search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Flying squad seized"

    திருச்சி, புதுக்கோட்டை, கரூரில் பறக்கும் படையினர் சோதனையில் ரூ.4 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. #ParliamentElection
    குளித்தலை:

    பாராளுமன்ற தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதையடுத்து கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள கீழகுறப்பாளையத்தில் உள்ள திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் பறக்கும் படை அதிகாரி ஜெயபிரகாஷ் தலைமையில், சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மதியழகன் தேர்தல் பறக்கும் படை குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது திருச்சியில் இருந்து வந்த ஒரு காரை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர். சோதனையில் அதில் வெளிநாட்டு பணம் 36 யூரோ நோட்டுகள் இருந்தது (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்து 832) கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கான உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாதால் காரில் வந்த தம்பதியிடம் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், காரில் வந்தவர் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த அலஞ்சோ (வயது 35) என்பதும், இலங்கையை பூர்வீகமாக கொண்ட இவர் தற்போது பிரான்ஸ் நாட்டில் உள்ள ஒரு உணவகத்தில் வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது. தற்போது வெளிநாட்டில் இருந்து தமிழகத்துக்கு வந்திருக்கும் அலஞ்சோ தனது மனைவி மற்றும் குழந்தையுடன் திருச்சியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்து விட்டு, ஈரோடு மாவட்டம், காங்கேயத்தில் உள்ள தேவாலயத்திற்கு சென்று கொண்டிருந்தது தெரியவந்தது.

    வெளிநாட்டு பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து குளித்தலை கோட்டாட்சியரும், உதவி தேர்தல் அலுவலருமான லியாகத்திடம் ஒப்படைத்தனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட வெளிநாட்டு பணத்திற்கு உரிய ஆவணங்களை ஒப்படைத்தால் அவற்றை திருப்பி ஒப்படைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருச்சி குழுமணி சாலை லிங்கநகர் சோதனைச்சாவடியில் பறக்கும் படையை சேர்ந்த தாசில்தார் வசந்தா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் திருக்குமரன் மற்றும் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது ஏகிரிமங்கலம் என்ற இடத்தில் வந்த ஒரு காரை மறித்து சோதனையிட்டனர். அந்த காரில் திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை பகுதியை சேர்ந்த சுந்தர்ராஜ், அவரது மனைவி பிரசன்ன குமாரி ஆகியோர் இருந்தனர். அவர்கள் ரூ.1 லட்சம் வைத்து இருந்தனர். அந்த பணத்திற்கு உரிய ஆவணங்களை அவர்கள் சமர்ப்பிக்காததால் அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த பணத்தை திருச்சி மேற்கு தாசில்தார் ராஜவேலுவிடம் ஒப்படைத்தனர்.

    சுந்தர்ராஜ்-பிரசன்னகுமாரி தம்பதி, அதிகாரிகளிடம் தங்களுடைய மகளுக்கு வருகிற 31-ந்தேதி காதணி விழா நடத்த இருப்பதால் துணிமணிகள் எடுப்பதற்காக இந்த பணத்தை கொண்டு செல்வதாக கூறினர். காதணி விழா அழைப்பிதழையும் அதிகாரிகளிடம் காட்டினர். ஆனாலும் அதிகாரிகள் பறிமுதல் செய்த பணத்தை திரும்ப வழங்கவில்லை. இதனால் அந்த தம்பதியினர் காதணி விழாவுக்காக வைத்திருந்த பணத்தையும் பறிமுதல் செய்து விட்டார்களே? என்ற வேதனையுடன் புலம்பியபடி சென்றனர்.

    இதுபற்றி அதிகாரிகள் கூறுகையில், சொந்த காரணங்களுக்காக பணத்தை எடுத்து செல்பவர்கள் அந்த பணம் எங்கிருந்து வந்தது என்பதற்கான ஆதாரங்களை கையில் வைத்து இருக்க வேண்டும். அப்படி வைத்து இருந்தால் தான் பணம் பறிமுதல் நடவடிக்கைகளில் இருந்து தப்ப முடியும் என்றனர்.

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கூழையன்விடுதியில் பறக்கும் படையை சேர்ந்த வட்டார கல்வி அதிகாரி நடராஜன் தலைமையில் போலீசார், அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் ஒரு காரில் இருந்த ஒரு பொருளை, லாரிக்கு மாற்றினர். இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று சோதனையிட்டனர். லாரியில் சோதனையிட்டபோது அதில் ரூ.1 லட்சத்து 48 ஆயிரம் இருந்தது. அதற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். நெல் வியாபார பணத்தை வைத்திருந்ததாக லாரி டிரைவர் தெரிவித்தார். இருப்பினும் உரிய ஆவணங்களை ஒப்படைத்து பணத்தை பெற்று செல்லலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். #ParliamentElection


    ×