என் மலர்
வழிபாடு

சரஸ்வதி தேவியை போற்றும் வசந்த பஞ்சமி
- பிரம்மனின் படைப்புகள் அனைத்திற்கும் ஓசை நயம் கிடைத்தன.
- மேற்கு வங்காளத்தில், வசந்த பஞ்சமி அன்றுதான், குழந்தைகளின் கல்வியைத் தொடங்குகிறார்கள்.
கல்வி, ஞானம், கலைகளின் கடவுளாக கருதப்படும் சரஸ்வதி தேவியின் அவதார நாளையே 'வசந்த பஞ்சமி' என்று போற்றுகிறோம். எனவே இது சரஸ்வதி ஜெயந்தி, சரஸ்வதி பஞ்சமி என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த நாளில் சரஸ்வதி தேவியை வழிபட்டால் கல்வி, ஞானம், கலைகள், இசை போன்ற துறைகளில் சிறந்து விளங்கலாம்.
மாதந்தோறும் இரண்டு முறை பஞ்சமி திதி வந்தாலும், ஆடி மாதம் அமாவாசைக்கு பிறகு வரும் பஞ்சமியை 'கருட பஞ்சமி' என்றும், ஆவணி மாதம் விநாயகர் சதுர்த்திக்கு மறுநாள் வரும் பஞ்சமியை 'ரிஷி பஞ்சமி' என்றும் வழிபடுவார்கள்.
அதுபோலவே தை அமாவாசைக்கு பின் வரும் பஞ்சமி திதியை 'வசந்த பஞ்சமி' என்று போற்றும் வழக்கம் உள்ளது. வசந்த பஞ்சமி வழிபாடு தமிழ்நாட்டில் மிகக்குறைவு என்றாலும், வட மாநிலங்களில் மிகவும் பிரசித்திப் பெற்றது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சரஸ்வதியை வழிபடும் தினமாக, புரட்டாசி மாதத்தில் வரும் நவராத்திரி உள்ளது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி விழாவின் கடைசி மூன்று நாட்களில்தான் சரஸ்வதியை போற்றி கொண்டாடுவார்கள். ஆனால் வடநாட்டில் இந்த நவராத்திரி நாட்களில் துர்க்கையை விதவிதமாக அலங்கரித்து வழிபாடு செய்வார்கள். அதேநேரம் வசந்த பஞ்சமி தினத்தில் சரஸ்வதியை வழிபடுகிறார்கள். இந்த வசந்த பஞ்சமியானது, முன் காலத்தில் 'காமன் பண்டிகை' என்ற பெயரில் தமிழ்நாட்டில் கொண்டாடப்பட்டதாக சொல்லப்படுகிறது.
அண்ட சராசரங்களையும், அதில் பல்வேறு உயிரினங்களையும் படைத்த பிரம்மனுக்கு, தன் படைப்பின் மீது முழுமையான திருப்தி ஏற்படவில்லை. காரணம், உலகம் ஒலிகள் இன்றி நிசப்தமாக இருந்தது. இது பிரம்மனுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. அப்போது அவரது கையில் இருந்த கமண்டலத்தில் இருந்து சில துளி நீர் கீழே சிந்தியது. அதில் இருந்து ஒரு பெண் சக்தி வெளிப்பட்டது. அந்த சக்தியானவள், தனது கையில் சுவடிகளையும், ஸ்படிக மாலையையும் தாங்கி, வலது காலை மடித்து, இடது காலை தொங்க விட்ட நிலையில் வெண் தாமரை மீது அமர்ந்திருந்தாள்.
அந்த பெண் சக்தி, தன்னுடைய மடியில் வீணை ஒன்றையும் வைத்திருந்தாள். அந்த வீணையை தன்னுடைய மென் கரங்களால் மீட்டத் தொடங்க, அதில் இருந்து தெய்வீக இசை வெளிப்பட்டது. இதன் மூலமாக, பிரம்மனின் படைப்புகள் அனைத்திற்கும் ஓசை நயம் கிடைத்தன. நதிகள் சலசலத்தன. மரங்கள் அசைந்து காற்றுடன் ஓசையை உண்டாக்கின. கடல் பேரிரைச்சலுடன் அலைகளை வெளிப்படுத்தின. உயிரினங்கள் சத்தமிட்டன. இப்படி பிரபஞ்சம் முழுவதும் ஒலியை நாதமாகக் கொண்டதாக மாறியது.
இதைக் கண்ட பிரம்மதேவர் மகிழ்ச்சி அடைந்தார். அந்த பெண் சக்தியை பலவிதமாக போற்றினார். அந்தப் பெண்ணை தன்னுடைய நாக்கில் இருத்திக் கொண்டார். அவளுக்கு 'சரஸ்வதி' என்று பெயரிட்டார். அந்த தினமே 'வசந்த பஞ்சமி' என்று கருதப்படுகிறது. இந்த நாளில் சரஸ்வதி தேவியை வழிபாடு செய்து வந்தால், ஞானத்தில் சிறந்து விளங்கலாம்.
பஞ்சாப், அரியானா, ஜம்மு-காஷ்மீர், அசாம், திரிபுரா, ஒடிசா, மேற்கு வங்காளம் போன்ற பகுதிகளில் வசந்த பஞ்சமி அன்று நடைபெறும் சரஸ்வதி வழிபாடு மிகவும் சிறப்பு வாய்ந்தது.
மேற்கு வங்காளத்தில், வசந்த பஞ்சமி அன்றுதான், குழந்தைகளின் கல்வியைத் தொடங்குகிறார்கள்.
வசந்த பஞ்சமி தினத்தில் மஞ்சள் நிறத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். சரஸ்வதி தேவிக்கு மஞ்சள் நிற ஆடை அணிவித்தும், மஞ்சள் நிற மலர் மாலை சூட்டியும், லட்டு போன்ற மஞ்சள் நிற நைவேத்தியங்கள் படைத்தும் வழிபடுகிறார்கள். பூஜையில் வைக்கப்படும் பிள்ளையாரையும் மஞ்சளில் பிடித்துதான் வைப்பார்கள்.
பஞ்சாப் பகுதிகளில் இந்த காலகட்டத்தில்தான் கடுகு செடியில் மஞ்சள் நிறப் பூக்கள் பரவலாக பூத்துக் குலுங்கும். அதனை அடிப்படையாகக் கொண்டே, அனைத்திலும் மஞ்சள் வண்ணம் பயன்படுத்தப்படுகிறது. வசந்த பஞ்சமி நாளில் சரஸ்வதி தேவியை வழிபட்டு அறியாமை மற்றும் சோம்பல் நீங்கி, அறிவும், தெளிவும் பெற்று சிறந்த வாழ்க்கை வாழ்வோம்.






