என் மலர்
நீங்கள் தேடியது "விவசாய கருத்தரங்கு"
- விவசாயம், சுற்றுச்சூழல், பொருளாதாரம் ஆகிய மூன்றையும் ஒரே மேடையில் இணைக்கும் முக்கியமான கருத்தரங்கம்
- கருத்தரங்கில் கலந்துகொள்ள முன்பதிவு அவசியம்
ஈஷா காவேரி கூக்குரல் சார்பில், 'நீடித்த நிலைத்த நிரந்தர விவசாயம் - ஒரு முறை நடவு, ஆயுள் முழுவதும் வரவு' எனும் பிரம்மாண்ட கருத்தரங்கு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், அதியமான் பொறியியல் கல்லூரியில் வரும் 27 ஆம் தேதி நடைபெறுகிறது.
சத்குரு முன்னிலையில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில், மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார். மேலும் பல கட்சிகளை சேர்ந்த மக்கள் பிரதிநிகளும் இக்கருத்தரங்கில் பங்கேற்க உள்ளனர்.
இந்த கருத்தரங்கு தொடர்பான பத்திரிகையாளர் இன்று நடைபெற்றது. இதில் காவேரி கூக்குரல் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் பங்கேற்று பேசினார். கருத்தரங்கு தொடர்பாக பேசிய தமிழ்மாறன், "காவேரி கூக்குரல் இயக்கத்தின் சார்பில், மரம் சார்ந்த விவசாயத்தை மையமாகக் கொண்ட ஒரு மாபெரும் கருத்தரங்கு டிசம்பர் 27-ஆம் தேதி ஓசூரில் நடைபெறுகிறது.
தமிழ்நாடு முழுவதிலிருந்தும் சுமார் 10,000 விவசாயிகள் பங்கேற்க உள்ள இந்த நிகழ்ச்சியில், 5 தேசிய ஆராய்ச்சி நிறுவனங்களின் விஞ்ஞானிகள் மற்றும் 4 மாநிலங்களைச் சேர்ந்த முன்னோடி விவசாயிகள் கலந்துகொண்டு அறிவியல் அடிப்படையிலான தீர்வுகளை விவசாயிகளுடன் பகிர்ந்து கொள்ள உள்ளனர்.
இதுவரை இல்லாத அளவில், விவசாயம், சுற்றுச்சூழல், பொருளாதாரம் ஆகிய மூன்றையும் ஒரே மேடையில் இணைக்கும் முக்கியமான கருத்தரங்கமாக இது அமையவுள்ளது. இன்றைய சூழலில் விவசாய நிலங்களில் குறைந்து வரும் மண் வளம் என்பது சமூகத்திற்கான மிகப்பெரிய சவாலாக உருவாக்கி இருக்கிறது. குறிப்பாக சர்வதேச ஆராய்ச்சி அமைப்புகள், மண் வளம் குறைந்து வருவதால் உணவு உற்பத்தி வெகுவாக குறைந்து, எதிர்காலத்தில் மிகப்பெரிய உணவு பஞ்சம் ஏற்படும் என்று எச்சரித்து வருகின்றன.

தமிழ்மாறன்
இதற்கு தீர்வளிக்கும் வகையிலேயே சத்குரு காவேரி கூக்குரல் மற்றும் மண் காப்போம் இயக்கங்களை தொடங்கினார். விவசாயிகளின் பொருளாதாரம் மற்றும் ஒட்டுமொத்த சுற்றுச்சூழல் இரண்டும் ஒரே நேரத்தில் மேம்படும் வகையில் இத்திட்டங்களை அவர் வடிவமைத்தார். இவ்வியக்கங்கள் விவசாயிகள் மத்தியில் மரம் சார்ந்த விவசாயம் மற்றும் இயற்கை விவசாயத்தை முன்னெடுத்து களத்தில் மிகத் தீவிரமாக இயங்கி வருகின்றன.
