search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Birth Story"

    • ஜீவநதியான கங்கை இமயமலையில் உற்பத்தியாகிறது.
    • நதி மூலம் புரியாத புதிராகவே உள்ளது.

    கங்கை நதி இந்தியர்களின் உணர்வோடு கலந்த ஒன்று. தாயாக, கடவுளாக கங்கை நதியை இந்தியர்கள் போற்றுகிறார்கள். வழிபடுகிறார்கள்.

    உலகில் எந்த நாட்டிலும், எந்த நதிக்கும் இப்படி சிறப்பும், பெருமையும் கிடையாது. வட மாநில மக்கள் கங்கை நதியை வெறுமனே கங்கை என்று சொல்வ தில்லை. `கங்கா மாதா' என்றுதான் சொல்வார்கள்.

    ஜீவநதியான கங்கை இமயமலையில் உற்பத்தியாகிறது என்பது எல்லாருக்கும் தெரிந்ததுதான். ஆனால் இமயமலையில் கங்கை எங்கு தோன்றுகிறது என்பது இதுவரை யாருக்கும் தெரியாது. ஆய்வாளர்கள் எவ்வளவோ முயன்றும் அந்த நதி மூலம் புரியாத புதிராகவே உள்ளது.

    இமயமலை சாரலில் உருவாகும் கங்கை நதி உத்தரகாண்ட், உத்தரபிரதேசம், பீகார், மேற்கு வங்காளம் மாநிலங்கள் வழியாக பாய்ந்து மக்களை வாழ வைத்து, வளப்படுத்தி விட்டு வங்கக்கடலில் கலக்கிறது. இது புவியியல் ரீதியிலான உண்மை. ஆனால் புராணங்கள் மூலம்தான் கங்கையின் சிறப்பு இந்தியர்களின் மனதில் ஆழமாக பதிந்துள்ளது.

    கங்கை நதி தோற்றத்தின் பின்னணியில் சிவன், விஷ்ணு, பிரம்மா மூவரும் இருப்பதாக இந்தியர்கள் உறுதியாக நம்புகிறார்கள். அந்த நம்பிக்கைதான் கங்கையை புனித கங்கையாக கும்பிட வைக்கிறது. எனவே புராணத்தில் கூறப்பட்டுள்ள புனித கங்கை வரலாற்றை ஒவ்வொருவரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.

    வாருங்கள் புனித கங்கை வரலாற்றை பார்க்கலாம்.

    ஒரு தடவை இமய மலையில் சிவபெருமான், மகா விஷ்ணு, பிரம்மா மூவரும் சந்தித்துக் கொண்டனர். அப்போது மகாவிஷ்ணு தனது இனிமையான குரலால் ராகம் போட்டு பாடத்தொடங்கினார். கேட்பவர்களை எல்லாம் அந்த பாடல் மதிமயங்கச் செய்யும் வகையில் இருந்தது.

    சிவபெருமானோ விஷ்ணுவின் பாடலில் மனதைப் பறிகொடுத்தார். ஒரு கட்டத்தில் உருகிப் போய்விட்டார். அதாவது உண்மையிலேயே கருணை வெள்ளமாக உருகி விட்டார்.

    இதைக்கண்ட பிரம்மா 'சட்டென்று ஒரு காரியம் செய்தார். சிவபெருமான் கருணை வெள்ளமாக மாறி இருந்ததை தடுத்து, அந்த தண்ணீர் முழுவதையும் தனது கமண்டலத்தில் அடைத்துக் கொண்டார்.

    அதாவது சிவனின் அம்சமாக அந்த கருணை வெள்ளம் இருந்தது. இந்த நிகழ்வு நடந்த சில தினங்களில் பூலோகத்தில் மகாபலி சக்கரவர்த்தி மிகப்பெரிய யாகம் நடத்தினார். அப்போது மகா விஷ்ணு, வாமன அவதாரம் எடுத்து அங்கு வந்து மூன்றடி நிலம் வேண்டும் என்று தானம் கேட்டார்.

