என் மலர்
நீங்கள் தேடியது "சர்க்கரை வள்ளிக்கிழங்கு"
- கேரட்டை விட சர்க்கரைவள்ளிக்கிழங்கில் வைட்டமின் ஏ அதிகமாக உள்ளது.
- கேரட்டில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து குடலில் சேரும் கொழுப்பை கட்டுப்படுத்த உதவும்.
கேரட் மற்றும் சர்க்கரைவள்ளிக்கிழங்கு இவை இரண்டும் சுவையான, ஆரோக்கியமான காய்கறிகளாக உலகம் முழுவதும் அறியப்படுகின்றன. இயற்கையான இனிப்புச்சுவை கொண்ட இந்த இரண்டு வேர் காய்கறிகளும் எளிதாக சமைப்பதற்கும், ருசிப்பதற்கும் ஏற்றவை. கண் பார்வையை மேம்படுத்தும், இதயத்தை பாதுகாக்கும் 'ஆரோக்கிய சக்தி மையங்களாக' இவை கருதப்படுகின்றன. இருப்பினும் கண்களுக்கும், இதயத்துக்கும் இவை வழங்கும் நன்மைகள் வேறுபடுகின்றன. அது பற்றி தெரிந்து கொள்வோமா?
கண் ஆரோக்கியம் காக்கும்
கேரட், கண் ஆரோக்கியம் காக்கும் பிரபலமான காய்கறியாக அறியப்படுகிறது. இதில் இருக்கும் அதிக அளவிலான பீட்டா-கரோட்டின் வைட்டமின் ஏ உற்பத்திக்கு உதவிடும். கண் பார்வை திறனுக்கு வைட்டமின் ஏ முக்கியமானது. சர்க்கரை வள்ளிக்கிழங்கிலும் பீட்டா-கரோட்டின் அதிக அளவில் உள்ளது. அதன் ஆரஞ்சு நிறமே அதற்கு சான்றாக அமைந்திருக்கிறது.
கேரட்டை விட சர்க்கரைவள்ளிக்கிழங்கில் வைட்டமின் ஏ அதிகமாக உள்ளது. இரவு நேர பார்வையிழப்பு தன்மை ஏற்படுவதை தடுப்பதிலும், ஒட்டுமொத்த கண் ஆரோக்கியத்தை பாதுகாப்பதிலும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு சிறப்புற்று விளங்குகிறது. குறிப்பாக உணவில் வைட்டமின் ஏ குறைவாக எடுத்துக்கொள்ளும் நபர்கள் சர்க்கரை வள்ளிக்கிழங்கை உட்கொள்வது சிறந்தது.
கண் செல்களை பாதுகாக்கும்
கேரட், சர்க்கரை வள்ளிக்கிழங்கு இரண்டிலும் உள்ள ஆன்டி ஆக்சிடென்டுகள், ஆக்சிஜனேற்ற அழுத்தம் காரணமாக ஏற்படும் கண் செல்களின் சேதத்தை தடுக்க உதவுகின்றன. கேரட்டில் லூட்டின், ஜியாசாந்தின் போன்ற சேர்மங்கள் உள்ளன. குறிப்பாக ஊதா நிற சர்க்கரைவள்ளிக்கிழங்கு வகைகளில், ஆந்தோசியானின் அதிகம் உள்ளன. அவை நீண்ட கால கண் ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
ரத்த அழுத்தத்தை காக்கும்
சர்க்கரை வள்ளிக்கிழங்கில் அதிக அளவில் உள்ளடங்கி இருக்கும் பொட்டாசியம், உடலில் அதிகமாக சேரும் சோடியத்தை சமநிலைப்படுத்தக்கூடியது. அதன் மூலம் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவிடும். கேரட்டிலும் பொட்டாசியம் உள்ளது. ஆனால் இதய ஆரோக்கியத்தை ஊக்குவிப்பதில் சர்க்கரைவள்ளிக்கிழங்கு முன்னிலை வகிக்கிறது.
கொழுப்பை கட்டுப்படுத்தும்
கேரட்டில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து குடலில் சேரும் கொழுப்பை கட்டுப்படுத்த உதவும். செரிமான மண்டலத்தில் சேமித்துவைத்து, ஆரோக்கியமான கொழுப்பை தொடர்ந்து பயன்படுத்த வழிவகை செய்யும்.
அழற்சியை குறைக்கும்
இதய நோய்கள் ஏற்படுவதற்கு அழற்சி முக்கிய காரணிகளில் ஒன்றாக விளங்குகிறது. சர்க்கரை வள்ளிக்கிழங்கில் உள்ள சேர்மங்கள் உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க உதவுகின்றன. கேரட்டில் உள்ள ஆன்டி ஆக்சிடென்டுகளும் அழற்சியால் ஏற்படும் சேதங்களை தடுக்க துணைபுரிகின்றன.