குறிப்பாக மரம் சார்ந்த விவசாயம், விவசாய நிலங்களில் குறைந்து வரும் மண் வளத்தினை மீட்டெடுக்க மிகச் சிறந்த தீர்வாக இருக்கிறது. மரம் சார்ந்த விவசாயம் என்பது, வழக்கமான பயிர்களுக்கு இடையே, வரப்பு ஓரங்களில் மரங்களை வளர்ப்பதும் அல்லது பிரதானமாக மரங்களை வளர்த்து அதனிடையே ஊடுபயிராக விவசாயம் மேற்கொள்வதாகும். இந்த விவசாய முறை ஒரே நேரத்தில் விவசாயிகளின் பொருளாதாரம், மண் வளம், நிலத்தடி நீர்வளம் மற்றும் சுற்றுச்சூழலை மேம்படுத்துகிறது.
இது குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு மற்றும் பயிற்சி அளிக்கும் வகையில், காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் ஆண்டுதோறும் பல கருத்தரங்குகள், பயிற்சி வகுப்புகள் மற்றும் விவசாயிகள் கலந்தாலோசனை கூட்டங்களை நடத்துகிறோம்.அதன் தொடர்சியாகவே 'நீடித்த நிலைத்த நிரந்தர விவசாயம் - ஒரு முறை நடவு, ஆயுள் முழுவதும் வரவு' என்ற தலைப்பில் பிரம்மாண்ட ஒரு நாள் கருத்தரங்கை கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், அதியமான் பொறியியல் கல்லூரியில் வரும் டிச'27 ஆம் தேதி நடத்துகிறோம். இதில் தமிழ்நாட்டு விவசாயிகள் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.
இந்த நிகழ்வில், 10,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்கும் வகையில் இருக்கை, உணவு, போக்குவரத்து உள்ளிட்ட வசதிகளை ஏற்பாடு செய்துள்ளோம். இந்த கருத்தரங்கில் நாட்டின் முன்னணி வேளாண் விஞ்ஞானிகள் கலந்து கொண்டு, உயர்வருமானம் தரும் மரம் சார்ந்த விவசாயம் மற்றும் பயிர் தொழில்நுட்பங்களை பகிர உள்ளனர். இந்திய மர அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் முனைவர் ரவி, சந்தன சாகுபடியில் நடவு முதல் அறுவடை வரையுள்ள தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் சந்தை வாய்ப்புகளை விளக்குகிறார்.

இந்திய நறுமணப்பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானி முனைவர் கண்டியண்ணன், மிளகு சாகுபடியில் ரகங்கள், வளர் தொழில்நுட்பம் மற்றும் அதிக விளைச்சல் பெறும் வழிகளை பகிர்கிறார். இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனத்தின் முனைவர் செந்தில் குமார் மற்றும் சங்கரன் ஆகியோர் அவகேடோ உள்ளிட்ட உலகளாவிய தேவை கொண்ட பழங்கள், சிறு பழங்கள் மற்றும் நீடித்த நிரந்தர வருமான வாய்ப்புகள் குறித்து உரையாற்றுகிறார்கள்.
பூச்சியியல் வல்லுநர் செல்வம், ரசாயனமில்லா பூச்சி மேலாண்மை முறைகளையும், சென்னை ஐஐடி சிவசுப்பிரமணியன் மழைநீர் சேமிப்பு தொழில்நுட்பத்தையும் விளக்குகின்றனர். சந்தனம், ஜாதிக்காய் மற்றும் மிளகு விவசாயத்தில் முன்னோடிகளாக விளங்கும் 4 நான்கு மாநில விவசாயிகள் தங்கள் நேரடி அனுபவங்களை பகிர உள்ளனர்.
விற்பனை கண்காட்சி
விவசாயிகள் தங்களது உற்பத்தியை இடைத்தரகர்கள் இன்றி விற்பனை செய்யும் வகையில் இயற்கை விவசாய மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களின் விற்பனை கண்காட்சி நடைபெற உள்ளது. இதனுடன் மியாசகி மா, அவகோடா, சந்தனம், மிளகு மற்றும் 54 வகையான பழ மரக்கன்றுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளன.
