search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "First Saturday"

    • திருப்பூர் வீரராகவப்பெருமாள் கோவிலில் அதிகாலையில் மகா திருமஞ்சனமும், அலங்கார பூஜையும் நடைபெற்றது.
    • ஸ்ரீவீரராகவப் பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி, திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    திருப்பூர் :

    புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி திருப்பூர் மாவட்டத்தில் பெருமாள் கோவில்களில் இன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. திருப்பூர் வீரராகவப்பெருமாள் கோவிலில் அதிகாலையில், ஸ்ரீதேவி பூமிதேவி தாயார் சமேத வீரராகவப்பெருமாளுக்கு மகா திருமஞ்சனமும், அலங்கார பூஜையும் நடைபெற்றது. அடுத்தாக, ஸ்ரீவீரராகவப் பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி, திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து கோவில் கொடிமரம் அருகே கருட வாகனத்துடன் பக்தர்களுக்கு சேவைசாதித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விரதம் இருக்கும் பக்தர்களுக்கு அன்ன பிரசாதம் வழங்கப்பட்டது.

    அவிநாசி அருகே மொண்டிபாளையம் ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவில், தாளக்கரை ஸ்ரீ லட்சுமி நரசிங்க பெருமாள் கோவில் ஆகிய கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. காங்கேயம் அருகே உள்ள பெருமாள் மலையில் ஸ்ரீபிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. இங்கு புரட்டாசி மாதத்தின் அனைத்து சனிக்கிழமைகளிலும் ஏழுமலையானுக்கு சிறப்பு பூஜை செய்யப்படும். புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருப்போர் இங்கு வந்து வழிபாடு செய்வது வழக்கம். இந்நிலையில், புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமையான இன்று பிரசன்ன வெங்கட பெருமாளுக்கு மதியம் 12 மணிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை செய்யப்பட்டது. சிறப்பு பூஜையில் திருப்பூர், காங்கேயம், சிவன்மலை, ஊதியூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு தரிசனம் செய்தனர்.

    திருப்பூர் அருகே அவிநாசிபாளையத்தில் ராமசாமி கோவில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் மட்டும் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. திருப்பூர் மாவட்டம் மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர். இன்று புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி ராமசாமி கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    பக்தர்களின் வசதிக்காக அவிநாசிபாளையம் - பொங்கலுார் ரோட்டில் தற்காலிக பஸ் நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. காலை 5மணி முதல் இரவு 7 மணி வரை திருப்பூர் கோவில்வழி பஸ் நிலையம், திருப்பூர் பழைய பஸ் நிலையம், காங்கயம், பல்லடம், தாராபுரம் பஸ் நிலையத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.

    திருப்பூர் மற்றும் அவிநாசியில் இருந்து தாளக்கரை லட்சுமிநரசிம்மர் கோவில், மொண்டிபாளையம் வெங்கடேச பெருமாள் கோவிலுக்கும் சிறப்பு பஸ் இயக்கப்பட்டது. உடுமலை நெல்லுக்கடை வீதியில் உள்ள சவுந்தரராஜ பெருமாள் கோவில்,உடுமலை பெரிய கடை வீதியில் உள்ள நவநீதகிருஷ்ணன் கோவில், ஊத்துக்குளி ரோடு தென்திருப்பதி கோவில் உள்ளிட்ட பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. 

    ×