    குள்ளராக இருந்த வாமனரை புரிந்து கொள்ளாமல் மகாபலி சக்கரவர்த்தியும் மூன்று அடிதானே, எடுத்துக்கொள் என்றார். அடுத்த வினாடி வாமனர் வளர்ந்து விண் உலகையே ஒரு காலால் அளந்து விட்டார். இதைக்கண்ட தேவர்களும், முனிவர்களும் குள்ள வாமனராக வந்திருப்பது மகாவிஷ்ணு என்பதை அறிந்து பயபக்தியுடன் வணங்கினார்கள்.

    அப்போது அங்கு இருந்த பிரம்மா சமயோசிதமாக ஒரு செயலை செய்தார். தனது கமண்டலத்தில் அடைத்து வைத்திருந்த ஈசனின் கருணை வெள்ளத்தை எடுத்து விஷ்ணுக்கு அபிஷேகம் செய்தார். அந்த கருணை வெள்ளம் பெருக்கெடுத்து ஆறாக ஓடியது.

    தேவர்களும், முனிவர்களும் இதற்காகவே காத்திருந்தது போல மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தனர். மேல் உலகில் ஓடிய அந்த ஆற்றுத் தண்ணீரை தங்கள் தாகம் தீர்க்க வந்த புனித பெண்ணாக கருதினார்கள். எனவே அவர்கள் அதை `மந்தாகினி' என்று அழைத்து போற்றிக் கொண்டாடினார்கள்.

    ஆகாயத்தில் மட்டுமே ஓடியதால் அதை ஆகாய கங்கை என்று மற்றவர்கள் அழைத்தனர். இந்த ஆகாய கங்கை பின்னர் பூமிக்கு வந்தது, கங்கை எப்படி பூமிக்கு வந்தது என்பதன் பின்னணியில் ஒரு புராண நிகழ்வு கூறப்படுகிறது.

    சிவன், விஷ்ணு, பிரம்மா மும்மூர்த்திகளால் உருவான ஆகாய கங்கை விண்ணில் தேவர்களுக்கு தாகம் தீர்த்து வந்த காலத்தில் பூமியில் பகீரதன் என்ற அரசன் ஆட்சி செய்து வந்தான். எல்லா செல்வங்களும் இருந்தும் அவனுக்கு குழந்தை செல்வம் இல்லாமல் இருந்தது. எத்தனையோ பரிகாரங்கள் செய்தும் குழந்தை பாக்கியம் அவனுக்கு தாமதமாகிக் கொண்டே இருந்தது.

    இறுதியில் பித்ரு தோஷம் காரணமாக இந்த நிலை ஏற்பட்டு இருப்பதை அறிந்தான். பித்ருக்களின் அஸ்தியை கங்கையில் கரைத்தால் பித்ருக்கள் ஆத்மா சாந்தி அடையும். அதன் பிறகு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று முனிவர்கள் கூறினார்கள். உடனே கங்கா தேவியை நோக்கி பகீரதன் தவம் இருக்க தொடங்கி விட்டான்.

    அவன் முன்பு தோன்றிய கங்கை என்ன வரம் வேண்டும் என்று கேட்டாள்? அதற்கு பகீரதன், "தாங்கள் வானத்தில் ஓடாமல் பூமியில் தரையில் இறங்கி ஓட வேண்டும். அப்போதுதான் எனது மூதாதையர்களின் அஸ்தியை கரைத்து நான் பலன் பெற முடியும்" என்று கூறினான். இதை கங்கை ஏற்றுக்கொண்டாள்.

    அதே சமயத்தில் அவள் ஒரு நிபந்தனையையும் விதித்தாள். அவள் கூறுகையில், "நான் பூமியில் இறங்கி ஓட தயாராக இருக்கிறேன்.

    ஆனால் வானத்தில் இருந்து பூமிக்கு இறங்கும் போது எனது வேகம் வலிமையானதாக இருக்கும். பூமியால் அதை தாங்கி கொள்ள இயலாது. யாராவது ஒருவர் அதை தாங்கி இறக்கி விட்டால் பூமிக்கு வருவதற்கு உதவியாக இருக்கும்" என்றாள்.