சிறப்பு விருந்தினர்கள்
இக்கருத்தரங்கில் மக்களவை உறுப்பினர் தம்பிதுரை மற்றும் கோபிநாத், சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ், ஓசூர் மாநகராட்சி மேயர் சத்யா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மனோகரன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் இயக்குநர் சஞ்சய் கண்ணா மற்றும் டாடா மெடிக்கல் & டயக்னோஸ்டிக்ஸ் லிமிடெட் நிர்வாக இயக்குநர் கிரிஷ் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர்.
முன்பதிவு அவசியம்
இக்கருத்தரங்கில் கலந்து கொள்ள விரும்புவோர் 94425 90079, 94425 90081 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். இதில் தமிழ்நாட்டு விவசாயிகள் திரளாக பங்கேற்று பயன்பெற வேண்டும்" எனக் கூறினார்.
- சூப்பர் பாஸ்பேட் உரப்பயன்பாடு விழிப்புணர்வு பயிற்சி கூட்டம் நடைபெற்றது.
- கொரமண்டல் உர விற்பனையாளர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் மேல்பட்டாம்பாக்கத்தில் கொரமண்டல் உர நிறுவனம் மற்றும் இந்திய உர நிறுவனங்களின் கூட்டமைப்பு இணைந்து சூப்பர் பாஸ்பேட் உரப்பய ன்பாடு விழிப்புணர்வு பயிற்சி கூட்டம் நடைபெற்றது. இக்கரு த்தரங்கில் நிறுவனத்தின் முதுநிலை உழவியலாளர் குருசாமி வரவேற்று பேசினார். நிறுவனத்தின் உதவி பொது மேலாளர் சிவசங்கரன் காய்கறி நெல் கரும்பு நிலக்கடலை போன்ற பயிர்களுக்கு சூப்பர் பாஸ்பேட் உரத்தை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் கொரமண்டல் உரநிறுவனத்தின் பல்வேறு விதமான சூப்பர் பாஸ்பேட் உற்பத்தி குறித்து விவரித்தார்.
எப்.ஏ.ஐவெங்கடேசன் டிஏபி உரத்திற்கு மாற்றாக சூப்பர் பாஸ்பேட் உரத்தை பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். ஈஐடி பாரி சர்க்கரை ஆலை மேலாளர்கள் தேவராஜ், கொளஞ்சி கரும்பு சாகுபடி தொழில்நுட்பம் குறித்து விவரித்தனர். முடிவில் நிறுவனத்தின் வேலூர் மண்டல மேலாளர் சங்கர் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை விற்பனை அலுவலர் பெரியசாமி, நந்தகுமார், நடராஜன் ஆகியோர் செய்தனர். இதில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் கொரமண்டல் உர விற்பனையாளர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
- சமவெளியில் நறுமணப்பயிர்கள் சாகுபடி உத்திகள், அதிக மகசூல் எடுக்கும் வழிமுறைகள், மதிப்புக்கூட்டுதல் போன்றவற்றை விளக்க உள்ளார்கள்.
- ஈஷா கடந்த 6 ஆண்டுகளாக சமவெளியில் மிளகு சாகுபடி பயிற்சியை நடத்தி வருகிறது.
ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் புதுக்கோட்டையில் நாளை (ஜூலை 16) நடத்தும் மாபெரும் விவசாய கருத்தரங்கை மாண்புமிகு தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் திரு. மெய்யநாதன் அவர்கள் தொடங்கி வைக்க உள்ளார். இந்நிகழ்ச்சியில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் திருமதி. மெர்சி ரம்யா அவர்கள் பங்கேற்று வாழ்த்துரை வழங்க உள்ளார்.
காவேரி கூக்குரல் இயக்கம் மற்றும் இந்திய நறுமணப்பயிர்கள் ஆராய்ச்சி நிலையம் இணைந்து நடத்தும் சமவெளியில் நறுமணப் பயிர்கள் சாகுபடி குறித்த மாபெரும் கருத்தரங்கு புதுக்கோட்டையில் நாளை நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாடு முழுவதும் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் திரளாக பங்கேற்க உள்ளனர்.
