என் மலர்
வழிபாடு

திருவரசமூர்த்தி அய்யனார் - சொக்காயி அம்மன்
தைரியம் தரும் வீராணம் ஏரிக்கரை சொக்காயி அம்மன்
- கருவறையில் சிவன் சமேதமாக அம்மன் காட்சியளிப்பதால், சொக்காயி அம்மன் மகேஸ்வரியின் அம்சமாக விளங்குவதாக பக்தர்கள் நம்புகின்றனர்.
- வடக்கு புறத்தில், திரவுபதி அம்மனுடன் பஞ்ச பாண்டவர்களின் பிரம்மாண்ட சிலைகள் உள்ளன.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் வட்டத்தில், வீராணம் ஏரிக்கரையை ஒட்டியுள்ள சித்தமல்லி கிராமத்தில், சொக்காயி அம்மன் சமேத திருவரசமூர்த்தி அய்யனார் கோவில் அமைந்துள்ளது. கிராமப்புற மக்களின் குலதெய்வமாக விளங்கும் இக்கோவில், நாடிவரும் பக்தர்களுக்கு தைரியத்தையும், சிறந்த மன நிலையையும் அருள்கிறது. இந்த கோவிலைச் சுற்றிலும் காவல் மற்றும் பரிவார தெய்வங்கள் வீற்றிருந்து, ஊரின் எல்லையைப் பாதுகாப்பதாக நம்பப்படுகிறது.
தல வரலாறு
காட்டுமன்னார்கோவில் அருகே அமைந்துள்ள வீராணம் ஏரி, 10-ம் நூற்றாண்டில் சோழ மன்னன் ராஜாதித்யனால் உருவாக்கப்பட்டது. ஏரியின் மேற்கு திசையில் உள்ள மண் மேடான பகுதியில் தான் சித்தமல்லி கிராமம் அமைந்துள்ளது. இங்கு அரசமரத்தின் கீழ் அமர்ந்த கோலத்தில் இறைவன் காட்சியளித்ததால், 'திருவரச மூர்த்தி அய்யனார்' என்ற பெயர் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. அவருடன் சொக்காயி அம்மன் அருள்பாலித்து வருகிறார்.
மகேஸ்வரி அம்சமான சொக்காயி அம்மன்
கருவறையில் சிவன் சமேதமாக அம்மன் காட்சியளிப்பதால், சொக்காயி அம்மன் மகேஸ்வரியின் அம்சமாக விளங்குவதாக பக்தர்கள் நம்புகின்றனர். ஏழு சப்த கன்னிமார்களில் ஒருவரான மகேஸ்வரியே, இத்தலத்தில் சொக்காயி அம்மனாக அருள் பாலிப்பதாக ஐதீகம். பழங்கால புராணக் கதைகளின்படி, அந்தகாசுரன் எனும் அசுரனை அழிக்க சிவனின் சக்தியில் இருந்து தோன்றிய தேவியர்களில் மகேஸ்வரியும் ஒருவராகக் கூறப்படுகிறது. இந்த அம்மனை வழிபட்டால் கோபம், மனச்சஞ்சலம் நீங்கி தைரியமும், மன உறுதியும், தெளிவான சிந்தனையும் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
கோவில் அமைப்பு
கோவில் நுழைவுவாசலில், காவல் தெய்வங்களின் சிலைகள் அமைந்துள்ளன. முதலில் மதுரை வீரன், பொம்மி மற்றும் வெள்ளையம்மாளுடன் காட்சியளிக்கிறார். எதிர்புறம் தலை அறுக்கப்பட்ட மதுரை வீரன் சிலை உள்ளது. அருகில் அய்யனார் சாமியின் குதிரை மற்றும் நாயின் சிலைகள் காணப்படுகின்றன. கோவிலின் முன்பாக கொற்றவையின் சிலை தத்ரூபமாக அமைந்துள்ளது.