    உடனே பகீரதன் கங்கை பூமியில் இறங்கும் போது தாங்கும் சக்தி யாருக்கு இருக்கிறது என்று ஆய்வு செய்தான். அப்போது முனிவர்கள் கங்கையை தாங்கும் சக்தி சிவபெருமானுக்கு மட்டுமே உள்ளது என்று தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து சிவபெருமானை நோக்கி பகீரதன் தவம் இருந்தான். அவன் முன் சிவபெருமான் தோன்றி என்ன வரம் வேண்டும் என்று கேட்டார்.

    அதற்கு பகீரதன் இதுவரை நடந்தவற்றையெல்லாம் விளக்கமாக சொல்லிவிட்டு, "கங்கையை தாங்கும் சக்தி உங்களிடம்தான் உள்ளது. எனவே எனக்காக கங்கை நதி பூலோகம் வருவதற்கு நீங்கள் உதவி செய்ய வேண்டும்" என்று சொன்னான். அதை சிவபெருமான் ஏற்றுக் கொண்டார்.

    அதன்படி கங்கையை தனது தலைமுடியை விரித்து சிவபெருமான் ஏற்றுக் கொண்டார். அன்று முதல் சிவன் தலை முடியில் கங்கை நிரந்தரமாக குடியேறிவிட்டாள். அங்கிருந்து அவள் பூலோகத்துக்கு வருவதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    பகீரதனின் திட்டப்படி பாகீரதியாகப் பெருகி, ஏறக்குறைய 1,600 மைல் ஓடி, கங்கா இறுதியில் கடலில் கலக்கிறாள். பாயும் இடங்களுக்கெல்லாம் புனிதம் கூட்டிப் பசுமைப்புரட்சியும் செய்கிறாள்.

    கங்கை எங்கு உற்பத்தியாகிறாள் என்பது தான் இன்னும் புரியாப் புதிராக இருக்கிறது. என்றாலும் பகீரதனின் முயற்சி வியக்க வைக்கிறது.

    இமயமலைச் சாரலிலே ஏறக்குறைய 14 ஆயிரம் அடி உயரத்திலே ஒரு குகை. இதன் வாய் பசுவின் வாய் போல் இருப் பதால் கோமுகி என்று பெயர். இதிலிருந்து கங்கை வெளிப்படு கிறாள். இப்பகுதி கங்கோத்ரி எனப்படுகிறது.

    கங்கோத்ரியில் கங்கை அம்மனுக்கு ஒரு கோவில் இருக்கிறது. இதை ஏற்படுத்தியவர் ஆதிசங்கரர். இக்கோவிலில் கங்கையைத் தவிர, புவிக்குக் கங்கையைக் கொண்டு வந்த பகீரதன், பின்னால் கங்கையோடு இணைந்து திரிவேணி என்று புகழ் சேர்க்கப்போகும் யமுனை, சரஸ்வதி, இக்கோவிலுக்குக் காரணபூதரான ஆதிசங்கரர் ஆகியவர்கள் சிலா வடிவம் கொண்டுள்ளனர். கங்கையின் உற்சவ விக்ரகம் பொன்னால் ஆனது. இந்த ஆலயத்துக்கு அருகிலேயே பைரவருக்கும் ஓர் ஆலயம் உண்டு.

    நவம்பர் முதல் மே வரை உறைபனி காலமாக இருக்கும். ஆதலால் கோவிலை மூடி விடுவார்கள். அகண்ட தீபம் ஒன்றில் நெய்யிட்டு ஏற்றிவைத்து விட்டு, உற்சவ விக்ரகத்தை மட்டும் எடுத்துக் கொண்டு கீழே இறங்கி விடுவார்கள். அட்சய திருதியை அன்று மீண்டும் ஆலயம் திறக்கப்படும். அப்போதும் நெய் விளக்கு அணையாமல் எரிந்து கொண்டிருக்கும். ஒளிமயமான இறைவன் தன்னொளி காட்டும் விந்தை இது.

