search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "despite"

    எத்தனால் விலையை மத்திய அரசு உயர்த்தியது. இது, கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் வைத்து உள்ள பாக்கியை வழங்க உதவும். #Ethanol #PriceHike
    புதுடெல்லி:

    கரும்புச்சாற்றில் இருந்து சர்க்கரை உற்பத்தி செய்த பின்னர் துணைப்பொருளாக ‘மொலாசஸ்’ கிடைக்கிறது. இந்த ‘மொலாசஸ்’ எத்தனால் உற்பத்தி செய்ய பயன்படுகிறது.இந்த எத்தனால், சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத எரிபொருளாக பயன்படுத்த ஏற்றது ஆகும்.இந்த எத்தனாலை பெட்ரோலுடன் கலந்து வாகனங்களில் எரிபொருளாக பயன்படுத்தலாம். இந்த பெட்ரோல் விலை குறைவாக இருக்கும். அதே நேரத்தில் கரும்பு விவசாயிகளும் நல்ல பலன் அடைய முடியும்.

    இந்த நிலையில், தற்போது சி-மொலாசஸ் மூலம் உற்பத்தி செய்யப்படுகிற எத்தனால் ஒரு லிட்டர் விலை ரூ.40.85 ஆகும். இந்த எத்தனால் விலையை ரூ.2.85 அளவுக்கு மத்திய அரசு உயர்த்தியது. இதன் மூலம் எத்தனால் விலை ரூ.43.70 ஆக உயர்ந்தது. மேலும் முதல் முறையாக பி-மொலாசஸ் மூலம் உற்பத்தி செய்யப்படுகிற எத்தனாலுக்கும் மத்திய அரசு விலை நிர்ணயம் செய்து உள்ளது. இந்த வகை எத்தனால், 1 லிட்டருக்கு ரூ.47.49 என்ற விலைக்கு விற்கப்படும். இதுவரை சி-மொலாசஸ் மூலம் உற்பத்தி செய்யப்படுகிற எத்தனாலுக்கு மட்டுமே மத்திய அரசு விலை நிர்ணயம் செய்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த முடிவுகள், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று கூடிய பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய மந்திரிகள் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்டன. ஏற்றுமதி கடன் உத்தரவாத நிறுவனத்தை வலுப்படுத்துவதற்கு ரூ.2 ஆயிரம் கோடி மூலதன வகைக்கு வழங்க பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய மந்திரிகள் குழு ஒப்புதல் அளித்தது.

    மத்திய மந்திரிசபை கூட்டத்துக்கு பின்னர் நிதி மந்திரி பொறுப்பு வகிக்கும் பியூஷ் கோயல் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் நிலுவையில் வைத்து உள்ள பாக்கித்தொகையை வழங்குவதற்கும், எத்தனால் தாராளமாக கிடைக்கச் செய்வதற்கும், கரும்புச்சாற்றில் இருந்து எத்தனால் உற்பத்தி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்து உள்ளது.இன்று (நேற்று) எடுக்கப்பட்ட முடிவுகள், பெட்ரோலுடன் கலப்பதற்கு தேவையான அளவு எத்தனால் கிடைக்க உதவியாக இருக்கும். பெட்ரோலிய பொருட்கள் இறக்குமதிக்கு ஆகிற செலவை குறைக்கும்.

    மேலும், சரக்கு மற்றும் சேவை வரிகள், போக்குவரத்து கட்டணங்கள் வழங்கப்படும். இறக்குமதி செய்யக்கூடிய பெட்ரோலிய பொருட்களின் விலையை விட இந்த விலை மலிவாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய மந்திரிசபை கூட்டத்தில் எடுக்கப்பட்ட பிற முக்கிய முடிவுகள் வருமாறு:-

    * நகர்ப்புற திட்டமிடல், வளர்ச்சித்துறையில் இந்தியா, சிங்கப்பூர் இடையே ஒத்துழைக்க செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்துக்கு அனுமதி.

    * சுகாதார துறையில் ஒத்துழைப்பதற்கு இந்தியாவும், பஹ்ரைனும் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு அனுமதி.

    * சிவில் விமான போக்குவரத்து துறையில் ஒத்துழைப்பதற்கு இந்தியாவும், ஜெர்மனியும் செய்து கொண்ட ஒப்பந்தத்துக்கு அனுமதி. மேற்கண்ட முடிவுகள், மத்திய மந்திரிசபை கூட்டத்தில் எடுக்கப் பட்டன.  #Ethanol #PriceHike  #tamilnews 
    ×