ரத்த நாளங்களை பாதுகாக்கும்
கேரட் மற்றும் சர்க்கரைவள்ளிக்கிழங்கு இரண்டும் ரத்த நாளங்களுக்கு சேதம் ஏற்படாமல் காக்கும் ஆன்டி ஆக்சிடென்டுகளை கொண்டுள்ளன. குறிப்பாக சர்க்கரைவள்ளிக்கிழங்கு ரத்த நாளங்களை நெகிழ்வாக வைத்திருக்க உதவும். கேரட் ரத்த நாளங்களில் கொழுப்பு படிவதை குறைக்க வித்திடும்.
சாப்பிட எது எளிது?
கேரட்டை பச்சையாகவே சாப்பிடலாம். எங்கும் எடுத்து சென்று எப்போதும் சாப்பிடலாம் என்பதால், தினசரி உணவில் கேரட்டை சேர்ப்பது மிகவும் எளிது. சர்க்கரை வள்ளிக்கிழங்கை அப்படியே சாப்பிடுவது நல்லதல்ல. அதிக ஸ்டார்ச் உள்ளடக்கம் காரணமாக வாயு, வீக்கம் மற்றும் அஜீரணம் போன்ற செரிமான பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்பதால் வேகவைத்து சாப்பிடுவதே நல்லது.
எது சிறந்தது?
கேரட், சர்க்கரை வள்ளிக்கிழங்கு இரண்டுமே கண், இதய ஆரோக்கியத்திற்கு நலம் சேர்ப்பவை. எனினும் கேரட்டில் கண் ஆரோக்கியத்திற்கு நேரடியாக பயனளிக்கும் ஊட்டச்சத்துகள் அதிகம் காணப்படுகிறது. இதயத்தை பாதுகாக்கும் தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் சர்க்கரை வள்ளிக்கிழங்கில் அதிகம் உள்ளன.
கண் ஆரோக்கியத்திற்கு கேரட் சிறந்த தேர்வாக இருந்தாலும், இதய ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் சர்க்கரைவள்ளிக்கிழங்கு முன்னணியில் இருக்கிறது. எனவே இரண்டையும் சமநிலையாக உணவில் சேர்த்துக்கொள்வதே முழுமையான ஆரோக்கியத்தை பேணுவதற்கு சிறந்த வழியாகும்.
- வயது வித்தியாசமில்லாமல் அனைவரும் சாப்பிடலாம்.
- சர்க்கரைவள்ளிக் கிழங்கில் மிக குறைந்த அளவே கொழுப்பு உள்ளது.
கிழங்கு வகைகளைச் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும், வாயுத்தொல்லை ஏற்படும் என சொல்லப்படுவதுண்டு. ஆனால் சர்க்கரை வள்ளிக்கிழங்கில் ஏராளமான ஆரோக்கியமான நன்மைகள் இருக்கின்றன. ஆம்...! சர்க்கரைவள்ளிக்கிழங்கில், வைட்டமின்கள் ஏ, சி, பொட்டாசியம், மெக்னீசியம், மாங்கனீசு, நார்சத்துக்கள், ஆன்டி ஆக்ஸிடண்ட்டுகள், இரும்புச்சத்து, கால்சியம் போன்ற சத்துக்கள் காணப்படுகின்றன.
உடலில் சதை மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு இவை உதவும். இதனை வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரும் சாப்பிடலாம். அதேசமயம் இயற்கையாகவே கிழங்கு வகைகளில் கொழுப்பு அதிகம் நிறைந்து காணப்படும். ஆனால் சர்க்கரைவள்ளிக் கிழங்கில் மிக குறைந்த அளவே கொழுப்பு உள்ளது. சர்க்கரை வள்ளிக் கிழங்கு ஆரஞ்சு, ஊதா, சிவப்பு, வெளிர் மஞ்சள், வெள்ளை நிறம் போன்றகளில் காணப்படுகிறது. இந்த நிற வேறுபாடுகளுக்கு அதிலுள்ள பீட்டா கரோட்டினே காரணமாகும்.
