search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "29th Day of Fasting"

    • ரமலானின் பாக்கியமிக்க கடைசி இரவு.
    • நீங்கள் பிறை கண்டதும் நோன்பு வையுங்கள். மறு பிறை கண்டதும் நோன்பை விடுங்கள்

    ரமலானில் பாக்கியமிக்க கடைசி இரவு

    இஸ்லாமிய மாதங்கள் பெரும்பாலும் 30 'நாட்களில் நிறைவுபெறும். சில நேரங்களில் 29 நாட்களிலும் நிறைவடையும். அது ஆங்கில மாதங்களைப் போன்று 28 அல்லது 31 நாட்களிலோ நிறைவு பெறாது.

    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் பிறை கண்டதும் நோன்பு வையுங்கள். மறு பிறை கண்டதும் நோன்பை விடுங்கள்.' (அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி)

    இதே விதத்தில் தான் ரமலான் நோன்பை நோற்க வேண்டும். ரமலான் பிறை 29 நிறைவடைந்ததும் பெருநாள் பிறையான ஷவ்வால் மாத பிறையைக் காண வேண்டும். மேகமூட்டம் இருந்து பிறை தென்படாமல் போனாலும், மேகமூட்டமே இல்லாமல் பிறை தெரியவில்லை யென்றாலும் ரமலானை முப்பது நாட்களாக பூர்த்தி செய்ய வேண்டும். ரமலான் பிறை 29 நிறைவடைந்த அன்று பிறை தென்பட்டால், அன்றைய ரமலான் மாத நாட்கள் 29 நாட்களாக கணிக்கப்படும்.

    ரமலானின் கடைசி இரவு என்பது 29-வது இரவாக இருக்கலாம். அல்லது அன்றைய ரமலான் மாதம் முப்பது நாட்களாக இருந்தால், முப்பதாம் பிறை ரமலானின் கடைசி இரவாக இருக்கலாம். ஷவ்வால் பிறையான பெருநாள் பிறைக்கு முன்பு வருவதுதான் ரமலானின் கடைசி பிறை. ரமலானின் கடைசி இரவு அன்று நோன்பாளிகளுக்கு இறைவன் புறத்திலிருந்து வெகுமதிகள் வழங்கப்படுகிறது.

    அந்த வெகுமதிகளை பெற்றிட நோன்பாளிகள் ரமலானின் கடைசி பிறை இரவு அன்று அதிகமாக இரவு வணக்கம் புரியவேண்டும். அதிகமாக இறைவனிடம் பாவமன்னிப்புக் கோரவேண்டும். அன்றைய இரவிலும் சரி, ரமலானின் ஒவ்வொரு இரவிலும் சரி எல்லாம் வல்ல அல்லாஹ் நரக கைதிகளை விடுதலை செய்கின்றான். எனவே, ரமலானின் கடைசி இரவில் முடிந்த அளவுக்கு நரகத்திலிருந்து விடுதலை பெற இறைவனிடம் இருகரமேந்தி அதிகமாக இறைஞ்ச வேண்டும்.

    'ரமலான் மாதத்தின் முதல் இரவு வந்தால், ஓர் அழைப்பாளர் இவ்வாறு அழைப்பு கொடுக்கிறார். 'நன்மையை தேடுபவனே! நன்மையின் பக்கம் முன்னேறிச் செல்! தீமையை தேடுபவனே! தீமையை குறைத்துக்கொள்! நரகத்தில் இருந்து கைதிகளை விடுதலை செய்ய இறைவனுக்கு அதிகாரம் உள்ளது. மேலும், இது ரமலானின் ஒவ்வொரு இரவிலும் நீடிக்கிறது என்கிறார். இவ்வாறு நபி (ஸல்) கூறினார்கள்.' (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: திர்மிதி)

    'ரமலானின் கடைசி இரவு அன்று நோன்பாளிகளுக்காக அவர்களின் பாவம் மன்னிக்கப்படும் என நபி (ஸல்) கூறியபோது, 'அந்த இரவு லைலத்துல்கத்ர் இரவா? என நபி (ஸல்) அவர்களிடம் கேள்வி வைக்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'அவ்வாறில்லை. ஒரு வேலையாளுக்கு அவரின் ஊதியம் முழுமையாக வழங்கப்படுவதெல்லாம் அவர் தம் வேலையை முடித்து கொடுத்த பிறகு தான்' என நபி (ஸல்) விளக்கம் அளித்தார்கள். (அறி விப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: அஹ் மது)

    ரமலானின் கடைசி இரவு ஏன் பாக்கியம் நிறைந்ததாக அமைகிறது என்றால், அன்றைய இரவுதான் நரக விடுதலையின் கடைசி இரவாகும். அன்றைய இரவில் நரக கைதிகளுக்கு நரக விடுதலை கிடைக்கிறது. மேலும், அன்றைய இரவில் இறைவனின் கூலியாக பாவமன்னிப்பும் கிடைக்கிறது. இத்தகைய இரண்டு வாய்ப்புகளும் ரமலானின் கடைசி இரவில் வாய்ப்பதால் அந்த கடைசி இரவு பாக்கியம் நிறைந்ததாக ஆகி விடுகிறது. இந்த பாக்கியத்தை பாக்கியசாலிகள் தவிர வேறு எவரும் பெறமுடியாது.

    ×