    இங்கு பல தீர்த்தங்கள் உள்ளன. அவை சூரிய குண்டம், விஷ்ணு குண்டம், கவுரி குண்டம் என்று வழங்குகின்றன. சூரிய குண்டத்தில் ஒரு பாறை தானாகவே சிவலிங்க வடிவம் கொண்டுள்ளது. கங்கையும் அருவியாக விழுந்து அதை நீராட்டுகிறாள்.

    வழியிலே சரஸ்வதியும் அலகநந்தாவும் சங்கமமாகும் இடம் கேசவப் பிரயாகை என்றும், நந்தாவும் அலக நந்தாவும் சங்கமம் ஆகும் இடம் கர்ணப் பிரயாகை என்றும், அலக நந்தாவும் மந்தா கினியும் சந்திக்கும் இடம் ருத்ரப்பிரயாகை என்றும் பெயர் பூண்டு, புகழ் கூட்டும் தீர்த்தத் தலங்களாக விளங்குகின்றன.

    கங்கை பூமியைத் தொட்டும் தொடாமலும் துள்ளிப்பாய்ந்து வரும் இடம் ரிஷிகேசம் என்று அழைக்கப்படுகிறது. சுமார் 500 அடி அகலத்துக்குச் சுழித்துக் கொண்டு ஓடும் கங்கையில் நீராட வேண்டும் என்று ஆசைப்பட்டால், படிகளில் உட்கார்ந்து ஜாக்கிரதையாக ஸ்நானம் செய்ய வேண்டும். நீரின் இழுப்புக்குத் தாக்குப் பிடிப்பது அவ்வளவு சிரமம். தண்ணீரின் சில்லிப்புக்கு ஐஸ் தோற்று விடும். கோடையில் குளித்து எழுந்தால், இதமாக இருக்கும்.

    இயற்கைச் சூழலிலே, ஆற்று ஓரத்திலே சிவானந்தர் நிறுவிய சிவானந்த ஆசிரமம், சுவர்க்காசிரமம், ஸ்ரீ காஞ்சிப் பெரியவர்கள் நிறுவிய சங்கர மடம், ஸ்ரீ சிதானந்தர் நிறுவிய கீதா பவனம் போன்றவை இருக்கின்றன. எதிரும் புதிருமாக உள்ள சிவானந்த ஆசிரமத்துக்கும் கீதாபவனுக்கும் போக அதாவது இக்கரை - அக்கரை போகப் படகுவசதியும் பாலவசதியும் உண்டு.

    காலார நடந்து இக்கரை-அக்கரை போக வேண்டும் என்றால் ஒரு தொங்கு பாலமும் இருக்கிறது. இதற்கு லட்சுமண ஜூலா என்று அழகான பெயர் வைத்திருக்கிறார்கள்.

    கங்கோத்ரியில் இருந்து 365 மைல் உள்ள ரிஷிகேசம் டெல்லியில் இருந்து 150 மைல்களுக்குள்ளேயே இருக்கிறது. ரிஷிகேசத்தில் இருந்து 14 மைல் இறங்கிவந்தால் ஹரித்துவாரம் நகரை அடையலாம். நடந்து வந்தாலும் வாகனத்தில் வந்தாலும் கங்கையும் நம்மோடு துணை வருவாள்.

    சப்த புரிகளில் ஒன்றான மாயாபுரியே ஹரித்துவாரம் என்று அழைக்கப்படுகிறது. இங்கு கங்கையின் இருபுறமும் இருக்கும் கட்டிடங்கள் கட்டங்களாகவும் திகழ்கின்றன. என்றாலும் பிரதான ஸ்நான கட்டம் பிரம்ம குண்டம் தான். இதுவே அக்னி குண்டமெனவும் போற்றப்படுகிறது.

    பகீரதனின் பிரார்த்தனைக்கு இரங்கி ஆகாய கங்கையான மந்தாகினி இறங்கி வந்து விழுந்த முதல் தலமாகையால், இதற்குக் கங்காத்வாரம், கங்கா முகம் என்ற பெயர்களும் உண்டு.

