search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Devar Guru Puja"

    • தேவர் குருபூஜை விழாவையொட்டி உள்ளூர், பிற மாவட்டங்களில் இருந்து 250 பஸ்கள் கூடுதலாக இயக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
    • முத்துராமலிங்கத் தேவர் 115-வது பிறந்த நாள் விழா மற்றும் 60-வது குருபூஜை விழாவையொட்டி முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடந்தது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கத்துரை முன்னிலையில் பசும்பொன் முத்துராம லிங்கத் தேவர் 115-வது பிறந்த நாள் விழா மற்றும் 60-வது குருபூஜை விழாவையொட்டி மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடந்தது. இதில் கலெக்டர் பேசியதாவது:-

    பசும்பொன் தேவர் நினைவிடம் மற்றும் சுற்றுப்புறப்பகுதியை காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்க வருகிற 28-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை போதிய எண்ணிக்கையிலான கண்காணிப்பு காமிராக்கள் அமைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும். சட்டம்-ஒழுங்கை கண்காணிக்க 'நிர்வாக நடுவர்கள்' நியமனம் செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிர்வாக நடுவர்கள் சட்டம்-ஒழுங்கு ஏற்படும் சமயத்தில் தொடர்பு கொள்ள வேண்டிய காவல் துறை அலுவலர்கள் பெயர் மற்றும் தொலைபேசி எண்களைத் தெரிவிக்க வேண்டும்.

    பொது மக்களின் பயன்பாட்டிற்காக ஏற்பாடு செய்யப்படும் அரசு பஸ்களில் ஒவ்வொரு பஸ்சிலும் ஒரு போலீசாரை நியமிக்க வேண்டும்.

    தனி நபர்கள் அமைக்கும் அன்னதான பந்தலின் உறுதித்தன்மையை சரி பார்க்க வேண்டும். நினைவி டத்தின் மேற்குப்புறம் முக்கிய பிரமுகர்கள் வரும் வழியில் வாகனங்கள் நிறுத்த ஏதுவாக மரத்தாலான தடுப்புவேலி அமைக்க வேண்டும்.

    கோட்டை மேடு வளைவு முதல் நினைவிடத்தில் உள்ள வளைவு வரை தற்காலிக மின்விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும். குருபூஜை விழாவிற்கு வரும் மக்கள் காலணிகள் அகற்றுவதற்கு ஏதுவாக பந்தல் அமைக்க வேண்டும். நுழைவு பகுதிகளிலிந்து வெளிப்பகுதி வரை சாலை செப்பனிடும் பணி அனைத்தும் விரைவில் முடித்திருக்க வேண்டும்.

    பசும்பொன் கிராமத்தில் மட்டும் 27 சின்டெக்ஸ், 30 நகரும் கழிப்பறைகள், 30 குப்பைத் தொட்டிகள் அமைக்க வேண்டும். 90 துப்புரவுப் பணியாளர்கள் பணியில் அமர்த்த வேண்டும். 29 மற்றும் 30-ந் தேதிகளில் 200 மற்றும் 250 பஸ்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளூர் மற்றும் மற்ற மாவட்டங்களில் இருந்து கூடுதலாக இயக்க வேண்டும்.

    சுமார் 19 இடங்களில் ஆம்புலன்ஸ் மருத்துவக் குழுவுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும். 2 இரு சக்கர வாகன ஆம்புலன்ஸ் தயார் நிலையில் இருக்க வேண்டும். பரமக்குடி அரசு மருத்துவமனை மற்றும் பார்த்திபனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணிநேரமும் மருத்துவர் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

