அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது.

    மேலும், ஹாதியாவின் திருமணம் செல்லாது என கேரள ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவை கடந்த மார்ச் மாதம் சுப்ரீம் கோர்ட் ரத்து செய்தது. தங்களது வாழ்க்கைத் துணையை தேட பெண்களுக்கு முழு உரிமை உள்ளதாக அந்த தீப்பில் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

    இந்த சம்பவங்கள் எல்லாம் முடிந்து சில மாதங்கள் கடந்துள்ள நிலையில் ஹாதியாவின் தந்தையான அசோகன் மற்றும் அவரது குடும்பத்தார் முன்னர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தனர்.

    கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்த கட்சியில் இருந்து விலகி வைக்கம் பகுதியில் நடைபெற்ற பா.ஜ.க. நிகழ்ச்சி ஒன்றில் கேரள மாநில பா.ஜ.க. தலைவர் பி.கோபால கிருஷ்ணன் முன்னிலையில் தங்களை பா.ஜ.க.வில் இணைத்து கொண்டனர். அவர்களுடன் அசோகன் வசிக்கும் டி.வி.புரம் கிராமத்தை சேர்ந்த சுமார் 50 பேரும் பா.ஜ.க.வில் இணைந்தனர்.


    இந்த திடீர் முடிவு குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் ராணுவ வீரரான அசோகன், ’எங்களுக்காக கம்யூனிஸ்ட் கட்சி எதுவுமே செய்யவில்லை. என்னுடைய மகள் திருமணம் தொடர்பான சட்டப் போராட்டத்தில் எங்களுக்கு துணை நிற்கவில்லை. மாறாக, எங்களுக்கு எதிரான தரப்பினரை அவர்கள் ஆதரித்தனர்’ என குறிப்பிட்டுள்ளார். #Hadiya #Hadiyafather #KMAsokan #AsokanjoinsBJP
    ×