search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "008 crore"

    லண்டனில் இருக்கும் விஜய் மல்லையாவுக்கு இங்குள்ள மது ஆலையின் பங்குகளை விற்பனை செய்ததன் மூலம் பொருளாதார அமலாக்கத்துறை 1008 கோடி ரூபாயை கைப்பற்றியுள்ளது. #Mallyashares #UBHLshares
    புதுடெல்லி:

    இந்திய அரசுக்கு சொந்தமான வங்கிகள் மற்றும் பல்வேறு தனியார் வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் பெற்று மோசடி செய்துள்ள பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையாவுக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் நடைபெற்று வருகின்றன.

    இந்த கடன் மோசடி தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதன் அடிப்படையில் அமலாக்க பிரிவினரும் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மல்லையாவுக்கு எதிராக செக் மோசடி வழக்குகளும் நிலுவையில் உள்ளன. தற்போது லண்டனில் தஞ்சம் அடைந்துள்ள விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வரும் நடவடிக்கையில் இந்திய அரசு ஈடுபட்டது.

    இந்திய பொருளாதார அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ. ஆகியவை ஒன்றாக இணைந்து லண்டன் நகரில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் விஜய் மல்லையாவுக்கு எதிராக சுமார் 150 பக்கங்களை கொண்ட  ஆவணங்களை தாக்கல் செய்தன. 

    விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது தொடர்பாக இந்திய அரசு லண்டன் வெஸ்ட்மின்ஸ்ட்டர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் தொடர்ந்துள்ள வழக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 4-ம் தேதி தொடங்கி நடைபெற்ற விசாரணையில் அவரை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு சமீபத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த தீர்ப்புக்கு எதிராக விஜய் மல்லையா மேல்முறையீடு செய்துள்ளார்.

    இதற்கிடையில், கருப்புப் பணப் பரிமாற்றம் தடுப்பு சட்டத்தின்கீழ் விஜய் மல்லையா குழுமம் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு சொந்தமான குழுமங்களை சேர்ந்த சுமார் 13 ஆயிரத்து 900 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கி வைத்துள்ளனர். 

    அவருக்கு கடன் அளித்த சில வங்கிகள் கூட்டாக தொடர்ந்த வழக்கில் விஜய் மல்லையாவுக்கு சொந்தமான சில சொத்துகளை ஏலம் விடுவதற்கும் கோர்ட் அனுமதி அளித்துள்ளது.



    அவ்வகையில், விஜய் மல்லையாவுக்கு சொந்தமான யுனைட்டட் பிரியூவரீஸ் மது ஆலையில் அவருக்கு சொந்தமான 74 லட்சத்து 4 ஆயிரத்து 932 பங்குகளை விற்பனை செய்து பணத்தை பெற்றுக்கொள்ள பொருளாதார அமலாக்கத்துறைக்கு கருப்புப்பணப் பரிமாற்ற தடுப்பு நீதிமன்றம் கடந்த 26-ம் தேதி அனுமதி அளித்தது. 

    இதனைதொடர்ந்து, தனியார் வங்கி பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த அந்த பங்கு பத்திரங்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தனர். பெங்களூருவில் உள்ள கடன் வசூலிப்பு தீர்ப்பாயம் இன்று அவற்றை விற்பனை செய்ததன் மூலம் ஆயிரத்து எட்டு கோடி ரூபாய் பெறப்பட்டதாக அமலாக்கத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    விஜய் மல்லையாவுக்கு சொந்தமாக இருக்கும் மேலும் பல பங்குகள் அடுத்த சில நாட்களில் விற்பனை செய்யப்படும் என அதிகாரிகள் குறிப்பிட்டனர். #Mallyashares #UBHLshares
    ×