search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gopalkrishna Gandhi"

    • ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக எதிர்க்கட்சிகள் நடத்திய கூட்டத்தில் பொது வேட்பாளர் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
    • எதிர்க்கட்சி தலைவர்கள் நாளை கூடி ஒருமித்த வேட்பாளரை முடிவு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புதுடெல்லி:

    இந்தியாவில் ஜூலை 18ம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவதற்கு முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகளியில் மூத்த தலைவர்கள் இறங்கினர். மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில், 17 எதிர்க்கட்சிகள் டெல்லியில் கடந்த 15-ம் தேதி ஆலோசனை நடத்தின.

    அப்போது தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவாரை வேட்பாளராக நிறுத்த திட்டமிடப்பட்டது. ஆனால் அவர் தனக்கு விருப்பம் இல்லை என தெரிவித்துவிட்டார். இதையடுத்து, தேசிய மாநாடு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லாவை நிறுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஆனால், அவரும் தான் போட்டியிடப் போவது இல்லை எனத் தெரிவித்தார்.

    இதையடுத்து, மகாத்மா காந்தியின் பேரனும் மேற்கு வங்காள மாநில முன்னாள் கவர்னருமான கோபாலகிருஷ்ண காந்தியைபோட்டியிட வைக்கலாமா? என்பது குறித்து எதிர்க்கட்சிகள் ஆலோசனை நடத்தியதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அந்தக் கூட்டத்தில் பொது வேட்பாளர் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. கோபாலகிருஷ்ண காந்தி போட்டியிட வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன.

    இந்த நிலையில், கோபாலகிருஷ்ண காந்தி, எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக போட்டியிட மறுப்பு தெரிவித்துவிட்டார். தன்னை விட சிறப்பாக செயல்படும் ஒருவரை பரிசீலனை செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

    இதுதொடர்பாக கோபாலகிருஷ்ண காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், "மிக உயர்ந்த பதவிக்கு எனது பெயர் பரிசீலிக்கப்பட்டதற்கு நன்றி. எனினும், அனைத்து கட்சிகள் இடையேயும் ஒருமித்த கருத்தை ஏற்படுத்தும் வேட்பாளர் ஒருவரை எதிர்க்கட்சிகள் நிறுத்த வேண்டும்." என குறிப்பிட்டுள்ளார்.

    கோபாலகிருஷண காந்தி போட்டியிட மறுத்த நிலையில், எதிர்க்கட்சி தலைவர்கள் நாளை கூடி ஒருமித்த வேட்பாளரை முடிவு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்.
    • புதிய குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் 18-ந்தேதி நடக்கிறது.

    புதுடெல்லி :

    நாட்டின் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் 18-ந்தேதி நடைபெறவுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பொது வேட்பாளரை நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், மேற்கு வங்காள முன்னாள் கவர்னர் கோபாலகிருஷ்ண காந்தியை ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக நிறுத்துவதற்கு எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளதாகவும், இதுதொடர்பாக ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளதாகவும் நேற்று தகவல் வெளியானது.

    இதுதொடர்பாக சில எதிர்க்கட்சி தலைவர்கள் கோபாலகிருஷ்ண காந்தியை தொலைபேசியில் தொடர்புகொண்டு வலியுறுத்தியதாகவும், அப்போது அவர் தனக்கு யோசிப்பதற்கு சிறிது காலஅவகாசம் வேண்டும் என்றும், இன்று (புதன்கிழமை) தனது முடிவை கூறுவதாக தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

    அவருடன் பேசிய தலைவர்கள் தங்கள் கோரிக்கைக்கு அவரது பதில் ஆக்கப்பூர்வமாக இருந்ததாக கூறினர். 77 வயதாகும் கோபாலகிருஷ்ண காந்தி, மகாத்மா காந்தி-ராஜாஜியின் பேரன் ஆவார். கடந்த 2017-ம் ஆண்டு துணை ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்ட கோபாலகிருஷ்ண காந்தி, அப்போது வெங்கையா நாயுடுவிடம் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

    மேற்கு வங்காள மாநில முன்னாள் கவர்னர் கோபாலகிருஷ்ண காந்திக்கு ‘ராஜீவ் காந்தி சத்பவனா’ விருதை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வழங்கினார். #GopalkrishnaGandhi #RajivSadbhavnaAward
    புதுடெல்லி:

    அமைதி, மத நல்லிணக்கம் ஆகியவற்றுக்கு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஆற்றிய பணியை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் ‘ராஜீவ் காந்தி சத்பவனா’ விருது வழங்கப்பட்டு வருகிறது.

    கடந்த 2016-2017-ம் ஆண்டுக்கான இவ்விருதுக்கு மேற்கு வங்காள மாநில முன்னாள் கவர்னரும், மகாத்மா காந்தியின் பேரனுமான கோபாலகிருஷ்ண காந்தி தேர்வு செய்யப்பட்டார். ராஜீவ் காந்தி பிறந்தநாளையொட்டி, நேற்று டெல்லி ஜவகர் பவனில் இவ்விருது வழங்கும் விழா நடைபெற்றது.

    நாடாளுமன்ற காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், விருது கமிட்டியின் தலைவர் கரன்சிங் ஆகியோர் கோபாலகிருஷ்ண காந்திக்கு விருது வழங்கினர்.

    இது, பாராட்டு பத்திரமும், ரூ.10 லட்சம் ரொக்கப்பரிசும் கொண்டது ஆகும். #GopalkrishnaGandhi #RajivSadbhavnaAward  #tamilnews 
    மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பெயரில் வழங்கப்படும் ராஜீவ் காந்தி சத்பாவனா விருதுக்கு மகாத்மா காந்தியின் பேரனும், மேற்கு வங்காளத்தின் முன்னாள் கவர்னருமான கோபாலகிருஷ்ண காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார். #RajivGandhiSadbhavanaAward #GopalkrishnaGandhi
    புதுடெல்லி:

    மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள அறக்கட்டளை சார்பாக ஆண்டுதோறும் ராஜீவ் காந்தி சத்பாவனா விருது வழங்கப்படுவது வழக்கம். சிறந்த சமூக தொண்டு செய்பவர்களுக்கு இந்த விருது  வழங்கப்படும்.

    இதற்கு முன்னதாக அன்னை தெரசா, உஸ்தாத் பிஸ்மில்லாஹ் கான், முகமது யூனுஸ், லதா மங்கேஷ்கர் போன்ற பல சிறப்பு மிக்கவர்களுக்கு இந்த விருது அளிக்கப்பட்டது.

    இந்த ஆண்டு ராஜீவ் காந்தி சத்பாவனா விருது வழங்குவது குறித்தான ஆலோசனைக் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. அந்த ஆலோசனைக் கூட்டத்தில் மகாத்மா காந்தியின் பேரனும், மேற்கு வங்காளத்தின் முன்னாள் கவர்னருமான கோபாலகிருஷ்ண காந்திக்கு, ராஜீவ் காந்தி சத்பாவனா விருது வழங்குவதாக ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. அவரது ஒப்பற்ற சமூக சேவையை கருத்தில் கொண்டு இந்த விருது வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    24-வது முறை வழங்கப்படும் ராஜீவ் காந்தி சத்பாவனா விருதுக்கான நிகழ்ச்சி ஆகஸ்ட் 20-ம் தேதி ஜவஹர்பவனில் கோலாகலமாக நடைபெறும் எனவும் தெரியவந்துள்ளது. #RajivGandhiSadbhavanaAward #GopalkrishnaGandhi
    ×