    இங்கே கங்கைக்கு இரண்டு கோவில்கள் உள்ளன. ஒன்று ஒரு குன்றின் மேல், இன்னொன்று ஸ்கான கட்டத்தில். 'ஹர் கீ பவுடி'யில் விஷ்ணுபாத தரிசனம் விசேஷம். இங்கே மாலை ஆரத்தி சிறப்பாக நடைபெறுகிறது. தீப ஆரத்தியைத் தொடர்ந்து பக்தர்கள் நெய் விளக்கேற்றிக் கங்கையில் மிதக்க விடுவார்கள். இந்த தீப அலங்கரத்தில் கங்கையின் ஜொலிப்பைக் காணக் கண்கோடி பற்றாது.

    கும்பமேளா தலங்களில் ஹரித்துவாரமும் ஒன்று, 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் இந்த கும்ப மேளாவின் பொழுது, இங்கு நீராடினால், லட்சம் முறை பூமியை பிரதட்சணம் செய்த பலன் கிடைக்குமாம். கங்கை மண்ணுலகுக்கு வந்த நாளை 'கங்கா சப்தமி' என்று இங்கே கொண்டாடுகிறார்கள்.

    அமைதியையும் ஆத்மானந்தத்தையும் நாடி இங்கு வதியும் அறவோர்களும் துறவோர்களும் இம்மண்ணின் புனிதத்துக்கு புனிதமேற்றுகின்றனர். சுருங்கச் சொன்னால், ஹரித்துவாரத்தில் துறைகள் தோறும் கோவில்கள், காடுகள் தோறும் தபோவனங்கள்! என்றாலும் சுங்கை பிரகாசிப்பது காசி நகரில்தான்.

    பகவான் வால்மீகி, மகாகவி காளிதாசர், ஆதிசங்கரர் போன்ற மகான்கள் 'கங்காஷ்டகம்' இயற்றிக் கங்கையின் ஒளிக்கு மேலும் ஒளி கூட்டி இருக்கின்றனர்.

    மோட்சபுரிகள் ஏழு என்று கணக்கிட்டிருக்கின்றனர் நம் முன்னோர். அவற்றில் நடு நாயகமாக காசி விளங்குகிறது. மற்ற தலங்களில் நல்வினை செய்தோர்க்கு மட்டுமே மோட்சமாம். காசியில் தீவினை செய்தவர்க்கும் மோட்சம் கிட்டுகிறதாம் - இப்படி சனத்குமார சம்ஹிதை கூறுகிறது.

    மத்ஸ்ய புராணம், கூர்ம புராணம், பத்ம புராணம் ஆகியவை இன்னும் ஒரு படி மேலே போய் மிருகங்களும் பறவைகளும் கூட காசியில் கடைத்தேறுவதாகக் கூறுகின்றன.

    காசியில் மரித்தாலே முக்தி என்றால், காசியில் தானம், ஜபம், தபம், பூஜை போன்ற நல் வினைகளைத் தினையளவு செய்தாலும் பனையளவு பலனை பெறலாம் என்கிறார்கள்.

    முக்தி தரும் தலங்களிலே முத்தாக இருப்பதால்தான், 'காசி காசி, காசி' என்று ஸ்மரித்துத் கொண்டே இருந்தால் முன் வினைகள் இற்றுப் போகும் என்கிறது பிரம்ம வைவர்த்த புராணம்.

    காசி தன்னை முக்தி சதலமாகப் பிரகடனப்படுத்திக் கொள்ளவே, இறப்போரின் செவிகளிலே ராமநாமத்தை ஒதத் திருவுள்ளம் கொண்டார். கைலையங்கிரியில் இருந்து காசிக்குக் குடி பெயர்ந்தார்.

    கங்காநதி தன்னை மகாநதி என்று நிரூபிக்க யமுனை, சோண பத்ரை, கோமதி,கண்டகி, கவுசிகி போன்ற புண்ணிய நதிகளைத்தன்னோடு இணைத்துக் கொண்டு செல்கிறாள் ஒரு புறம்.

