search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "court lawyer"

    எச்.ராஜாவுக்கு அடைக்கலம் கொடுத்த கவர்னர் பன்வாரிலாலை திரும்ப பெறவேண்டும் என்று ஜனாதிபதிக்கு ஐகோர்ட்டு வக்கீல் மனு அளித்துள்ளார். #hraja #governorbanwarilalpurohit #president

    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டில், வக்கீலாக இருப்பவர் எஸ்.துரைசாமி. இவர், ஜனாதிபதிக்கு ஒரு புகார் மனு அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

    பா.ஜ.க.வின் தேசிய செயலாளராக இருக்கும் எச்.ராஜா, ஐகோர்ட்டு குறித்து இழிவான மற்றும் தரக்குறைவான வார்த்தைகளால் கடுமையாக விமர்சனம் செய்தார். தமிழக போலீசார் எல்லாம் ஊழல்வாதிகள் என்றார். தடையை மீறி விநாயகர் ஊர்வலத்தை செல்ல அனுமதிக்கவில்லை என்றால், பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று போலீசாரை மிரட்டினார்.

    இதையடுத்து திருமயம் போலீசார், எச்.ராஜா மீது பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அந்த வழக்கு பதிவு செய்யப்பட்ட நாளில் இருந்து எச்.ராஜா, தலைமறைவானார். அதாவது போலீசார் கைது செய்வதில் இருந்து தப்பித்து தலைமறைவாக இருந்தார்.

    இந்த நிலையில், செப்டம்பர் 25-ந்தேதி தலைமறைவு குற்றவாளியான எச்.ராஜாவை, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், ராஜ்பவனுக்கு அழைத்து, வழக்கு தன்னுடைய வீட்டில் வைத்து சந்தித்து பேசியுள்ளார்.

    ஒரு மணிநேரத்துக்கு மேலாக போலீசார் பதிவு செய்துள்ள கிரிமினல் வழக்கு உள்பட பல வி‌ஷயங்களை அவர்கள் விவாதித்துள்ளனர். இதன் மூலம் போலீசாரால் தேடப்பட்டு வந்த எச்.ராஜாவை பாதுகாத்து, இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 212ன் கீழ் கவர்னர் பன்வாரிலால் புரோகித் குற்றம் இழைத்துள்ளார்.

    இந்திய அரசியலமைப்புச் சட்ட பிரிவு 155ன் கீழ் தமிழக கவர்னராக பன்வாரிலால் புரோகித் பதவி ஏற்றுள்ளார். இவர், அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 156(1) கீழ், ஜனாதிபதியின் விருப்பத்தின் அடிப்படையிலேயே இந்த பதவியை தொடர்ந்து வகிக்க முடியும்.

    கவர்னர் என்பவர் சட்டத்துக்கு உட்பட்டு செயல்பட வேண்டும். ஒருவேளை சட்டத்தை மீறி அவர் செயல்படும்போது, ஜனாதிபதியின் அந்த விருப்பத்தை அவர் இழந்து விடுகிறார். எனவே, ஜனாதிபதி தன்னுடைய விருப்பத்தை திரும்ப பெறவேண்டும். கவர்னர் பதவியில் இருந்து சம்பந்தப்பட்ட நபரை நீக்க வேண்டும். இதுதான் அரசியலமைப்புச் சட்டத்தின் கோட்பாடு ஆகும்.


    தமிழக கவர்னரை பொருத்தவரை, அவர் தலைமறைவு குற்றவாளி எச்.ராஜாவுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளார். அவர் குறித்த விவரங்களை போலீசுக்கு தெரிவிக்கவில்லை. குற்ற விசாரணை நடைமுறைச் சட்டம் பிரிவு 37ன்படி, குற்றவாளியை போலீசாரிடம் பிடித்து கொடுக்கவேண்டும். இதற்காக போலீசாருக்கு ஒவ்வொரு நபரும் உதவியாக இருக்கவேண்டும் என்று கூறுகிறது.

    அதன்படி ஒவ்வொரு நபர் என்பதில், கவர்னரும் உள்ளடங்கிவர் தான். ஆனால், கவர்னர் தன் கடமையை செய்ய தவறியதுடன், தன் வீட்டில் எச்.ராஜாவுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளார். எச்.ராஜா குறித்து போலீசாருக்கு தகவல் எதுவும் கொடுக்காமல் மறைத்துள்ளார்.

    எனவே, அவர் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் குற்றம் செய்துள்ளார்.

    இதுகுறித்து ஏற்கனவே, சென்னை போலீஸ் கமி‌ஷனரிடம் புகார் செய்தேன். கவர்னர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யவேண்டும். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறியிருந்தேன்.

    ஆனால், போலீஸ் கமி‌ஷனர் வழக்குப்பதிவு செய்ய தயக்கம் காட்டி வருகின்றார். இதனால், கவர்னர் பன்வாரிலால் புரோகித் மீது குற்றவியல் கோர்ட்டில் குற்றவழக்கு தொடர உள்ளேன். இந்த சூழ்நிலையில், தமிழக கவர்னரை இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகளின் கீழ் பல்வேறு குற்றங்களை செய்துள்ளதால், அவரை கவர்னர் பதவியில் இருந்து திரும்ப பெறவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார். #hraja #governorbanwarilalpurohit #president

    ×