என் மலர்tooltip icon

    வழிபாடு

    அர்ஜூனன் பிரதிஷ்டை செய்த சூளகிரி வரதராஜப் பெருமாள்
    X

    அர்ஜூனன் பிரதிஷ்டை செய்த சூளகிரி வரதராஜப் பெருமாள்

    • இக்கோவில், தமிழகத்தின் திருப்பதி என்றும் பக்தர்களால் அழைக்கப்படுகிறது.
    • அர்ஜூனனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட பெருமாளுக்கு சோழ மன்னர்கள் கருவறை கட்டி உள்ளனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் பழமைவாய்ந்த வரதராஜப் பெருமாள் கோவில் உள்ளது. இங்கு வரதராஜப் பெருமாள், பெருந்தேவி மகாலட்சுமி தாயாருடன் அருள்பாலிக்கிறார். ஏழு மலை, ஏழு கோட்டை, ஏழு மகா துவாரங்கள், ஏழு அடி உயர பெருமாள் என இங்குள்ள ஏழுமலை வாசனுக்கு எல்லாமே 7 என்ற எண்ணிக்கையில் அமைந்திருப்பது சிறப்பாகும். இக்கோவில், தமிழகத்தின் திருப்பதி என்றும் பக்தர்களால் அழைக்கப்படுகிறது.

    மகாபாரதத்தில் பஞ்ச பாண்டவர்கள், துரியோதனனிடம் சூதாட்டத்தில் தோற்று வன வாசம் செல்லும் நிலை ஏற்பட்டது. அதன்படி, பல இடங்களுக்கு சென்றுவிட்டு, சூளகிரி மலைப்பகுதிக்கு வந்தனர். அப்போது பஞ்ச பாண்டவர்களில் ஒருவனான அர்ஜூனன், பெருமாளை வழிபட எண்ணி, இங்குள்ள பெருமாளை பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக நம்பப்படுகிறது.

    அர்ஜூனன் பிரதிஷ்டை செய்ததற்கு சான்றாக இந்த மலையில் 'ஐந்து குண்டு' எனப்படும் ஐந்து குன்றுகள் உள்ளன. இங்கிருக்கும் மலை பார்ப்பதற்கு சூலம் போன்ற அமைப்பில் இருப்பதாலேயே இப்பகுதி சூளகிரி (சூலகிரி) என அழைக்கப்படுகிறது.

    இந்த ஆலயம், பல காலங்களில் பல மன்னர்களால் படிப்படியாக கட்டப்பட்டதாகும். அர்ஜூனனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட பெருமாளுக்கு சோழ மன்னர்கள் கருவறை கட்டி உள்ளனர். விஜயநகர மன்னன் கிருஷ்ண தேவராயர், முன்மண்டபத்தை கட்டி உள்ளார். பின்னர், ஹொய்சாலர்கள், பாளையக்காரர்கள் மற்றும் சில சிற்றரசர்கள் என பலர் கோவிலை விரிவுபடுத்தி உள்ளனர்.

    சுமார் மூன்றாயிரம் அடி உயரம் கொண்ட சூளகிரி மலையின் அடிவாரத்தில் இக்கோவில் அமைந்துள்ளது. கருவறையில் வரதராஜப் பெருமாள் மேற்கு திசை பார்த்தபடி அருள்பாலிக்கிறார். கருவறை, மற்ற கோவில்களை விட உயரம் குறைவாக காணப்படுகிறது. பெருந்தேவி மகாலட்சுமி தாயார், பெருமாளை பார்த்தபடி கிழக்கு நோக்கி தனிச் சன்னிதியில் காட்சி தருகிறார். மகாமண்டபத்தின் வலதுபக்கத்தில் அனுமன் வீற்றிருக்கிறார்.

    உத்தராயண காலத்தில் சூரியன் மறையும் பெருமாள் வேளையில், சூரியக் கதிர்கள் பெருமாளின் பாதத்தில் விழுவது இக்கோவிலின் தனிச் சிறப்பாகும். கோவிலில் வைகுண்ட ஏகாதசியின்போது, கருடசேவை வெகுவிமரிசையாக நடைபெறுகிறது. ஓசூர் - கிருஷ்ணகிரி சாலையில் 25 கி.மீ. தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது.

    Next Story
    ×