    இன்னொருபுறம், தான் உற்பத்தியாகும் இடத்தில் இருந்து ஹரித்துவாரம் வரை தெற்கு நோக்கி ஓடி, அங்கிருந்து பிரயாகை வரை தென் கிழக்காகப் பாய்ந்து, பிறகு நேர் கிழக்குக்குத் திரும்புகிறாள். காசிக்கு அருகிலே வடக்கு நோக்கி ஓடி உத்தரவாகினி யாகப் புனிதம் கூட்டுகிறாள்.

    இது இரு துருவங்கள் இணையும் முயற்சியாகத் தோன்றுகிறதல்லவா? ஆத்மா. தான் தோன்றிய இடத்துக்கே திரும்ப முயலும் முனைப்பாகவும் படுகிறதல்லவா? எனவேதான் உத்தரவாகினிக்கு அத்தனை சிறப்பு.

    அதோடு காசி கண்டம் தீர்த்தமாம் நதிகளை நான்கு வகை யாகப் பிரிக்கிறது, தர்ம, அர்த்த, காம, மோட்சம் என்ற கணக்கில் தானம், தர்மம் செய்வதற்குரிய தீர்த்தமாக மட்டுமே சில தீர்த்தங்கள் உள்ளன. அவை தர்ம தீர்த்தம் எனப்படுகின்றன.

    சில தீர்த்தங்கள் வர்த்தகத்துக்கு மட்டுமே உகந்தவையாக இருக் கின்றன. அவை அர்த்த தீர்த்தம் எனப்படுகின்றன. வேறு சில தீர்த்தங்கள் வாழ்க்கைக்கு இன்பம் கூட்டுவதாக, உல்லாசப் பயணங்கள் போன்றவற்றுக்கு ஏற்றவையாக இருக்கின்றன. அவை காமதீர்த்தம் எனப்படும்.

    சில தீர்த்தங்கள் அறிவு வளர்ச்சிக்கும் ஆன்ம ஞானத்துக்கும் வீடுபேறுக்கும் வழிகாட்டு பவையாகத் திகழ்கின்றன. அவை மோட்ச தீர்த்தம் எனப்படும். கங்கை நதிக்குள்ள சிறப்பு என்ன வென்றால் இந்த நான்கையும் அது தன்னுள் கொண்டதே ஆகும்.

    பல புராதன மூடப் பழக்க வழக்கங்களும், நவநாகரிக வாழ்க்கை முறைகளும் பலவகையாலும் இன்று கங்கையை அசுத்தப்படுத்த முயல்கின்றன. அவற்றின் முயற்சி பலிக்க வில்லை என்று இன்றைய விஞ்ஞானம் ஏற்கிறது.

    கங்கை நீரில் நச்சுக் கிருமிகள் நீடித்து உயிர் வாழ முடியாமல் நசித்துப் போகின்றன வாம். ஏன், எப்படி என்று புரியாமல் வளர்ந்து வரும் விஞ்ஞானமே திகைக்கிறது; மெய்ஞானம் காட்டும் தெய்வ சக்தி கங்கைக்கு உண்டு என்றும் கூறாமல் கூறுகிறது.

    வாரணாசி வட்டத்துக்குள் பிறைச் சந்திர வடிவத்தில் ஓடும் கங்கைக்கு அறுபத்து நான்கு ஸ்நான கட்டங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் தற்பெருமையல்ல; தன் பெருமை பேசுகின்றன. இவை தீவிர 98 பலவகைத் தீர்த்தங்கள் இருப்ப தாக அல்லது இருந்திருப்பதாகத் தெரிகிறது. எல்லாத் துறைகளிலும் நீராடுவது விசேஷம்தான். என்றாலும் முக்கியமாக 5 கட்டங்கள் ஸ்கானாத்துக்கும் பித்ருக்களுக்குப் பிண்டம் போடவும் எடுத்தவை. அவற்றில் வைதிக முறைப்படி புரோகிதர் களின் துணை கொண்டு சிரத்தையோடு கடமைகளைச் செய்ய வேண்டும். அது ஆயுளுக்கும் சிரேயஸ் தரும். அதோடு கங்கையில் படகில் பயணம் செய்தபடி அத்தனை துறைகளையும் தரிசனம் செய்யும் பாக்கியத்தையும் பெறலாம்.

    தென்முனையில் உள்ள அசி கங்கா சங்கமம், தசாச்வமேதம் பஞ்சகங்கை, வரணாசங்கமம் என்னும் ஆதிகேசவ கட்டம், மணி கர்ணிகா கட்டம் ஆகியவையே அவை. வடகிழக்கில் உள்ள வரணாசங்கமமே இறுதிக் கட்டம். ஐந்து கட்டங்களிலும் பிண்டம் போட்டுத் திரும்பும் பொழுது படகிலேயே கங்கைக்கு வழிபாடு செய்வது மரபு. கிருதயுகத்தில் திரிசூல வடிவத்திலும், திரேதாயுகத்தில் சக்ர வடிவத்திலும், துவாபரயுகத்தில், தேர் வடிவத்திலும், கலியுகத்தில் சங்கு வடிவத்திலும் காசி க்ஷேத்திரம் இருப்பதாகக் காசி ரகசியம் கூறுகிறது.

    காசி விசுவநாதர் பன்னிரண்டு ஜோதிர் லிங்கங்களில் ஒருவர். இனிப்புக்குப் பெயர் போனது தீபாவளிப் பண்டிகை என்பதை விசுவநாதர் உணர்த்தும் முறையே தனி. இவரது கருவறைக்கு வெளியே உள்ள முன் மண்டபத்தில், ஒரு சிவலிங்கம் தொட்டியினுள் உள்ளது.

    தீபாவளிக்கு மறுநாள் இந்த லிங்கத்தைச் சுற்றி லட்டுக்களால் தேர் உருவாக்குவார்கள். விசுவநாதரின் முன்னேயும் பல வகை இனிப்புப்பண்டங்களை அடுக்கி வைப்பார்கள். நிவேதனம் ஆனபின் பக்தர்களுக்கு வழங்கு வார்கள். அதனால் தீபாவளிக்கும் மேலாக மிட்டாய்த்திருவிழா என்றே இது புகழ் பெற்று விட்டது.

    தீபாவளிக்குப் பின் மூன்றாவது நாள் காசியின் முக்கிய ஆலயங்கள் அனைத்துமே அன்னக் கூடமாகக் காட்சி அளிக்கும். பலவகைத் தின்பண்டங்களும் அன்னமும் மலைபோல் குவிந்து அன்னபூரணியின் ஆட்சிக்குக் கட்டியம் கூறும்.

    விசுவநாதரோடு காசியில் தீபாவளி கொண்டாடுபவர்கள் பாக்கியசாலிகள். வெந்நீரில் குளித்துக் 'கங்கா நீராடல் ஆச்சா?' என்று கேட்காமல் நிஜமாகவே கங்கையில் நீராடும் வாய்ப்பு கிட்டுகிறதல்லவா?

    காசி கண்டம் கூறும் கணக்குப்படி தாமே உண்டான சுயம்புவ லிங்கங்கள் 11, தேவர்கள் ஸ்தாபித்த லிங்கங்கள் 46, ரிஷி முனிகள் பிரதிஷ்டை செய்த லிங்கங்கள் 47, கிரகங்கள் வணங்கிய லிங்கங்கள் 7, கணங்கள் வழிபட்ட லிங்கங்கள் 40, மற்ற பக்தர்கள் நிறுவிய லிங்கங்கள் 295. ஆகமொத்தம் 511. இவற் றைத் தவிர பாரதத்தின் மற்ற புகழ்பெற்ற ஷேத்திரங்களை நினைவு கூரும் லிங்கங்கள் 65 உள்ளன.

    காசிக்கு பிறகு கயா, பாட்னா, கொல்கத்தா வழியாக கங்கை நதி கடலில் கலக்கிறது.

    ×