search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Aligarh Muslim University"

    • தாரிக் மன்சூர் உத்தரப் பிரதேச சட்ட மேலவைக்கு பாஜக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
    • 15 முதல் 20 தொகுதிகளில் தேர்தல் முடிவை தீர்மானிப்பதில் முஸ்லிம்கள் பெரும் பங்கு வகிக்கிறார்கள்.

    அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் தாரிக் மன்சூர், பாஜக துணைத்தலைவர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர், இந்து-முஸ்லிம் ஒற்றுமை குறித்த முகலாய இளவரசர் தாரா ஷிகோவின் போதனைகளை பரப்பும் திட்டத்தில் ஆர்எஸ்எஸ் உடன் நெருக்கமாக பணியாற்றுகிறார்.

    பாஜக தனது சிறுபான்மை பிரிவின் பொதுக்கூட்டங்கள் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள் மூலம் முஸ்லிம் மக்களில் ஒரு பிரிவினரின் ஆதரவை பெற்று வருகிறது. குறிப்பாக பாஸ்மாண்டா முஸ்லிம்கள் மத்தியில் தங்கள் செல்வாக்கை அதிகரிக்கும் வகையில் கூடுதல் கவனம் செலுத்துகிறது. அந்த வகையில், தமிழகத்தின் ராமேஸ்வரத்திற்குச் சென்ற உள்துறை மந்திரி அமித் ஷா, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் குறித்த புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற மறுநாள், பாஜக துணைத்தலைவர் நியமனம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    தாரிக் மன்சூர் உத்தரப் பிரதேச சட்ட மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த சில ஆண்டுகளில் பாஜகவால் மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நான்காவது முஸ்லிம் தலைவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    தாரிக் மன்சூர் உத்தரபிரதேச மாநிலம் அலிகாரைச் சேர்ந்தவர். முஸ்லிம்கள் வாக்காளர்களில் சுமார் 19% அங்கு உள்ளனர். மேலும் சுமார் 30 மக்களவைத் தொகுதிகளில் கணிசமான அளவில் முஸ்லிம்கள் உள்ளனர். அவற்றில் 15 முதல் 20 தொகுதிகளில் தேர்தல் முடிவை தீர்மானிப்பதில் பெரும் பங்கு வகிக்கிறார்கள்.

    தாரா ஷிகோ திட்டத்தில் மன்சூரின் பங்களிப்பு ஆர்எஸ்எஸ் தலைமையை வெகுவாக கவர்ந்ததாக அந்த அமைப்பின் நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார். அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் பாரசீகத் துறையை திறம்பட பயன்படுத்தி, மதங்களுக்கு இடையிலான உரையாடலில் ஷிகோவின் பெரும்பாலான படைப்புகளை மொழிபெயர்த்து, முஸ்லீம் சமூகத்திற்கு ஒரு சிறந்த தலைவராக முன்னிறுத்தினார். அது பற்றிய கருத்தரங்குகள் மற்றும் மாநாடுகளை நடத்தினார் எனவும் அந்த நிர்வாகி கூறினார்.

    தாரிக் மன்சூர் நியமனம் குறித்து பாஜகவின் சிறுபான்மை பிரிவு தலைவர் தலைவர் ஜமால் சித்திக் கூறுகையில், 'மன்சூர் ஒரு தேசியவாத முஸ்லிம். அவர் எப்போதும் தேசம்தான் முதலில் என்ற இலட்சியத்தை ஊக்குவித்து வருகிறார். அவர் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்களை சரியான பாதையில் அழைத்துச் சென்று, அவர்கள் தவறாக வழிநடத்தப்படுவதைத் தடுத்தார். அவரது நியமனம் கட்சியை விரிவுபடுத்த உதவும்' என்றார்.

    ×