search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "1131 In temples"

    • நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நேற்று நரசிம்மர் சன்னதியில் தல விருட்ச மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பங்கேற்று தல விருட்ச மரக்கன்றை நட்டு வைத்தார்.

    நாமக்கல்:

    நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நேற்று நரசிம்மர் சன்னதியில் தல விருட்ச மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பங்கேற்று தல விருட்ச மரக்கன்றை நட்டு வைத்தார். அதன்பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் இன்று(நேற்று) ஒரே நாளில் 12 கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்று உள்ளது. சட்டப்பேரவை அறிவிப்பின்படி ஆஞ்சநேயர் கோவில் திருப்பணி நிறைவு பெற்று கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.

    தமிழகத்தில் இதுவரை 1,131 கோவில்களுக்கு குடமுழுக்கு விழா நடைபெற்றுள்ளது. கடந்த 28 மாதங்களில் 8,006 கோவில்களுக்கு திருப்பணிகள் நடத்த மாநில தொல்லியல் துறை அனுமதி வழங்கியுள்ளது. தி.மு.க.வினர் கோவில் திருப்பணிக்கு தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்கின்றனர்.

    ஈரோடு மணடலத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் ரூ.69.09 கோடிமதிப்பீட்டில் 345 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    தமிழகம் முழுவதும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் 1 லட்சம் தல விருட்ச மரங்கள் நடப்பட்டுள்ளன. தமிழகத்தில் 2,000 கிராம கோவில்களுக்கு ஒரு கால பூஜை செய்வதற்கு ரூ.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    2022-2023-ம் ஆண்டில் 2,500 கோவில்கள், 2023-2024-ம் ஆண்டு 2,500 கோவில்கள் என 5,000 கோவில்களுக்கு திருப்பணிகள் மேற்கொள்ள தலா ரூ.2 லட்சம் வீதம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 25 ஆயிரம் கோவில்களுக்கு திருப்பணிகள் முடிவுறும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 5,436 கோடி ரூபாய் மதிப்புள்ள 5,480 ஏக்கர் இந்து சமய அறநிலையத் துறை நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை மேலும் தொடரும்.

    திருச்செங்கோடு அர்த்தநா ரீஸ்வரர் கோவில் ரோப்கார் திட்டம் ஆய்வில் உள்ளது. மலைசார்ந்த கோவில்களில் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. 28 கோவில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சர்கர் ஆகலாம் என்ற அடிப்படையில் அர்ச்சகர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அதுபோல் 8 பெண்கள் ஓதுவார்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின் 36 ஓதுவார்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளன. 5 பெண்கள் அர்ச்சகர் பயிற்சி முடித்துள்ளனர். அவர்களுக்கும் நீதிமன்ற வழக்கு முடிந்தபின் அர்ச்சர்களாகும் சூழல் ஏற்படுத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இந்த நிகழ்ச்சியின்போது கலெக்டர் உமா, போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி., ராமலிங்கம் எம்.எல்.ஏ., நகர் அமைப்பு மண்டல திட்டக்குழு உறுப்பினர் மதுரா செந்தில், அறங்காவல் குழு தலைவர் நல்லுசாமி, அறங்காவலர்கள் ராம.சீனிவாசன், மல்லிகா குழந்தைவேலு, செல்வசீராளன், ரமேஷ்பாபு ஆகியோர் உடனிருந்தனர்.

    ×