search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bengal Rural Polls"

    • பஞ்சாயத்து தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது.
    • இதற்கு மேற்கு வங்காள மக்களுக்கு முதல் மந்திரி மம்தா பானர்ஜி நன்றி தெரிவித்தார்.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநிலத்தில் ஜில்லா பரிஷத், பஞ்சாயத்து சமிதி மற்றும் கிராம பஞ்சாயத்து ஆகிய மூன்றடுக்கு பஞ்சாயத்து அமைப்புக்கான தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

    இதில் கிராம பஞ்சாயத்து அளவில் திரிணாமுல் காங்கிரஸ் 29,665 இடங்களில் வெற்றி பெற்று 1,527 இடங்களில் முன்னிலை வகித்தது.

    எதிர்க்கட்சியான பா.ஜ.க. 8,021 இடங்களில் வெற்றி பெற்று 406 இடங்களில் முன்னிலை வகித்தது.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2,472 இடங்களில் வெற்றி பெற்று 239 இடங்களிலும், அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் 2,094 இடங்களிலும் வெற்றி பெற்று 131 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

    இந்நிலையில், பஞ்சாயத்து தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றதற்கு மேற்கு வங்காள மக்களுக்கு முதல் மந்திரி மம்தா பானர்ஜி நன்றி தெரிவித்தார்.

    இதுதொடர்பாக மம்தா வெளியிட்டுள்ள பேஸ்புக் செய்தியில், கிராமப்புற வங்காளத்தில் அனைத்து வழிகளிலும் திரிணாமுல் காங்கிரஸ் தான் உள்ளது. திரிணாமுல் மீதான மக்களின் அன்பு, பாசம் மற்றும் ஆதரவுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். மாநில மக்களின் இதயத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மட்டுமே உள்ளது என்பதை இந்தத் தேர்தல் நிரூபித்துள்ளது என பதிவிட்டுள்ளார்.

    • வன்முறை சம்பவங்களால் பாதிக்கப்பட்ட 696 வாக்குச்சாவடி களில் நேற்று மறுவாக்குப்பதிவு நடந்தது.
    • ஆளுங்கட்சிக்கு கடும் போட்டியாக விளங்கிய பாஜக 3,790 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது.

    மேற்கு வங்காள மாநிலத்தில் தொடர் வன்முறைகளுக்கு மத்தியில் கடந்த 8-ந்தேதி சனிக்கிழமை உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. வன்முறைக்கு இடையிலேயும் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு நடந்தது. வாக்காளர்கள் ஆர்வத்துடன் தங்கள் ஜனநாயக கடமை ஆற்றினார்கள். 80.71 சதவீத ஓட்டுகள் பதிவானது. வன்முறை சம்பவங்களால் பாதிக்கப்பட்ட 19 மாவட்டங்களுக்கு உள்ளிட்ட 696 வாக்குச்சாவடிகளில் நேற்று பலத்த பாதுகாப்புடன் மறுவாக்குப்பதிவு நடந்தது. சில இடங்களில் இந்த மறுவாக்குப்பதிவுக்கு எதிர்ப்பு கிளம்பிய போதிலும் 69.85 சதவீதம் ஓட்டுகள் பதிவானது.

    இந்த தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா, காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சிகள் இடையே கடுமையான போட்டி நிலவியது. தேர்தலில் பதிவான வாக்குகள் பலத்த பாதுகாப்புடன் இன்று எண்ணப்படுகின்றன.

    காலையில் ஓட்டு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து  முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் முன்னிலை பெற்றது. மதியத்திற்கு பிறகு முடிவுகள் வெளியாகத் தொடங்கின. இதில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியே ஆதிக்கம் செலுத்தியது.

    மாலை நிலவரப்படி முடிவுகள் அறிவிக்கப்பட்ட 23,344 இடங்களில் 16,330 இடங்களை திரிணாமுல் காங்கிரஸ் கைப்பற்றியது. மேலும் 3,002 இடங்களில் முன்னிலை பெற்றிருந்தது. கடும் போட்டியாக விளங்கிய பாஜக 3,790 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. 802 இடங்களில் முன்னிலை பெற்றது. மொத்தம் 63,229 கிராம பஞ்சாயத்து இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது.

    இடது முன்னணி 1365 இடங்களில் வெற்றி பெற்றது. இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மட்டும் 1206 இடங்களை பிடித்தது. இடது முன்னணி 621 இடங்களில் முன்னிலை0யில் இருந்தது. காங்கிரஸ் கட்சி 886 இடங்களில் வெற்றி பெற்றதுடன், 256 இடங்களில் முன்னிலையில் இருந்தது.

    புதிதாக ஆரம்பிக்கப்பட்ட இந்திய மதச்சார்பற்ற முன்னணி 937 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. 190 இடங்களில் முன்னிலையில் இருந்தது. திரிணாமுல் காங்கிரஸ் அதிருப்தி வேட்பாளர்கள் உள்ளிட்ட சுயேட்சைகள் 418 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். 73 இடங்களில் முன்னிலையில் இருந்தனர்.

    ஜில்லா பரிசத் முடிவுகளைப் பொருத்தவரை இதுவரை 18 ஜில்லா பரிசத் முடிவுகள் வெளியிடப்பட்டன. அனைத்திலும் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றது. 30 இடங்களில் முன்னிலையில் உள்ளது. மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒரு இடத்தில் முன்னிலை வகிக்கிறது. மொத்தம் 928 ஜில்லா பரிஷத் இடங்கள் உள்ளன. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

    தேர்தல் முடிவுகளால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகத்தில் உள்ளனர். வெற்றியை கொண்டாடி வருகின்றனர். இந்த வெற்றியானது, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் மாநில அரசு மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காட்டுவதாகவும், பாஜகவின் பிரித்தாளும் அரசியலையும், காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எதிர்மறை அரசியலையும் மக்கள் நிராகரித்ததை காட்டுவதாகவும் திரிணாமுல் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குணால் கோஷ் தெரிவித்தார்.

    வாக்கு எண்ணிக்கை முழுமையாக முடிய இரண்டு நாட்கள் ஆகலாம் என்றும், வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகளை தொகுத்து வெளியிடுதற்கு அதிக நேரம் ஆகும் எனவும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ×