search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ayyappa devotee kills"

    சபரிமலையில் சேலத்தை சேர்ந்த அய்யப்ப பக்தரை யானை மிதித்து கொன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    சேலம்:

    சேலம் பள்ளப்பட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் பரமசிவம் (வயது 35). இவர் சேலத்தில் உள்ள ஒரு வெள்ளிப்பட்டறையில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் பரமசிவம் சபரிமலை அய்யப்பனை தரிசிப்பதற்காக மாலை அணிந்து விரதம் மேற்கொண்டு வந்தார்.

    இந்த பகுதியில் இருந்து கடந்த 7-ந்தேதி (திங்கட்கிழமை) பரமசிவம் உள்பட 30 பக்தர்கள் இருமுடி கட்டி அய்யப்பனை தரிசிப்பதற்காக 2 வேன்களில் சபரிமலைக்கு புறப்பட்டனர். இதில் ஒரு வேனில் 15 பக்தர்களும், மற்றொரு வேனில் 15 பக்தர்களும் அமர்ந்திருந்தனர்.

    வேன், பெரும்வழி என்ற இடத்தில் வந்ததும் அங்கு வேனை நிறுத்தி விட்டு பரமசிவம் உள்பட 15 பக்தர்களும் 48 மைல் தூரத்தில் இருக்கும் சபரிமலைக்கு பாத யாத்திரையாக நடந்து சென்று கொண்டிருந்தனர்.

    மற்றொரு பிரிவினர் பம்பையில் வேனை நிறுத்தி அங்கிருந்து பாதயாத்திரையாக சபரிமலைக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர்.

    நள்ளிரவு 12 மணி அளவில் பரமசிவம் உள்பட 15 பேரும் அழுதா இறக்கம் அருகே சென்றபோது, பரமசிவம் மட்டும் தனியாக ½ கிலோ மீட்டர் தூரம் முன்னாடி சென்று விட்டார்.

    அப்போது அந்த வழியாக காட்டு யானை ஒன்று வந்தது. அந்த யானை பரமசிவத்தின் தலையை திடீரென தும்பிக்கையால் மேலே தூக்கியது. இதனால் அவர் அய்யோ என அலறினார். பின்னர் தலையோடு சேர்ந்து உடலை ஓங்கி தரையில் அடித்து, காலால் மிதித்து கொன்றது.

    பரமசிவத்தின் அலறலை கேட்டு பின்னால் வந்து கொண்டிருந்த பக்தர்கள் அங்கு ஓடி வந்தனர். ஆனால் பரமசிவம் தலை நசுங்கி ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்தார்

    இது பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு முட்களி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். உடல் பிரேத பரிசோதனைக்காக அங்கு வைக்கப்பட்டுள்ளது.

    இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் மகன்கள் உள்ளனர். பரமசிவம் பலியான தகவல் அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. தகவலை அறிந்ததும் மனைவி மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். #tamilnews
    பரமத்திவேலூர் அருகே மொபட் மீது டேங்கர் லாரி மோதிய விபத்தில் அய்யப்ப பக்தர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கந்தம்பாளையம் அருகே உள்ள மணியனூரை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 47). இவர் திருச்செங்கோட்டில் உள்ள தனியார் இருசக்கர வாகன விற்பனை நிறுவனத்தில் விளம்பர வாகன டிரைவராக பணியாற்றி வந்தார். மேலும் இவர் சபரிமலை செல்வதற்காக மாலை அணிந்து இருந்தார்.

    இவரது உறவினர் கணேசன் (59). இவரை கரூரிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு உதயகுமார் மொபட்டில் அழைத்து சென்றார். அப்போது நாமக்கல்-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் பரமத்திவேலூர் பிரிவு சாலை அருகே சென்றபோது பின்னால் வந்த டேங்கர் லாரி எதிர்பாராதவிதமாக மொபட் மீது மோதியது. இந்த விபத்தில் உதயகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவரது உறவினர் கணேசன் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

    இந்த விபத்து குறித்து பரமத்தி வேலூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உதயகுமாரின் உடலை மீட்டு பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து டேங்கர் லாரி டிரைவர் புதன்சந்தை அருகே உள்ள களங்காணியை சேர்ந்த துரைசாமியை (55) கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். உறவினரை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற அய்யப்ப பக்தர் விபத்தில் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. #tamilnews
    ×