search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Anbu jothi Ashram Case"

    • கைதான ஆசிரம மேலாளர் பிஜூமோன், பணியாளர்கள் அய்யப்பன், கோபிநாத் ஆகிய 3 பேரின் காவல் முடிவடைந்தது.
    • ஆசிரம மேலாளர் பிஜூ மோன் உள்ளிட்ட 3 பேருக்கும் மேலும் 14 நாடகள் காவலை நீட்டித்து நீதிபதி புஷ்பராணி உத்தரவிட்டார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள குண்டலப்புலியூரில் அன்பு ஜோதி ஆசிரமம் இயங்கி வந்தது.

    இந்த ஆசிரமத்தில் மன நலம் பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்றோர் அடித்து துன்புறுத்தப்பட்டது, அங்கிருந்த பெண்கள் பாலியல் வன் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் வெளியானது.

    இந்த புகார்களின் அடிப்படையில் ஆசிரம நிர்வாகி ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா ஜூபின், ஆசிரம மேலாளர் பிஜூமோன், பணியாளர்கள் சதீஷ், அய்யப்பன், கோபிநாத் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இவர்களில் ஆசிரம நிர்வாகி ஜூபின்பேபி, அவரது மனைவி மரியா ஜூபின், பிஜூமோன், சதிஷ், அய்யப்பன், கோபிநாத் ஆகிய 6 பேரை காவலில் எடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். பின்னர் அவர்கள் 6 பேரையும் மீண்டும் விழுப்புரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    இந்த நிலையில் இந்த வழக்கில் கைதான ஆசிரம மேலாளர் பிஜூமோன், பணியாளர்கள் அய்யப்பன், கோபிநாத் ஆகிய 3 பேரின் காவல் முடிவடைந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரும் விழுப்புரம் வேடம்பட்டு சிறையில் இருந்தவாறு வீடியோ கான்பரன்சிங் மூலம் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

    இதனை தொடர்ந்து ஆசிரம மேலாளர் பிஜூ மோன் உள்ளிட்ட 3 பேருக்கும் மேலும் 14 நாடகள் காவலை நீட்டித்து நீதிபதி புஷ்பராணி உத்தரவிட்டார். வருகிற 14-ந் தேதி வரை அவர்களுக்கு காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    • கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையத்தில் சுற்றித்திரிந்த ஒருவரை போலீசார் பிடித்து காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
    • பெங்களூருவை சேர்ந்த ஒரு நபரும், கோயம்புத்தூரை சேர்ந்த ஒரு நபரும் தனது சொந்த ஊருக்கு சென்றது தெரியவந்தது.

    கடலூர்:

    விக்கிரவாண்டி அடுத்த குண்டலப்புலியூரில் உள்ள அன்பு ஜோதி ஆசிரமம் உரிய அனுமதியின்றி இயங்கி வந்தது. அங்கு தங்கியிருந்த பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பாக ஆசிரமத்தை நிர்வாகித்து வந்த ஜூபின் பேபி உள்பட 9 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

    அங்கிருந்து மீட்கப்பட்ட 143 பேரை பல்வேறு ஆசிரமங்களுக்கு அனுப்பி வைத்தனர். அந்த வகையில் மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தவர்களில் 13 பேர் கடலூர் வன்னியர் பாளையத்தில் அரசு அங்கீகாரம் பெற்று செயல்பட்டு வரும் மனநல காப்பகத்திலும், 10 பேர் ஆல்பேட்டையில் உள்ள மனநல காப்பகத்திலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வன்னியர் பாளையத்தில் உள்ள காப்பகத்தில் இருந்து 4 பேர் பின்பக்க கதவை உடைத்து தப்பிவிட்டனர். இதுகுறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து 4 பேரை தேடி வந்தனர்.

    இதில் அன்றைய தினமே கடலூர் திருப்பாதி ரிப்புலியூர் ரெயில் நிலையத்தில் சுற்றித்திரிந்த ஒருவரை போலீசார் பிடித்து காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும் 3 பேரை போலீசார் தேடிவந்தனர்.

    கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில், துணை போலீஸ் சூப்பிரண்டு கரிக்கால் பாரிசங்கர் தலைமையில் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி சப்-இன்ஸ்பெக்டர்கள் தவச்செல்வம், சங்கரலிங்கம் மற்றும் போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

    தப்பிச் சென்ற 3 பேரும் பஸ் அல்லது ரெயில் மூலம் தப்பித்து சென்று இருக்கலாம் என போலீசார் அவர்கள் புகைப்படம் கொண்டு தீவிர விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் சொந்த ஊரில் உள்ள உறவினர்கள் மற்றும் அதன் அருகாமையில் உள்ள போலீஸ் நிலையத்தில் தப்பித்து போனவர்கள் வந்தால் தகவல்கள் தெரிவிக்க வேண்டுமென அறிவுறுத்தினர்.

    இந்நிலையில் பெங்களூருவை சேர்ந்த ஒரு நபரும், கோயம்புத்தூரை சேர்ந்த ஒரு நபரும் தனது சொந்த ஊருக்கு சென்றது தெரியவந்தது. அவர்களை கடலூருக்கு அழைத்துவர அவர்களது உறவினர்களிடம் கடலூர் போலீசார் கூறியுள்ளனர். மேலும் ஒருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • ஆசிரமத்தில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், பொருட்கள் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
    • முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 23 பேர் தொடர் கண்காணிப்பில் உள்ளனர்.

    விக்கிரவாண்டி:

    கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்தவர் ஜூபின் பேபி. இவர் கடந்த 2004-ம் ஆண்டு முதல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள குண்டலப்புலியூரில் அன்பு ஜோதி ஆசிரமத்தை தொடங்கினார். அங்கு 2021-ம் ஆண்டு மன நலம் பாதிக்கப்பட்ட திருப்பூரை சேர்ந்த ஜபருல்லா மாயமானது குறித்து அவரது உறவினர் கெடார் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் கண்டு பிடிக்காத நிலையில் சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தனர்.

    கோர்ட்டு உத்தரவின்படி கடந்த 10-ந் தேதி செஞ்சி டி.எஸ்.பி. பிரியதர்ஷினி தலைமையிலான போலீசார் ஆசிரமத்தில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு 145 பேர் தங்க வைக்கப்பட்டு இருந்ததும் ஆசிரமம் அனுமதியின்றி செயல்பட்டதும் தெரிய வந்தது.

    ஆசிரமத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள சிலருக்கு பாலியல் தொந்தரவு, சித்ரவதை மற்றும் பலர் காணாமல் போனதாக புகார்கள் அளித்தனர். இதுகுறித்து தனித்தனி புகாரின் பேரில் கெடார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இதனை தொடர்ந்து ஆசிரம நிர்வாக ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா மற்றும் ஊழியர்கள் உள்பட 9 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் ஆசிரமத்திலிருந்த ஜபருல்லா உள்பட 53 பேரை பெங்களூருவில் ஜூபின் பேபி நண்பர் ஆட்டோ ராஜா நடத்தும் காப்பகத்துக்கு அனுப்பி வைத்ததாகவும், அதில் 11 பேர் தப்பி ஓடி விட்டதாகவும் போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.

    இந்த நிலையில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது. இதனை தொடர்ந்து கெடார் போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு ஆவணங்களை செஞ்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ஜோதி, கஞ்சனூர் இன்ஸ்பெக்டர் தங்கம் ஆகியோர் விழுப்புரத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி. போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் ரேவதியிடம் ஒப்படைத்தனர். அதனை தொடர்ந்து ஆசிரமத்தில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், பொருட்கள் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவர்கள் விசாரணையை தொடங்கினார்கள்.

    நேற்று சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு அருண் பாலகோபாலன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோமதி, இன்ஸ்பெக்டர்கள் ரேவதி, குமார், தனலட்சுமி, கார்த்திகேயன் ஆகியோர் அடங்கிய குழுவினர் குண்டலப்புலியூரில் உள்ள அன்பு ஜோதி ஆசிரமத்திற்கு சென்றனர்.

    இவர்களுடன் தடயவில் துணை இயக்குனர் சண்முகம் தலைமையிலான குழுவினரும் சென்றனர். அவர்கள் ஆசிரமத்தில் சோதனை நடத்தினார்கள்.

    இந்த நிலையில் குண்டலப்புலியூர் ஆசிரமத்தில் மீட்கப்பட்டவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு பின் அரசு அனுமதியுடன் இயங்கும் வேறு காப்பகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.

    அதன்படி கடலூர் புதுப்பாளையத்தில் அரசு நிதி உதவியுடன் இயங்கி வரும் ஓயாசிஸ் தொண்டு நிறுவனத்தின் கருணா மனநல காப்பகம் மற்றும் மஞ்சக்குப்பம் ஆல்பேட்டையில் இயங்கி வரும் டாக்டர் தவராஜ் மனநல காப்பகம் ஆகிய 2 இடங்களில் குண்டலப்புலியூர் ஆசிரமத்தில் இருந்து மீட்கப்பட்ட 23 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    இதற்கிடையே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற ஒரு ஆண் குழந்தை, 7 பெண்கள் உள்பட 28 பேர் 2 வேன்களில் சென்னை கீழ்பாக்கம் மனநல மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    தற்போது முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 23 பேர் தொடர் கண்காணிப்பில் உள்ளனர்.

    • கேரள மாநிலத்தை சேர்ந்த ஜூபின்பேபி மற்றும் அவரது மனைவி மரியாஜூபின் ஆகியோர் ஆசிரமத்தை நிர்வகித்து வந்துள்ளனர்.
    • தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவர் ஏ.எஸ்.குமாரி முண்டியம்பாக்கம் ஆஸ்பத்திரிக்கு நேரில் வந்து, அங்கு சிகிச்சை பெற்று வரும் பெண்களிடம் விசாரணை நடத்தினார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த குண்டலப்புலியூரில் அன்பு ஜோதி ஆசிரமம் இயங்கி வந்தது. இதை கேரள மாநிலத்தை சேர்ந்த ஜூபின்பேபி மற்றும் அவரது மனைவி மரியாஜூபின் ஆகியோர் நிர்வகித்து வந்துள்ளனர்.

    ஆசிரமத்தில் தங்கியிருந்தவர்களில் திருப்பூரை சேர்ந்த ஜாபருல்லா என்பவர் மாயமானதாக எழுந்த புகாரை தொடர்ந்து, சென்னை ஐகோர்ட்டு உத்தரவுப்படி வருவாய்த்துறை மற்றும் போலீசார் ஆசிரமத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அதில், உரிய அனுமதியின்றி ஆசிரமம் இயங்கியதும், அங்கு தங்கியிருந்த பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை, குரங்குகளை விட்டு கடிக்கவைப்பது, சித்ரவதை செய்ததும் தெரியவந்தது. இதுகுறித்த புகார்களின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜூபின்பேபி உள்பட 9 பேரை கைது செய்தனர்.

    மேலும் இங்கிருந்து மீட்கப்பட்ட 143 பேருக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு, பல்வேறு ஆசிரமங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறார்கள். தற்போது ஆஸ்பத்திரியில் 16 பெண்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவர் ஏ.எஸ்.குமாரி முண்டியம்பாக்கம் ஆஸ்பத்திரிக்கு நேரில் வந்து, அங்கு சிகிச்சை பெற்று வரும் பெண்களிடம் விசாரணை நடத்தினார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தற்போது ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் 16 பெண்களிடம் விசாரித்தபோது, 2 வடமாநில பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளனர் என்பது உறுதியாகி உள்ளது. மேலும் பல பெண்கள் பல்வேறு துன்புறுத்தலுக்கு ஆளாகி இருக்கிறார்கள். அதோடு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டு இருந்த பலரை அடித்து துன்புறுத்தி உள்ளனர்.

    பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.யிடம் ஒப்படைக்க உத்தரவிட்டு உள்ளார். கண்டிப்பாக நேர்மையான விசாரணை நடைபெறும்.

    எங்களின் ஆய்வு, விசாரணை அறிக்கையை அரசிடம் சமர்ப்பிப்போம். ஆசிரமத்தில் காணாமல்போனவர்களின் பெயர் பட்டியல் இதுவரை கொடுக்கப்படவில்லை. விசாரணையின் முடிவுக்குள் பெயர் பட்டியல் பெற்று அரசிடம் ஒப்படைப்போம்.

