என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கட்சி தாவல்"

    • அரசியலில் நிரந்தர நண்பனும், எதிரியும் இல்லை என்ற பழமொழிக்கு ஏற்ப ஒரு கட்சியில் இருந்து மற்ற கட்சிக்கு தாவும் நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது.
    • சில நாட்களுக்கு முன் தமிழக வெற்றிக்கழகத்தில் நாஞ்சில் சம்பம் இணைந்து கொண்டார்.

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டசபைக்கு அரசியல் கட்சிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. எப்போதும் போல் இல்லாமல் இத்தேர்தலுக்காக கிட்டத்தட்ட 6 மாதத்திற்கு முன்னதாகவே 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்', 'உள்ளம் தேடி- இல்லம் நாடி', 'தமிழக மக்கள் உரிமை மீட்பு', 'மக்கள் சந்திப்பு', என பல பெயர்களில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியலில் நிரந்தர நண்பனும், எதிரியும் இல்லை என்ற பழமொழிக்கு ஏற்ப ஒரு கட்சியில் இருந்து மற்ற கட்சிக்கு தாவும் நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது. அந்த வகையில், இதுவரை தாய் கழகம் என்று சொல்லிக்கொண்டு மற்றக் கட்சிக்கு தாவிய முக்கிய அரசியல் தலைவர்கள் குறித்து பார்ப்போம்...

    சி.டி.ஆர்.நிர்மல்குமார்

    இந்த ஆண்டின் தொடக்கத்தில் அ.தி.மு.க.வில் இருந்து விலகிய சி.டி.ஆர்.நிர்மல்குமார் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்தார். பா.ஜ.க.வில் இருந்து அ.தி.மு.க.வுக்கு சென்ற சி.டி.ஆர்.நிர்மல்குமார் அங்கு ஐ.டி.விங்க் நிர்வாகியாக பணியாற்றி வந்தார். இதனை தொடர்ந்து அ.தி.மு.க.வில் இருந்து விலகி தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்தார். அவருக்கு இணை பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது.

    மைத்ரேயன்

    பா.ஜ.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்து மூன்று முறை மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்தவர் மைத்ரேயன். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிருப்தியில் இருந்து வந்த மைத்ரேயன் தி.மு.க.வில் இணைந்தார். தி.மு.க.வில் இணைந்த உடனே அவருக்கு பதவியும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    மருது அழகுராஜ்

    அ.தி.மு.க.வின் பிரசார பீரங்கிகளில் ஒருவராக பார்க்கப்பட்ட மருது அழகுராஜ், ஜெயலலிதா இருந்த போது நமது எம்.ஜி.ஆர், அதன்பிறகு நமது அம்மா கட்சி ஆகிய நாளிதழ்களின் ஆசிரியராக பணியாற்றியவர். அதன்பின் அ.தி.மு.க.வில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் சென்றபோது அவருக்கு ஆதரவாக இருந்தவர் திடீரென தி.மு.க.வில் இணைந்தார்.



    அன்வர் ராஜா

    ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க. உடைந்து ஓ.பி.எஸ் அணி – இ.பி.எஸ் அணி என்று பிரிந்தபோது இ.பி.எஸ் அணியில் இருந்தவர் அன்வர் ராஜா. ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் இருவரும் இணைந்த பின்னர் சசிகலாவை கட்சியில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று தலைமைக்கு எதிராக பேசி வந்தார். இதனால் 2021-ம் ஆண்டு அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட பின்னர், தி.மு.க.வில் இணையப்போவதாக அப்போது செய்திகள் வந்தாலும், வேறு கட்சியில் சேராமல் அ.தி.மு.க. சார்பாகவே இருந்ததால் அவரை மீண்டும் 2023-ம் ஆண்டு அ.தி.மு.க.வில் சேர்த்துக் கொண்டார் எடப்பாடி பழனிசாமி.

    இதனிடையே, 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மீண்டும் பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைத்ததால் அதிருப்தி அடைந்த அன்வர் ராஜா, "தமிழ்நாட்டில் காலூன்ற துடிப்பது பா.ஜ.க.வின் எண்ணமாக இருந்தாலும் அது ஒரு போதும் நடக்காது'' என்று கடுமையாக விமர்சித்து கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தினார். இதனை தொடர்ந்து அ.தி.மு.க.வில் இருந்து விலகி மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார்.

    மனோஜ் பாண்டியன்

    ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர் பி.ஹெச். மனோஜ் பாண்டியன். அ.தி.மு.க.வின் பாரம்பரிய குடும்பத்தை சேர்ந்தவர்களில் ஒருவரான மனோஜ் பாண்டியன் வழக்கறிஞரும் கூட. அ.தி.மு.க. இரண்டாக பிரிந்தபோது ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளராக செயல்பட்டு வந்த மனோஜ் பாண்டியன் தி.மு.க.வில் இணைத்துக்கொண்டார். தி.மு.க.வில் சேர்வதற்கு முன்னதாக தனது பதவியை அவர் ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.

