search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "creating"

    பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப புதிய மருத்துவ கல்லூரிகளை தொடங்குவதும், சிறந்த டாக்டர்களை உருவாக்குவதும் மத்திய, மாநில அரசுகளின் கடமை என ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டில், டாக்டர் யோகேஷ் உள்ளிட்ட 16 டாக்டர்கள் மனு தாக்கல் செய்தனர். அதில், ‘நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று அகில இந்திய ஒதுக்கீட்டில் வெளிமாநிலங்களில் எங்களுக்கு இடம் கிடைத்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த எங்களது பெயர் மாநில ஒதுக்கீட்டின் கீழ் உள்ள தரவரிசை பட்டியலில் இடம் பெறாததால், தமிழகத்தில் உள்ள சிறந்த மருத்துவ கல்லூரியை தேர்வு செய்ய முடியவில்லை.

    எனவே, அகில இந்திய ஒதுக்கீட்டில் நாங்கள் தேர்வு செய்யப்பட்டு இருந்தாலும், மாநில ஒதுக்கீட்டின் கீழ் எங்களை சேர்க்க உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.

    இதற்கு பதில் அளித்த தமிழக அரசு, ‘சம்பந்தப்பட்ட மாணவர்கள் மாநில அரசின் ஒதுக்கீட்டுக்கு தகுதியானவர்கள் என்ற போதும் ஏதாவது ஒரு கலந்தாய்வில் மட்டுமே அவர்கள் பங்கேற்க முடியும். அகில இந்திய ஒதுக்கீட்டில் சேர்க்கை பெற்றுவிட்டு, மாநில அரசின் ஒதுக்கீடு வேண்டும் என்று அவர்கள் உரிமை கோர முடியாது’ என்று கூறியது.

    இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    மனுதாரர்கள் அனைவரும் மாநில அரசின் ஒதுக்கீட்டுக்கு தகுதியானவர்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு உத்தரவுகளின்படி, இந்த கலந்தாய்வுகள் நடக்கின்றன. மனுதாரர்கள் ஏற்கனவே அகில இந்திய ஒதுக்கீட்டில் இடம் பெற்றவர்கள் என்ற காரணத்தால், இந்த மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்கிறேன். இந்தியாவில் பெருகிவரும் மக்கள் தொகைக்கேற்ப பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்ற டாக்டர்களின் தேவை அதிகரித்து வருகிறது.

    இந்த சூழலில் பட்டமேற்படிப்புக்கு விண்ணப்பிக்கும் இளம் டாக்டர்கள் அவர்கள் விரும்பும் பாடங்களையும், கல்லூரிகளையும் தேர்வு செய்ய வாய்ப்பளிக்காவிட்டால் அவர்களால் நாட்டுக்கு சிறந்த சேவையை அளிக்க முடியாது.

    எனவே நாடு முழுவதும் புதிய மருத்துவ கல்லூரிகளை, டாக்டர்கள் விரும்பும் துறைகளுடன் தொடங்க வேண்டும். மக்களுக்கு தரமான மருத்துவ சிகிச்சை அளிக்க சிறந்த டாக்டர்களை உருவாக்க வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமை.

    இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 
    ×