search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cost reduction"

    கவர்னர் பன்வாரிலால் புரோகித் தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் கட்டணத்தை செலுத்தியே உணவு வகைகளை பெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது. #TNGovernor #Banwarilalpurohit
    சென்னை:

    சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை இதுவரை இல்லாத அதிரடி மாற்றங்களை சந்தித்து வருகிறது.

    தமிழகத்தின் புதிய கவர்னராக கடந்த அக்டோபர் மாதம் 6-ந்தேதி பதவி ஏற்ற பன்வாரிலால் புரோகித் இந்த அதிரடி மாற்றங்கள் ஒவ்வொன்றையும் அரங்கேற்றி வருகிறார்.

    பன்வாரிலால் சென்னை கவர்னர் மாளிகைக்கு வந்ததும் சிக்கனத்துக்குதான் முதலிடம் கொடுத்தார். தேவையில்லாத இடங்களில் குளிர்சாதன பெட்டிகள் இருக்க கூடாது என்று உத்தரவிட்டார். உடனடியாக ஏராளமான ஏ.சி. பெட்டிகள் அகற்றப்பட்டன.

    அதுபோல பழைய குண்டு பல்புகளை மாற்றி எல்.இ.டி. விளக்குகளை பொருத்த உத்தரவிட்டார். இதன் காரணமாக கிண்டி கவர்னர் மாளிகையில் மின்சார கட்டண செலவு கணிசமான அளவுக்கு குறைந்தது.

    முன்பெல்லாம் கவர்னர் மாளிகையில் சாப்பாடு செலவு மிக கடுமையாக இருக்கும். இதனால் 2015-2016-ம் ஆண்டு கவர்னர் மாளிகை செலவு ரூ. 1.33 கோடியாக இருந்தது. 2016-2017-ம் ஆண்டு அது ரூ.1.43 கோடியாக உயர்ந்தது.

    கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை மட்டும் செலவான தொகை ரூ.1.68 கோடி. அக்டோபர் மாதம் கவர்னராக பொறுப்பு ஏற்ற கவர்னர் பன்வாரிலால் இதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார்.

    கவர்னர் மாளிகையில் உணவு விநியோகம், மின்சாரம், சுற்றுப்பயணம், பராமரிப்பு ஆகியவற்றில் சிக்கனத்தை கடைபிடிக்க முடிவு செய்தார். அதன்படி கவர்னர் மாளிகையில் பெறப்படும் ஒவ்வொரு உணவுக்கும் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற புதிய நடைமுறையை கொண்டு வந்துள்ளார்.

    அதன்படி காலை உணவுக்கு கட்டணமாக ரூ.50 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மதியம் மற்றும் இரவு உணவுக்கு தலா ரூ.80 என்று கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கவர்னர் தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் இந்த கட்டணத்தை செலுத்தியே உணவு வகைகளை பெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    கவர்னரின் உறவினர்கள், நண்பர்கள் சென்னை வந்தால் கவர்னர் மாளிகையில் தங்குகிறார்கள். அவர்கள் தங்குவதற்கும், உணவு சாப்பிடுவதற்கும் கவர்னர் பன்வாரிலால் தனது சொந்த பணத்தில் இருந்து கட்டணத்தை கொடுத்து விடுவதாக தெரிய வந்துள்ளது.

    டெல்லி மற்றும் வேறு மாநிலங்களில் இருந்து வரும் அரசுத்துறை உயர் அதிகாரிகளுக்கு மட்டுமே கவர்னர் மாளிகையில் உணவை கட்டணமின்றி பெற்றுக் கொள்ள விதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மற்றபடி கவர்னர் மாளிகை சமையல் கூடத்தில் இருந்து வெளிவரும் ஒவ்வொரு உணவுக்கும் கண்டிப்பாக கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று கவர்னர் பன்வாரிலால் உத்தரவிட்டுள்ளார்.

    கவர்னர் மாளிகையில் உள்ளவர்கள் உணவு வகைகள் வாங்கி சாப்பிடும்போது அவர்களுக்குரிய பில் உடனுக்குடன் வழங்கப்படுகிறது. இந்த சிக்கன நடவடிக்கை காரணமாக மாளிகையின் உணவு விநியோக செலவு மிக மிக குறைந்து விட்டது.


    மின்சாரம், உணவு போன்று தனது சுற்றுப்பயணத்தையும் கவர்னர் பன்வாரிலால் மிக மிக எளிமையாக்கி உள்ளார். இதற்கு முன்பு கவர்னராக இருந்தவர்கள் டெல்லிக்கு செல்லும்போது விமானத்தில் முதல் வகுப்பில் பயணம் செய்வார்கள். ஆனால் கவர்னர் பன்வாரிலால் சாதாரண வகுப்பு பயணத்தை மேற்கொள்கிறார்.

    அதுபோல ரெயில்களில் சொகுசு பெட்டிகளில்தான் கவர்னர்கள் செல்வதுண்டு. ஆனால் பன்வாரிலால் முதல் வகுப்பு குளிர்சாதன பெட்டியை தேர்வு செய்து பயணம் செய்கிறார்.

    பெரும்பாலும் கவர்னர்கள் வெளிமாவட்டத்துக்கு செல்லும் போது இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர்களை பயன்படுத்துவது உண்டு. அதற்கான கட்டணத்தை கவர்னர் மாளிகையில் இருந்து விமானப்படை கொடுப்பார்கள்.

    ஆனால் கவர்னர் பன்வாரிலால் ஹெலிகாப்டர் பயணத்தை முழுமையாக நிராகரித்துள்ளார். இதனால் அத்தகைய செலவுகள் எதுவும் ஏற்படவில்லை.

    இதற்கிடையே கவர்னர் மாளிகையில் உள்ள பராமரிப்பிலும் கவர்னர் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளார். இதனால் அதற்கான மாத செலவும் வீழ்ச்சி அடைந்துள்ளது.

    கவர்னர் பன்வாரிலாலின் இத்தகைய நடவடிக்கைகளின் காரணமாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் கடந்த மார்ச் மாதம் வரை 6 மாதங்களுக்கு வெறும் ரூ.30 லட்சம்தான் செலவாகி உள்ளது. பல லட்சம் ரூபாயை கவர்னர் பன்வாரிலால் தனது சிக்கனத்தால் மிச்சப்படுத்தி கொடுத்துள்ளார். #TNGovernor #Banwarilalpurohit
    ×