    மின் கம்பிகளில் பழுது ஏற்பட்டால், அவைகளை உடனே சரிசெய்ய போதுமான பணியாளர்களை அமர்த்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். முக்கிய இடங்களில் ஜெனரேட்டர், மற்றும் பாதுகாப்பு விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பொதுமக்கள் பயன்படுத்தும் பொதுக்கழிப்பறைகள் அருகில் கண்டிப்பாக மின்சார விளக்குகள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். பசும்பொன் கிராமத்தில் அன்னதானம் வழங்கும் இடங்களில் வழங்கப்படும் அன்னதானத்தை பரிசோதித்து சான்றிதழ்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அனைத்து முன்னேற்பாடு பணிகளையும் அலுவலர்கள் நாளை (27-ந் தேதி)க்குள் முடிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பிரவீன்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், பரமக்குடி வருவாய் கோட்ட உதவி ஆட்சியர் அப்தாப் ரசூல், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சேக் மன்சூர், ராமநாதபுரம் கோட்டாட்சியர் மரகதநாதன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் பாஸ்கரன், அருண் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • தேவர் குருபூஜை விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயத்தில் வெற்றி பெறுபவர்களுக்கு ரூ. 10 லட்சம் பரிசு வழங்கப்படும்.
    • இந்த தகவலை கடலாடி ஒன்றிய குழு தலைவர் தெரிவித்துள்ளார்.

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 115-ம் ஆம் ஆண்டு ஜெயந்தி விழா, 60-வது குருபூஜை விழா, 34-ம் ஆண்டு முளைப்பாரி உற்சவ விழா, ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தின் 5-ம் ஆண்டு வருஷாபிஷேகம் ஆகிய விழாக்களை முன்னிட்டு ஆப்பநாடு மாட்டுவண்டி பந்தய குழுவினர் நடத்தும் ரூ. 10 லட்சம் பரிசுத்தொகையுடன் பெரிய மாடு, நடுமாடு, சின்ன மாடு பந்தயம் நடைபெறுகிறது.

    இது தொடர்பாக கடலாடி ஒன்றியக்குழு தலைவர் முத்துலட்சுமி முனியசாமி பாண்டியன் கூறியதாவது:-

    வருகிற (27-ந் தேதி) கடலாடியில் மாட்டு வண்டி பந்தயம் நடைபெறுகிறது.

    இந்த நிகழ்ச்சிக்கு ராமநாதபுரம் தி.மு.க. மாவட்ட செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் தலைமை தாங்குகிறார். கடலாடி தேவர் உறவின்முறை தலைவர் முனியசாமி முன்னிலை வகிக்கிறார். பெரிய மாடு பந்தயத்தை முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி தொடங்கி வைக்கிறார். நடு மாடு பந்தயத்தை ஆப்பநாடு மறவர் சங்கத்தலைவர் சூரி முனியசாமி தொடங்கி வைக்கிறார்.

    சின்ன மாடு பந்தயத்தை முன்னாள் ஆப்பநாடு மறவர் சங்கத்தலைவர் கீழத்தூவல் ராமசாமி தொடங்கி வைக்கிறார். பெரிய மாடு, நடமாடு, சின்ன மாடு பந்தயத்தில் கொடி வாங்கும் சாரதிக்கு கிடாய் பரிசை ரேக்ளா ரேஸ் முன்னாள் மாநில தலைவர் மோகன் சாமி குமார் வழங்குகிறார்.

    பெரிய மாடு, நடமாடு, சின்ன மாடு பந்தயத்தில் கொடி கொடுக்கும் சாரதிக்கு கிடாய் பரிசை ராமேசுவரம் துணை சேர்மன் தட்சிணாமூர்த்தி வழங்குகிறார். விழாவை முன்னிட்டு வெற்றி பெறும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு நினைவுப் பரிசை கடலாடி அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் முனியசாமி பாண்டியன் வழங்குகிறார். விழாவையொட்டி பொது அன்னதானம் நடைபெறுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தேவா் குருபூஜை விழாவில் பங்கேற்க வருகிற 21-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கலெக்டர் தகவல் தெரிவித்தார்.
    • வருகிற 21-ந் தேதி மாலை 5.45 மணிக்கு முன்பு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அனுமதிக்கான விண்ணப்பத்தை அளிக்க வேண்டும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 115-வது பிறந்தநாள் விழா மற்றும் 60-வது குருபூஜை விழா வருகிற 30-ந் தேதி நடைபெறுவதையொட்டி அஞ்சலி செலுத்த வருபவர்களின் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுக்கு நேரம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

    அந்த வகையில் அதற்கு ஏதுவாக சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் மற்றும் அமைப்புகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் வருகிற 21-ந் தேதி மாலை 5.45 மணிக்கு முன்பு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அனுமதிக்கான விண்ணப்பத்தை அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×