என் மலர்
வழிபாடு

வாழ்வில் வளங்கள் சேர்க்கும் உத்தராயண புண்ணிய கால வழிபாடு
- தை மாதம் ஆரம்பிக்கும் உத்தராயணம் ஆனி மாதம் வரை இருக்கிறது.
- உத்தராயணம் பிறக்கும் நாள் கடவுளின் நாள் என்று கூறப்படுகிறது.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. நாளை முதல் சூரியனின் உத்தராயண புண்ணிய காலம் ஆரம்பமாகிறது.
உத்தரம் என்றால் வடக்கு என்று பொருள். அயனம் என்றால் பயணம். சூரியன் வடக்கு திசையை நோக்கிய தனது பயணத்தைத் தொடங்கும் நாள். அதன்படி தை மாதம் முதல் நாளான நாளை உத்தராயண புண்ணிய காலத்தின் தொடக்க நாள் ஆகும்.
தை மாதம் ஆரம்பிக்கும் உத்தராயணம் ஆனி மாதம் வரை இருக்கிறது. இந்த 6 மாத காலத்திற்கு சூரியன் வடக்கு நோக்கிப் பயணிக்கிறார். இது முடிந்தவுடன் ஆடி மாதம் முதல் நாள் சூரியன் தென்திசை நோக்கிய தனது பயணத்தைத் தொடங்குகிறார். இதை தட்சிணாயனம் என்று அழைக்கிறார்கள்.
சூரியன் மிதுனத்தில் இருந்து மகர ராசியில் நுழையும் நேரம் உத்தராயணம் என்று அழைக்கப்படுகிறது. உத்தராயணத்தின் ஆரம்ப தினமான நாளை (வியாழக்கிழமை) நாம் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது போல வட மாநிலங்களில் இது மகர சங்கராந்தியாகக் கொண்டாடப்படுகிறது.
சூரியன் இந்த ராசிக்கு மாறும்போது, மங்களகரமான மற்றும் சுபச் செயல்கள் நடைபெறத் தொடங்குகின்றன. உத்தராயணம் பிறக்கும் நாள் கடவுளின் நாள் என்று கூறப்படுகிறது. அதனாலேயே இதை உத்தராயண புண்ணிய காலம் என்று அழைக்கிறார்கள்.
எனவே, புதிய வேலை, திருமணம் போன்ற மங்கல காரியங்களை இம்மாதத்தில் தொடங்குவது மிகவும் விசேஷமாகக் கருதப்படுகிறது. அதிகபட்ச ஒளியைக் கொண்ட 6 மாத உத்தராயண புண்ணிய காலத்தில் யாருக்காவது உயிர் பிரிந்தால் அவர் மோட்சத்தை அடைவார் என்றும் அவருக்கு மறுபிறப்பு இல்லை என்றும் பகவத்கீதையில் பகவான் கிருஷ்ணர் கூறுகிறார்.
மகாபாரதத்தில் பீஷ்மர் தன்னுடைய உயிர் பிரிவதற்கு உத்தராயண புண்ணிய காலம் வரும்வரை முள் படுக்கையில் படுத்து போர்க்களத்திலேயே காத்திருந்தார். உத்தராயண புண்ணிய காலத்தின் தொடக்க நாளான தை மாத முதல் நாளன்று பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வதும், அன்று பொங்கல் வைத்து சூரிய பகவானை வேண்டி வழிபடுவதும் பலன்களை தரும்.
மனிதர்களின் ஒரு நாள், 24 மணி நேரம். அதில் 12 மணி நேரம் பகல் மற்றும் 12 மணி நேரம் இரவு நேரமாகும். அதே போல தேவர்களுக்கு, மனிதர்களின் ஒரு ஆண்டு என்பது ஒரு நாள் ஆகும். ஆறு மாதம் பகலாகவும், ஆறு மாதம் இரவாகவும் பிரிக்கப்பட்டிருக்கும். உத்திராயணம் என்பது தேவர்களின் பகல் காலத்தை குறிக்கும்.






