என் மலர்tooltip icon

    வழிபாடு

    சயன கோலத்தில் காட்சிதரும் திருச்சிறுபுலியூர் தலசயனப் பெருமாள்
    X

    சயன கோலத்தில் காட்சிதரும் திருச்சிறுபுலியூர் தலசயனப் பெருமாள்

    • திருமாலுக்குரிய 108 திவ்ய தேசங்களில் 24-வது தலமாக இக்கோவில் போற்றப்படுகிறது.
    • . வேண்டுதல் நிறைவேறியதும் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்தும், வஸ்திரம் சாற்றியும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

    திருவாரூர் மாவட்டம் திருச்சிறுபுலியூர் எனும் கிராமத்தில் அமைந்துள்ளது, தலசயனப் பெருமாள் கோவில்.

    திருமாலுக்குரிய 108 திவ்ய தேசங்களில் 24-வது தலமாக இக்கோவில் போற்றப்படுகிறது. திருவரங்கத்தில் பெரிய வடிவில் சயன கோலத்தில் அருளும் பெருமாள், இத்தலத்தில் பாலகனாக சயன கோலத்தில் காட்சி தருவது தனிச் சிறப்பாகும்.

    ஒரு சமயம் ஆதிசேஷனுக்கும், கருடனுக்கும் பகை ஏற்பட்டது. இந்த பகை நீங்குவதற்காக ஆதிசேஷன் இத்தலம் வந்து தலசயனப் பெருமாளை நோக்கி தவம் இயற்றினார். அவரது தவத்தில் மகிழ்ந்த பெருமாள், மாசி மாதம் வளர்பிறை ஏகாதசி தினத்தில் காட்சி அளித்தார். மேலும், அவரை தனது படுக்கையாக ஏற்றுக்கொண்டு, குழந்தை வடிவில் சயன கோலத்தில் காட்சி தருவதாக தல வரலாறு கூறுகிறது.

    கோவில் தோற்றம்

    கோவில் நான்கு நிலை ராஜகோபுரத்துடன் காணப்படுகிறது. கருவறையில் தலசயனப் பெருமாள், நந்த வர்த்தன விமானத்துடன் சிறிய வடிவில் சயன கோலத்தில் உள்ளார். அவர் பாதத்திற்கு அருகிலேயே வியாக்ரபாதர் காட்சி தருகிறார். ஆதிசேஷன் தனிச் சன்னிதியில் ஆனந்தாழ்வார் என்ற பெயருடன் காணப்படுகிறார்.

    ஆலயத்தில் சித்திரை வருடப்பிறப்பு, வைகாசி பிரம்மோற்சவம், ஆடிப்பெருக்கு, ஆடிப்பூரம், கிருஷ்ண ஜெயந்தி, நவராத்திரி, திருக்கார்த்திகை, மார்கழி வைகுண்ட ஏகாதசி, பங்குனி உத்திர விழா போன்றவை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    நாக தோஷம்,மாங்கல்ய தோஷம், செவ்வாய் தோஷம், நவக்கிரக தோஷம் உள்ளவர்கள், எதிரிகளால் ஆபத்து உள்ளவர்கள் இங்கு வந்து வழிபாடு செய்கின்றனர். வேண்டுதல் நிறைவேறியதும் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்தும், வஸ்திரம் சாற்றியும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

    கோவில் காலை 7 மணி முதல் 12 மணி வரையும், மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும். மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் 17 கிலோமீட்டர் தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது. கொல்லுமாங்குடி ரெயில் நிலையத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது.

    Next Story
    ×