வடக்கு புறத்தில், திரவுபதி அம்மனுடன் பஞ்ச பாண்டவர்களின் பிரம்மாண்ட சிலைகள் உள்ளன. இவற்றின் கீழ், பழங்கால நடுகல் (வீரக்கல்) ஒன்று காணப்படுவது சிறப்பாகும். குதிரையில் அமர்ந்த வீரனும், அவருடன் ஒரு பெண்ணும் போருக்கு புறப்படுவது போன்ற உருவம் இதில் செதுக்கப்பட்டுள்ளது. இந்த நடுகல் தான், கோவில் உருவாகும் முன்பு வழிபட்ட திருவரசமூர்த்தி மற்றும் சொக்காயி அம்மனின் மூல வடிவமாக இருக்கலாம் என்று ஊர் பெரியவர்கள் நம்புகின்றனர்.
ஊர் பெரியவர்கள் கூற்றுபடி, திருவரசமூர்த்தி மற்றும் சொக்காயி அம்மன் இந்த ஊரில் வாழ்ந்த மக்களின் மூத்த குடியினராக இருந்திருக்கலாம் என்றும், மக்களின் நலன் கருதி தங்கள் உயிரை ஈந்த தெய்வீக வடிவங்களாக அவர்கள் போற்றப்பட்டிருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. இதன் விளைவாக, மூத்த குடியாக இருந்த சொக்காயியை குல தெய்வமாகவும், திருவரசமூர்த்தியை காவல் தெய்வமான அய்யனாராகவும் வணங்கும் வழக்கம் உருவாகியிருக்கலாம் என்று பக்தர்கள் கூறுகின்றனர். பின்னாளில், சோழர்கள் காலத்தில் சிவ வழிபாடு மேலோங்கியபோது, இருவருக்கும் தனித்தனியே திருமேனிகள் அமைத்து கோவில் கட்டி வழிபாடு நடத்தப்பட்டிருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.
கோவிலின் தெற்கு புறத்தில் விநாயகர் சிலையும், குளமும் அமைந்துள்ளன. கருவறையில், சொக்காயி அம்மன் சமேதமாக திருவரசமூர்த்தி அய்யனார் அருள்பாலிக்கிறார். கோவிலின் உள்புறத்தில் முருகர் மற்றும் விநாயகர் சிலைகளும் உள்ளன. இக்கோவிலில் ஆடி மாதத்தில் அதிக அளவில் பக்தர்கள் திரளாக வந்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
அமைவிடம்
கடலூரில் இருந்து சுமார் 65 கி.மீ. தொலைவிலும், சிதம்பரத்தில் இருந்து காட்டுமன்னார்கோவில் வழியாக 35 கி.மீ. தொலைவிலும் இக்கோவில் உள்ளது.
'சித்தமல்லி' பெயர்க்காரணம்
இந்த ஊரை சித்தமல்லி என்று அழைப்பதற்கான காரணம் குறித்து பல நம்பிக்கைகள் உள்ளன. ஒரு காலத்தில் இப்பகுதியில் சித்தர்கள் வாழ்ந்திருக்கலாம் அல்லது அவர்கள் வணங்கிய அம்மன் கோவில் காரணமாக இப்பெயர் ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. தமிழ்நாடு அரசு தொல்லியல் ஆய்வேடுகளின்படி, சோழர்கள் காலத்தில் சித்தர்கள் வாழ்ந்த ஊர்களுக்கு சித்தமல்லி என்ற பெயர் வழங்கப்பட்டதாக அறியப்படுகிறது. திராவிட மொழியில் 'ஹல்லி' என்பது ஏரிக்கரை அருகிலுள்ள குடியிருப்பைக் குறிக்கும் சொல்லாகும். காலப்போக்கில் 'சித்த ஹல்லி, 'சித்த பள்ளி' என்றாகி, பின்பு 'சித்தமல்லி' என மருவி இருக்கலாம் என்று ஊர் பெரியவர்கள் கூறுகின்றனர்