சர்க்கரை வள்ளிக் கிழங்கில் உள்ள பொட்டாசியம், மாங்கனீசு, மெக்னீசியம், கரோட்டினாய்டுகள், பீட்டா கரோட்டின் ஆகியவை வாய் முதல் ஆசனவாய் வரையிலான உறுப்புகளில் ஏற்படும் புற்றுநோய்க்கான செல்களை அழித்து புற்றுநோய் வராமல் தடுக்கிறது. உள் உறுப்புகளின் வீக்கத்தைக் குறைத்து, இயற்கையாகவே உடலை சுத்தம் செய்யும் பண்புகளையும் கொண்டுள்ளது. இதிலுள்ள வைட்டமின் ஏ கண், தோல்களின் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது.
சர்க்கரை வள்ளிக்கிழங்கில் நிறைந்துள்ள ஆன்டிஆக்ஸிடண்டுகள் எலக்ட்ரானை இழந்த செல்களுக்கு எலக்ட்ரானை அளித்து எப்போதும் இளமையுடன் தோற்றமளிக்க உதவுகிறது.
- காலையில் சர்க்கரை வள்ளிக்கிழங்கு சாப்பிடுவது செரிமானம் வேகமாக நடைபெற உதவும்.
- நோய் எதிர்ப்பு சக்தி, இதய ஆரோக்கியம், கொழுப்பு கட்டுப்பாடு, எலும்பு ஆரோக்கியம் போன்றவற்றுக்கும் வலு சேர்க்கும்.
காலையில் உண்ணும் உணவு எளிதில் ஜீரணமாகும்படி இருப்பது சிறப்பானது. அப்படி சாப்பிடுவது செரிமான மண்டலம் தனது செயல்பாட்டை மென்மையாக தொடங்குவதற்கு வழிவகுக்கும். அதன் இயக்கமும் சுறுசுறுப்பாக நடைபெறும். உடலுக்கு தேவையான ஆற்றலையும் உடனடியாக கிடைக்கச் செய்யும். மேலும் எளிதாக ஜீரணமாகும் உணவுகளை சாப்பிடுவதன் மூலம் இரைப்பை குடல் அசவுகரியத்திற்கு ஆளாகுவதை தவிர்க்கவும் முடியும். காலை உணவுடன் சில வகை பழங்கள், காய்கறிகளை சேர்த்துக்கொள்வது நலம் பயக்கும்.
பப்பாளி:
பப்பாளியில் புரோட்டியோலிடிக் என்சைம்கள், பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள், வைட்டமின்கள் ஏ, பி, சி அதிகமாக இருப்பதால் செரிமானம் துரிதமாக நடைபெறவும், உடலில் உள்ள நச்சுக்களை நீக்கவும் வழிவகை செய்யும். குறிப்பாக செரிமான பிரச்சனை உள்ளவர்கள் பப்பாளி ஜூஸ் பருகுவது வீக்கம், மலச்சிக்கல் மற்றும் நெஞ்செரிச்சலை தடுக்க உதவி புரியும்.
சர்க்கரை வள்ளிக்கிழங்கு:
காலையில் சர்க்கரை வள்ளிக்கிழங்கு சாப்பிடுவது செரிமானம் வேகமாக நடைபெற உதவும். ஊட்டச்சத்து உறிஞ்சுதலையும் ஊக்குவிக்கும். இது நார்ச்சத்துமிக்க உணவுப்பொருளாக இருப்பதால் உடலுக்கு தேவையான ஆற்றலையும் வழங்கும்.
வாழைப்பழம்:
வாழைப்பழங்களிலும் நார்ச்சத்து அதிகம் நிறைந்திருக்கிறது. அதனை சாப்பிடுவது குடல் இயக்கம் எளிமையாக நடைபெறுவதற்கு உதவும். கார்போஹைட்ரேட்டை சிதைக்கும் செயல்முறையையும் எளிமையாக்கும்.
பீட்ரூட்:
இதிலும் அதிக நார்ச்சத்து இருப்பதால் செரிமானம் மற்றும் குடல் இயக்கம் எளிதாக நடைபெறுவதற்கு உதவிடும்.
ஆப்பிள்:
இதில் நார்ச்சத்துடன் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிகமாக இருப்பதால், இரைப்பை, குடல் நலனுக்கு உகந்தது. இதிலிருக்கும் பெக்டின் குடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதோடு செரிமானத்தையும் மேம்படுத்தும்.
புரோக்கோலி:
புரோக்கோலியில் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிகமாக இருப்பதால், குடல் இயக்கம் சீராக நடைபெறவும், செரிமான பாதையை பராமரிக்கவும் உதவி புரியும். நோய் எதிர்ப்பு சக்தி, இதய ஆரோக்கியம், கொழுப்பு கட்டுப்பாடு, எலும்பு ஆரோக்கியம் போன்றவற்றுக்கும் வலு சேர்க்கும்.






