என் மலர்
நீங்கள் தேடியது "மர்ம வெடிகுண்டு மிரட்டல்"
- வேறு வேறு இ-மெயில் முகவரி மூலம் அந்த நபர் மிரட்டல் அனுப்பி வருகிறார்.
- போலீசார் சென்று 4 முறை சோதனை நடத்தினர்.
கோவை:
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு தொடர் வெடிகுண்டு மிரட்டல் இமெயில் மூலம் அனுப்பப்பட்டு வந்தது. இதுகுறித்து கோவை வெடி குண்டு தடுப்பு மற்றும் செயல் இழப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் தலைமையிலான போலீசார் சென்று 4 முறை சோதனை நடத்தினர்.
இதைத்தொடர்ந்து கோவை மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் சைபர் கிரைம் போலீசில் இ-மெயில் கடிதம் அனுப்பியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு அளித்து உள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று மதியம் மீண்டும் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வேறு ஒரு இ-மெயில் முகவரி மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. உடனே போலீசார் சென்று சோதனை நடத்தினர்.
தொடர்ந்து வரும் வெடிகுண்டு மிரட்டல்களால் கோவை வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் ஓய்வு இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
நேற்று மாலை கோவை விமான நிலையம் அருகே விளாங்குறிச்சி ரோட்டில் உள்ள டைட்டல் பார்க் கட்டிடத்திற்கும் வெடி குண்டு மிரட்டல் இ-மெயில் மூலம் விடப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அங்கு வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவி உதவியுடன் அங்கு சென்று சோதனை நடத்தினர். டைடல் பார்க் பகுதியில் 2 கட்டிடங்களில் ஏராளமான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.
அங்கு வெடிகுண்டுகளை கண்டுபிடிக்கும் மோப்ப நாய்கள் மலர் மற்றும் அயன் ஆகிய மோப்ப நாய்கள் கொண்டு போலீசார் ஒவ்வொரு அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தினர்.
கட்டிடங்களின் கார் பார்க்கிங் மற்றும் வாகன நிறுத்துமிடங்கள் என அனைத்து பகுதிகளிலும் சோதனை நடந்தது. 2 மணி நேர சோதனைக்கு பிறகு வெடிகுண்டு மிரட்டல் மீண்டும் புரளி என்றுதெரிய வந்தது. இந்த சோதனையால் அங்கு பரபரப்பு நிலவியது.
கலெக்டர் அலுவலகம் மற்றும் கோவை பாஸ்போர்ட் அலுவலகம் ஆகியவற்றுக்கு வெடிகுண்டு மிரட்டல் அனுப்பிய அதே நபர்தான் டைட்டல் பார்க்கிற்கும் அனுப்பியதாக கூறப்படுகிறது. வேறு வேறு இ-மெயில் முகவரி மூலம் அந்த நபர் மிரட்டல் அனுப்பி வருகிறார்.
அவரை பிடிக்க போலீ சார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
ஆலந்தூர்:
கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு சில தினங்களுக்கு முன்பு மர்ம கடிதம் ஒன்று வந்தது.
அந்த கடிதத்தில் அனுப்பியவரின் பெயர் இல்லை. அதில் கவர்னர் மாளிகையை குண்டு வைத்து தகர்ப்போம். உங்களை சுற்றிவரும் தமிழக அமைச்சர்களை சுட்டுக் கொல்வோம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
கடிதத்தை பிரித்து பார்த்த கவர்னர் மாளிகை ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி உடனடியாக உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அடையாறு துணை கமிஷனர் சஷாங் சாய் இதுபற்றி உரிய விசாரணை நடத்த உத்தர விட்டார்.

இதனைதொடர்ந்து கிண்டி போலீசார் மிரட்டல் கடிதம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளனர். கடிதத்தில் பெயர், முகவரி உள்ளிட்ட எதுவும் இடம் பெறாததால் அதனை எழுதியது யார் என்பது தெரியவில்லை.
இருப்பினும் கடிதம் எங்கிருந்து அனுப்பப்பட்டுள்ளது என்பதுபற்றி கடிதத்தில் உள்ள முத்திரையை வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மிரட்டல் கடிதத்தை அனுப்பிய மர்ம நபரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கிண்டி உதவி கமிஷனர் சுப்ராயன், இன்ஸ்பெக்டர் சிவக்குமார் ஆகியோர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வை பிடிக்காத நபர்தான் இந்த கடிதத்தை அனுப்பி இருக்க வேண்டும் என்று சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும் மிரட்டல் ஆசாமி பிடிபட்டால் தான் கடிதத்தின் முழு பின்னணி தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
மிரட்டல் காரணமாக கவர்னர் மாளிகையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கிண்டி மற்றும் கோட்டூர்புரம் போலீசார் கவர்னர் மாளிகையை சுற்றியுள்ள பகுதியில் ரோந்து பணியையும் தீவிரப்படுத்தி உள்ளனர்.
தேர்தல் நேரத்தில் அமைச்சர்களுக்கும், கவர்னருக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #GovernorHouse #Bombthreat






