search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "21th Day of Fasting"

    • இறைவனுடனான தொடர்பையும், நெருக்கத்தையும் ஏற்படுத்திக்கொள்வது.
    • இஃதிகாப் இருக்கும் வழக்கம் அரபிகளிடம் இருந்து வந்தது.

    ரமலானில் கடைபிடிக்கப்படும் `இஃதிகாப்'

    இஃதிகாப் என்பது படைப்பினங்களுடன் தொடர்பை முற்றிலும் துண்டித்து, உலக காரியங்களில் உள்ளத்தின் ஈடுபாட்டை நீக்கி, படைத்த இறைவனுடனான தொடர்பையும், நெருக்கத்தையும் ஏற்படுத்திக் கொள்வதாகும். இது ஒரு தொன்மையான வணக்க வழிபாடாகும்.

    நபிகள் (ஸல்) இஸ்லாமிய மார்க்கத்தை போதிப்பதற்கு முன்பே அரேபியாவில் அறியாமைக் காலத்திலும் கூட புனித கஅபாவில் இரவில் தனிமையில் தங்கி, இஃதிகாப் இருக்கும் வழக்கம் அரபிகளிடம் இருந்து வந்தது. புனித கஅபா எனும் ஆலயம் எழுப்பப்பட்டதின் நோக்கத்தை இறைவன் பின்வருமாறு விவரிக்கின்றான்.

    (இதையும் எண்ணிப் பாருங்கள்; கஅபா எனும்) வீட்டை நாம் மக்கள் ஒதுங்கும் இடமாகவும் இன்னும், பாதுகாப்பான இடமாகவும் ஆக்கினோம். இப்ராஹீம் (அலை) நின்ற இடத்தை தொழும் இடமாக நீங்கள் ஆக்கிக்கொள்ளுங்கள்' (என்றும் நாம் சொன்னோம்). இன்னும், என் வீட்டைச் சுற்றி வருபவர்கள், தங்கி இஃதிகாப் இருப்பவர்கள், ருகூவு, சுஜூது செய்பவர்கள் ஆகியோருக்காகத் தூய்மையாக அதனை வைத்திருக்க வேண்டும்' என்று இப்ராஹீமிட மிருந்தும், இஸ்மாயீலிடம் இருந்தும் நாம் உறுதி மொழி வாங்கினோம்.' (திருக்குர்ஆன் 2:125)

    நபி (ஸல்) அவர்கள் நபியாக தேர்வு செய்யப்படுவதற்கு முன்பு ஒவ்வொரு ஆண்டும் ரமலான் மாதம் ஹிரா குகையில் தனித்திருப்பார்கள். அவர்கள் தனித்திருந்த மூன்றாமாண்டு ரமலான் மாதம் பிறை 21 திங்கள் இரவில் முதல் இறைச்செய்தி கி.பி. 610 ஆகஸ்டு 10-ம் தேதி அன்று வருகிறது. இரண்டாவது இறைச்செய்தி 10 நாட்கள் கழித்து ஷவ்வால் முதல்பிறை வியாழன் காலை அருளப்பட்டது. இதுவே, ரமலானின் கடைசி பத்தில் இஃதிகாப் இருப்பதற்கும் ஷவ்வால் முதல்பிறை பெருநாளாக இருப்பதற்கும் காரணமாகும். ஹிஜ்ரி 2-ம் ஆண்டு நோன்பு கடமையாக்கப்பட்ட போது, ரமலானின் கடைசிப் பத்தில் இஃதி காப் இருப்பதும் கடமையாக்கப்பட்டு, நபி களால் கடைபிடிக்கப்பட்டது.

    நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரி 10-ம் ஆண்டு மரணமானார்கள். அதுவரைக்கும் ஒவ்வொரு ஆண்டும் ரமலானில் கடைசி பத்தில் இஃதிகாப் இருந்தார்கள். பத்ர் போர் நடந்ததால் ஹிஜ்ரி 2-ம் ஆண்டும், மக்கா போர் நடந்ததால் ஹிஜ்ரி 8-ம் ஆண்டும் இஃதிகாப் இருக்கவில்லை.

    ரமலானின் ஆரம்ப கால கட்டத்தில் நபி (ஸல்) அவர்கள் லைலதுல்கத்ர் இரவை அடைய விரும்பி ரமலானின் முதல் பத்திலும் இஃதிகாப் இருந்தார்கள். அதில் அந்த இரவு இல்லை என தெரிந்ததும், நடுப்பத்திலும் இருந்தார்கள். அதிலும் அந்த இரவு இல்லை என தெரிந்ததும் கடைசிப்பத்திலும் இருந்தார்கள்.

    மற்றொரு சந்தர்ப்பத்தில் 'ரமலானின் கடைசி பத்தில் இஃதிகாப் இருந்தார்கள். அவர்களுக்காக ஒரு கூடாரம் அமைக்கப்பட்டது. இதைப்பார்த்து நபியின் மனைவியர் ஹப்ஸாவும், ஜைனப் பின்த் ஜஹ்ஷ் ஆகியோரும் பள்ளியில் கூடாரம் அமைத்தனர். காலையில் நபி (ஸல்) இந்த காட்சியைக் கண்டபோது 'இதன் மூலம் நீங்கள் நன்மையைத் தான் நாடுகிறீர்களா?' என்று கேட்டு, அந்த மாதம் இஃதிகாப் இருப்பதை விட்டு விட்டார்கள். பிறகு (அடுத்த) மாதம் ஷவ்வாலில் பத்து நாட்கள் இஃதிகாப் இருந்தார்கள். (அறிவிப்பாளர்:ஆயிஷா (ரலி), நூல்: புகாரி)

    நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு ரமலானிலும் பத்து நாட்களே இஃதிகாப் இருப்பார்கள். அவர்கள் மரணித்த ஆண்டில் இருபது நாட்கள் இஃதிகாப் இருந்தார்கள். (அபூஹுரைரா (ரலி), நூல்:புகாரி 2044)

    ×