search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Accounts Audit officers"

    சபரிமலை கோவிலுக்கு சொந்தமான தங்க நகைகள் மாயமாகி உள்ளதாக தேவசம் போர்டின் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு வந்த புகாரையடுத்து, தேவசம் போர்டின் கணக்கு தணிக்கைத்துறை அதிகாரிகள் இன்று ஆய்வு மேற்கொள்கிறார்கள்.
    திருவனந்தபுரம்:

    பிரசித்திபெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல பூஜை, மகர விளக்கு பூஜையின்போது பல ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் சபரிமலையில் குவிவார்கள்.

    மேலும் ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் சபரிமலை கோவில் நடை திறக்கப்படும் போதும் பக்தர்கள் சபரிமலைக்கு சென்று சாமி தரிசனம் செய்வார்கள். இந்த கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் அங்குள்ள உண்டியலில் காணிக்கை செலுத்துவார்கள்.

    தங்க, வெள்ளி நகைகள் மற்றும் பணமாக காணிக்கை செலுத்தப்படும். சபரிமலை கோவிலை நிர்வகித்து வரும் திருவிதாகூர் தேவசம் போர்டு இந்த காணிக்கைகளை எண்ணி தேவசம்போர்டுக்கு சொந்தமான பாதுகாப்பு அறையில் வைத்து பாதுகாத்து வருகிறது. ஆரன்முளா கோவிலையொட்டி உள்ள திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு சொந்தமான இடத்தில் இந்த பாதுகாப்பு அறை உள்ளது.

    தேவசம் போர்டு உதவி கணக்கு அதிகாரியின் தலைமையிலான 3 அதிகாரிகள் கொண்ட குழு இந்த பாதுகாப்பு அறைக்கு பொறுப்பு ஆகும். இந்த அறையை திறந்து காணிக்கை பொருட்களை வைக்கவோ, எடுக்கவோ வேண்டும் என்றால் 3 அதிகாரிகளும் இருந்தால் மட்டுமே முடியும். மேலும் ஆண்டுதோறும் பாதுகாப்பு அறையில் உள்ள காணிக்கை பொருட்களின் விவரங்களும் தணிக்கை செய்யப்படும்.

    இந்த நிலையில் சபரிமலை கோவிலுக்கு காணிக்கையாக கிடைத்த தங்கம், வெள்ளி நகைகள் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் மாயமாகி உள்ளதாக தேவசம் போர்டின் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார்கள் சென்றது. இதைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் பாதுகாப்பு அறையில் இருந்த பொருட்களையும், அதற்குரிய ஆவணங்களையும் ஆய்வு செய்தனர். அப்போது அது தொடர்பான கணக்குகள் முறையாக பராமரிக்கப்படவில்லை என்பது தெரிய வந்தது.

    இதுபற்றி லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் அறிக்கை தயார் செய்து அதை கேரள ஐகோர்ட்டில் தாக்கல் செய்தனர். இந்த அறிக்கையை பரிசீலித்த ஐகோர்ட்டு பாதுகாப்பு அறையில் உள்ள தங்கம், வெள்ளி மற்றும் பொருட்களின் விவரம் பற்றி உடனடியாக ஆய்வு செய்யும் படி தேவசம் போர்டுக்கு உத்தரவிட்டது.

    இதைத்தொடர்ந்து தேவசம் போர்டின் கணக்கு தணிக்கைத்துறை அதிகாரிகள் இன்று தங்கள் ஆய்வை மேற்கொள்கிறார்கள். அவர்கள் ஆய்வை முடித்த பிறகு அது தொடர்பான அறிக்கை கேரள ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்படும். அப்போது தான் சபரிமலையில் காணிக்கையாக கிடைத்த விலை உயர்ந்த பொருட்கள் எவ்வளவு மாயமாகி உள்ளது என்பது பற்றி தெரிய வரும்.

    இதற்கிடையில் திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பத்மகுமாரிடம் இதுபற்றி கேட்டபோது அவர் கூறியதாவது:-

    சபரிமலை கோவில் காணிக்கை பொருட்கள் வைக்கப்பட்டு இருக்கும் பாதுகாப்பு அறைக்கு தேவசம்போர்டு உதவி கணக்கு அதிகாரி தலைமையிலான 3 அதிகாரிகள்தான் பொறுப்பு. அதில் எந்த அதிகாரி மாறிச் சென்றாலும் புதிதாக வரும் அதிகாரியிடம் முறையாக பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டும். கடந்த 6 வருடங்களாக கணக்குகள் ஒப்படைக்கப்படவில்லை என்று தெரிய வந்துள்ளது. இதுபற்றி விசாரிக்கத்தான் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. தங்கம், வெள்ளி போன்ற எந்த காணிக்கை பொருட்களும் மாயமாகவில்லை. இது சிலரின் திட்டமிட்ட சதி ஆகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பா.ஜனதா மாநில பொதுச் செயலாளர் சுரேந்திரன் கூறும்போது சபரிமலை கோவிலுக்கு 2017-ம் ஆண்டு முதல் காணிக்கையாக வழங்கப்பட்ட 40 கிலோ தங்கம், 100 கிலோ வெள்ளி மாயமானதாக தகவல் கிடைத்து உள்ளது. இதுபற்றி தெரிந்து கொள்ள பக்தர்களுக்கு உரிமை உண்டு. தேவசம் போர்டு மந்திரி இதற்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றார்.

    சபரிமலை கோவிலுக்கு காணிக்கையாக கிடைத்த தங்கம், வெள்ளி மாயமானதாக வெளியாகி உள்ள தகவல் பக்தர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×