இது தொடர்பாக காவேரி கூக்குரல் இயக்கத்தின் தமிழக கள ஒருங்கிணைப்பாளர் திரு. தமிழ்மாறன் அவர்கள் கூறியதாவது:
இக்கருத்தரங்கில் சமவெளியில் மிளகு, ஜாதிக்காய், லவங்கம், காப்பி, சர்வ சுகந்தி, இஞ்சி போன்ற பயிர்களை வெற்றிகரமாக பயிர் செய்துள்ள விவசாயிகளும், இந்திய நறுமணப்பயிர்கள் ஆராய்ச்சி நிலையத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் டாக்டர். கண்டியண்ணன் மற்றும் டாக்டர். முகமது பைசல் பீரன் ஆகியோர் கலந்து கொண்டு சமவெளியில் நறுமணப்பயிர்கள் சாகுபடி உத்திகள், அதிக மகசூல் எடுக்கும் வழிமுறைகள், மதிப்புக்கூட்டுதல் போன்றவற்றை விளக்க உள்ளார்கள்.
இக்கருத்தரங்கு சேந்தன்குடி கிராமத்தைச் சேர்ந்த மிளகு விவசாயி செந்தமிழ்ச் செல்வன் அவர்களது மிளகுத் தோட்டத்தில் நடைபெற உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக மிளகு சாகுபடி செய்து வரும் இவர், தேக்கு, பலா, கிளைரிசிடியா, செங்கல் தூண் மற்றும் இரும்பு வலைகளிலும் மிளகு வளர்த்து வருகிறார். இரண்டு ஏக்கரில் மிளகு சாகுபடி செய்து வருடத்திற்கு நான்கு லட்சம் லாபம் ஈட்டுகிறார்.
மரப்பயிர்களை சாகுபடி செய்யும் விவசாயிகள் தொடர் வருமானம் பெறும் வழிமுறைகளை காவேரி கூக்குரல் இயக்கம் அறிமுகப்படுத்தி வருகிறது. மரப்பயிர்களில் ஊடுபயிராக காய்கறிகள், சிறுதானியங்கள், நறுமணப்பயிர்கள் மற்றும் கிழங்கு வகைகளை பல விவசாயிகள் செய்து வருகிறார்கள்.
இதனால் மரப்பயிர்களின் அறுவடை வரை வருமானத்திற்கு காத்திருக்காமல் ஊடுபயிர்கள் மூலமே தொடர் வருமானம் பெறுகிறார்கள். பெரும்பாலான நறுமணப் பயிர்கள் மரங்களுக்கு கீழே குளிர்ச்சியான சூழ்நிலையில் வளரக்கூடியதாக உள்ளதால் சரியான சூழ்நிலையை உருவாக்கி மர விவசாயிகள் அதிக வருமானம் பெற இயலும்.
ஈஷா கடந்த 6 ஆண்டுகளாக சமவெளியில் மிளகு சாகுபடி பயிற்சியை நடத்தி வருகிறது. இந்த பயிற்சியில் கலந்து கொண்ட எண்ணற்ற விவசாயிகள் தற்போது மிளகு சாகுபடி செய்து வருமானம் எடுத்து வருகின்றனர். மிளகு மட்டுமல்லாது மற்ற நறுமணப்பயிர்களும் சமவெளியில் நன்கு வளர்வதால் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கத்தில் இந்த பயிற்சியை காவேரி கூக்குரல் நடத்துகிறது.
விவசாயிகள் இந்த பயிற்சியில் கலந்துகொண்டு நறுமணப்பயிர்கள் சாகுபடி குறித்து அறிந்துகொண்டு, சாகுபடி செய்வதன் மூலம் அவர்களது வருமானத்தை உயர்த்திக் கொள்ளமுடியும். பயிற்சியில் கலந்து கொள்ள 94425 90079 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளவும். மேலும் மரம் சார்ந்த விவசாயம் குறித்து அறிய 80009 80009 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.
இவ்வாறு அவர் கூறினார்.