    செங்கோட்டையன்

    எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து அ.தி.மு.க.வில் பணியாற்றி வந்தவர் செங்கோட்டையன். 50 ஆண்டு அரசியல் வாழ்க்கையில் அ.தி.மு.க.வில் பயணித்து ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராக திகழ்ந்தவர். இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு, செங்கோட்டையனுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கட்சியில் இருந்து ஓரங்கப்பட்ட செங்கோட்டையன், அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று வலியுறுத்தியதால் அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டார். இதனால் செங்கோட்டையன், தி.மு.க.வில் இணைவார் என்று கூறப்பட்ட நிலையில், தனது பதவியை ராஜினாமா செய்த மறுநாளே தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்தார். அவருக்கு த.வெ.க. நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து, அ.தி.மு.க.வில் இருந்து பலர் விலகுவார்கள் என செங்கோட்டையன் கூறியுள்ளார் என்பது குறிப்பிட்டதக்கது.



    நாஞ்சில் சம்பத்

    அரசியல் பிரசார பீரங்கியாக செயல்பட்டவர் நாஞ்சில் சம்பத். வைகோவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அக்கட்சியில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.ம.மு.க.வில் இணைந்தாலும் தி.மு.க. ஆதரவாளராகவே மேடைகளில் பேசிவந்தார் நாஞ்சில் சம்பத். இந்த நிலையில், சில நாட்களுக்கு முன் தமிழக வெற்றிக்கழகத்தில் நாஞ்சில் சம்பம் இணைந்து கொண்டார்.

    தமிழக சட்டசபைக்கு இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில் தற்போது வரை தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சி, த.வெ.க., என நான்கு முனை போட்டி நிலவி வருகிறது. இந்த எண்ணிக்கையானது குறைவதும், உயர்வதும் பொறுத்து ஒரு கட்சியில் இருந்து மற்ற கட்சிக்கு மாறும் தலைவர்களின் எண்ணிக்கையும் கூடும். இதற்கு காலம் தான் பதில் சொல்லும்... பொறுத்திருந்து பார்ப்போம்... 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாஜகவில் இணைந்த சிந்தியா தற்பொது மத்திய விமான போக்குவரத்து துறை மந்திரியாக உள்ளார்.
    • தனது செல்வாக்கை நிரூபிக்கும் வகையில் நடத்திய வாகன அணிவகுப்பு பேசுபொருளாக மாறியிருக்கிறது.

    போபால்:

    மத்திய பிரதேசத்தில் கடந்த 2020ல் கமல் நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றபோது, கட்சியின் மூத்த தலைவராக விளங்கிய ஜோதிராதித்ய சிந்தியா தலைமையில் 20க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் முதல்வருக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். இந்த மோதலின் உச்சகட்டமாக தங்கள் பதவிகளை ராஜினாமா செய்த அவர்கள், பாஜகவில் இணைந்தனர். இதனால் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து, பாஜக ஆட்சியை கைப்பற்றியது. பாஜகவில் இணைந்த சிந்தியா தற்போது மத்திய விமான போக்குவரத்து துறை மந்திரியாக உள்ளார்.

    இந்நிலையில் 2020 ஆம் ஆண்டு கிளர்ச்சியின்போது ஜோதிராதித்ய சிந்தியாவைப் பின்பற்றி பாஜகவில் இணைந்து பணியாற்றிய தலைவர்களில் ஒருவரான பைஜ்நாத் சிங் மீண்டும் தாய்க்கட்சியான காங்கிரசில் இணைந்துள்ளார். சிவபுரியில் அரசியல் செல்வாக்கு மிக்க தலைவரான பைஜ்நாத் சிங்குடன், மாவட்ட அளவிலான 15 பாஜக தலைவர்களும் காங்கிரசில் இணைந்தனர். அவர்களை மூத்த தலைவர்கள் கமல் நாத், திக்விஜய் சிங் ஆகியோர் வரவேற்றனர்.

    தலைவர்கள் அதிருப்தி காரணமாக கட்சி தாவுவது சகஜம் என்றாலும், பைஜ்நாத் சிங் மீண்டும் தாய்க்கட்சிக்கு திரும்புவதை கொண்டாடும் வகையிலும், தனது செல்வாக்கை நிரூபிக்கும் வகையிலும் நடத்திய வாகன அணிவகுப்பு பேசுபொருளாக மாறியிருக்கிறது. 400 வாகனங்கள் அணிவகுக்க, தனது தொகுதியான சிவபுரியில் இருந்து 300 கிமீ தொலைவில் உள்ள போபாலுக்கு சென்று காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து கட்சியில் இணைந்தார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    பைஜ்நாத் சிங், வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடுவதற்காக தீவிரமாக களப்பணியில் ஈடுபட்டு வந்தார். ஆனால், சீட் கிடைக்கும் என எந்த நம்பிக்கையும் ஏற்படாததால் மீண்டும் காங்கிரசில் சேர்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

    ×