    மாநிலத்தில் உள்ள ஆதரவற்றோர் காப்பகம், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான காப்பகங்களை தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். அங்குள்ள குறைகளை சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர், துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்து சரி செய்வதற்கு உத்தரவிட்டுள்ளோம்.

    இது போன்ற காப்பகங்களை அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் நடத்தி வருகின்றன. இனிமேல் காப்பகங்களை அரசே ஏற்று நடத்த முதலமைச்சரிடம் பரிந்துரை செய்ய உள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தேசிய மகளிர் ஆணைய முதன்மை ஒருங்கிணைப்பாளர் காஞ்சனா தட்ரா விழுப்புரம் வந்துள்ளார்.
    • சுற்றுலா மாளிகையில் தங்கி உள்ள காஞ்சனா தட்ரா இன்று குண்டலப்புலியூர் செல்கிறார். அங்கு ஆசிரமத்தில் ஆய்வு செய்கிறார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள குண்டலப்புலியூரில் அன்பு ஜோதி ஆசிரமம் செயல்பட்டு வந்தது.

    இந்த ஆசிரமத்தில் மனித உரிமை மீறல் நடைபெறுவதாகவும், பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாகவும் சர்ச்சை எழுந்தது.

    இது குறித்த புகாரின் பேரில் காப்பக உரிமையாளர் ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா ஜூபின் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது 13 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் இந்த விவகாரம் தேசிய மகளிர் ஆணையத்தின் கவனத்துக்கு சென்றது. இதனை தொடர்ந்து தேசிய மகளிர் ஆணைய முதன்மை ஒருங்கிணைப்பாளர் காஞ்சனா தட்ரா விழுப்புரம் வந்துள்ளார். இங்குள்ள சுற்றுலா மாளிகையில் தங்கி உள்ள அவர் இன்று குண்டலப்புலியூர் செல்கிறார். அங்கு ஆசிரமத்தில் ஆய்வு செய்கிறார்.

    ஆசிரமத்தில் நேற்று போலீசார் சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்களை கைப்பற்றி சென்றுள்ளனர். இந்த ஆவணங்களையும் தேசிய மகளிர் ஆணைய முதன்மை ஒருங்கிணைப்பாளர் காஞ்சனா தட்ரா பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். 

    • குண்டலப்புலியூர் ஆசிரம வழக்கில் கர்நாடகா, ராஜஸ்தான் என வழக்கு விசாரணை பட்டியலில் வெவ்வேறு மாநிலங்களும் வரிசையாக வந்து கொண்டிருக்கின்றன.
    • வழக்கு தொடர்பாக ஏற்கனவே அரசியல் கட்சி தலைவர்களும் சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

    விழுப்புரம்:

    கேரளாவை சேர்ந்த ஜூபின் பேபி கடந்த 2003-ம் ஆண்டு குண்டலப்புலியூர் வந்தார். அங்கு மன நலம் குன்றியோருக்கு உதவும் பணிகளை செய்து வந்த இவர் 2005-ம் ஆண்டில் அறக்கட்டைளை தொடங்கினார்.

    இதனை தொடர்ந்து காப்பகம் நடத்தி வந்த ஜூபின் பேபி கடந்த 2021-ம் ஆண்டில் போதை மறு வாழ்வு மையம் என்ற பெயரில் அரசிடம் அனுமதி கோரி விண்ணப்பித்தும் இதுவரை அனுமதி பெறாமல் இருந்தது போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது.

    காப்பகத்தை அனுமதி பெறாமல் தான் அவர் நடத்தி வந்ததாக தெரிவிக்கும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    குண்டலப்புலியூர் ஆசிரம வழக்கில் கர்நாடகா, ராஜஸ்தான் என வழக்கு விசாரணை பட்டியலில் வெவ்வேறு மாநிலங்களும் வரிசையாக வந்து கொண்டிருக்கின்றன.

    மாவட்ட போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே அரசியல் கட்சி தலைவர்களும் சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

    இந்நிலையில் அன்புஜோதி ஆசிரம வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

    ×