என் மலர்tooltip icon

    வழிபாடு

    மழை தரும் மிளகு பிள்ளையார்
    X

    மழை தரும் மிளகு பிள்ளையார்

    • பொம்மை பிரம்மசாரியின் கைக்கு வந்தவுடன் உயிர்பெற்றது.
    • பிரம்மசாரி இளைஞன் பசுவை கண்ட இடம்தான் சேரன்மாதேவி.

    திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவியில் அமைந்துள்ளது மிகவும் பழமைவாய்ந்த மிளகு பிள்ளையார் கோவில். பருவமழை பொய்க்கும் பொழுது, இங்குள்ள விநாயகருக்கு மிளகு அரைத்து, அபிஷேகம் செய்தால் மழை பெய்யும் என்பது நம்பிக்கை.

    தல வரலாறு

    முன்னொரு காலத்தில், கேரளாவை ஆண்ட மன்னனுக்கு தீராத வயிற்று வலி ஏற்பட்டது. எவ்வளவு சிகிச்சை அளித்தும் பலனில்லை. ஒரு நாள் மன்னன் கனவில், ''முன்ஜென்ம பயனால் தான் இந்த வயிற்று வலி உண்டாகி உள்ளது. இதற்கு பரிகாரமாக, உன் உருவ அமைப்பில் எள்ளு தானியத்தால் ஒரு பொம்மை செய்து, அதை அந்தணர் ஒருவருக்கு தானம் செய்தால் உன்னுடைய முன்ஜென்ம பலன் அவருக்குச் சென்றுவிடும்'' என்று தெய்வீக குரல் கேட்டது.

    மன்னனும் அதன்படியே பொம்மையைச் செய்து, அதை தானம் அளிக்கத் தகுந்த அந்தணரைத் தேடினான். ஆனால் அதை தானமாக பெற்றால் மன்னனுடைய முன் வினைப் பயனும், பாவமும் தங்களை வந்து சேர்ந்துவிடும் எனப் பயந்து யாரும் தானம் பெற முன்வரவில்லை. இதனால் மன்னன், தானம் பெறும் அந்தணருக்கு பொன்னும், பொருளும் பரிசாகத் தருவதாக அறிவித்தான். இதை அறிந்த கர்நாடகாவை சேர்ந்த பிரம்மசாரி அந்தண இளைஞன் ஒருவன், மன்னனிடம் இருந்து அந்த பொம்மையை பெற்றுக்கொண்டான். இதனால் மன்னனை பிடித்திருந்த முன்ஜென்ம பாவ வினைகள் நீங்கியது. மன்னனும் தான் அறிவித்தபடி பொன், பரிசுகளை கொடுத்தான்.

    அந்த பொம்மை பிரம்மசாரியின் கைக்கு வந்தவுடன் உயிர்பெற்றது. அந்த பொம்மை, பிரம்மசாரி செய்திருந்த பூஜையின் பலனில் ஒரு பகுதியைக் கேட்டது. அப்படி கொடுத்துவிட்டால் வியாதி நெருங்காது என்றும் சொன்னது. இதைக்கேட்ட அந்த பிரம்மசாரி, பூஜை பலனில் ஒரு பகுதியை கொடுத்துவிட்டான்.

    கோவில் தோற்றம்

    ஆனால், கொடுத்த பின்புதான் அவனது மனம் வேதனை அடைந்தது. ''வியாதி ஏற்பட்டு அவதிப்படுவோம் என்ற பயத்தில், சுயநலம் கருதி தர்மத்துக்கு மாறாக பூஜையின் பலனை தானம் செய்து விட்டோமே'' என்று கலங்கினான். இதற்கு பிராயச்சித்தமாக தனக்கு கிடைத்த மதிப்புமிக்க பொருட்களை பொதுநலன் கருதி செலவழிப்பது என்று முடிவெடுத்தான். ஆனால், என்ன செய்வது என்ற குழப்பத்துடன், பொதிகை மலையில் வசித்து வரும் தன் குருவான அகத்திய முனிவரிடம் சென்றான்.

    அகத்தியர், ''தானத்தில் சிறந்தது தண்ணீர் தானம் தான். மலையில் இருந்து நீ திரும்பி செல்லும்போது, வழியில் ஒரு பசுவை காண்பாய். அது போகும் வழியில் ஒரு கால்வாய் வெட்டு. பசு சாணம் போடும் இடத்தில் மதகு ஏற்படுத்து. அது கோமியம் பெய்யும் இடங்களில் மறுகால் ஏற்படுத்து. பசு படுக்கும் இடங்களில் ஏரி தோண்டு. ஒரு குறிப்பிட்ட இடத்தில் பசு மறைந்து விடும். அங்கே கால்வாய் பணியை முடித்து, மீதி தண்ணீர் அங்கே சேரும்படியாக ஒரு குளம் தோண்டு'' என்றார்.

    அதன்படி, அந்த பிரம்மசாரி இளைஞன் பசுவை கண்ட இடம்தான் சேரன்மாதேவி. அகத்திய முனிவரே அந்த பசுவாக மாறி வந்து நின்றதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது. பசு சென்ற பாதையில் மதகு, ஏரிகளை அமைத்த இளைஞன், கடைசியாக பசு மறைந்த பிராஞ்சேரி என்ற ஊரில் மிகப்பெரிய ஏரியை தோண்டினான். இப்போதும் மழை காலங்களில் நீர் நிறைந்து காணப்படும் இந்த ஏரியை பார்த்தால், கடல் போல் காட்சியளிக்கும். இத்தகைய சேவையை செய்த அந்த பிரம்மசாரி இளைஞனின் பெயர் யாருக்கும் தெரியவில்லை. எனவே, அந்த கால்வாய் அவனது மொழியின் பெயரில் 'கன்னடியன் கால்வாய்' என்று அழைக்கப்படுகிறது.

    ஒரு சமயம் ஆண்டு முழுவதும் மழை பெய்யாமல் கால்வாய் வறண்டு காணப்பட்டது. இதனால் மனம் வருந்திய பிரம்மசாரி இளைஞன், உடனே ஒரு விநாயகரை பிரதிஷ்டை செய்து, அவரது உடலில் மிளகை அரைத்து தேய்த்து அபிஷேகம் செய்தான். மேலும், அந்த அபிஷேக நீர் கால்வாயில் விழும்படி செய்தான். உடனே, ஆச்சரியப்படும் விதமாக மழை பெய்தது. இதையடுத்து மழை பெய்யாத காலங்களில் விநாயகருக்கு மிளகு அரைத்து அபிஷேகம் செய்யும் வழக்கம் ஏற்பட்டது. இன்றும் சேரன்மாதேவி பகுதியை சேர்ந்த விவசாயிகள் மழையில்லா காலங்களில் இந்த வழிபாட்டை மேற்கொள்கிறார்கள்.

    அமைவிடம்

    திருநெல்வேலியில் இருந்து சுமார் 17 கி.மீ. தொலைவில் உள்ள சேரன்மாதேவியில் அமைந்துள்ளது மிளகு பிள்ளையார் கோவில்.

    Next Story
    ×