என் மலர்
வழிபாடு

நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி
குழந்தை பாக்கியம் அருளும் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி
- சிவபக்தனாக வீரபாகு பாண்டிய மன்னனுக்கும், விக்கிரமசோழனுக்கும் நீண்ட காலமாக பகை இருந்து வந்தது.
- சிவபெருமானின் கோபத்தால் விக்கிரமசோழனின் கண்பார்வை பறிபோனது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தேவதானம் எனும் கிராமத்தில் அமைந்துள்ளது, நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி திருக்கோவில். தென் தமிழகத்தின் பஞ்சபூதத் தலங்களில் இக்கோவில் ஆகாயத் தலமாக போற்றப்படுகிறது.
தல வரலாறு
சிவபக்தனாக வீரபாகு பாண்டிய மன்னனுக்கும், விக்கிரமசோழனுக்கும் நீண்ட காலமாக பகை இருந்து வந்தது. விக்கிரசோழன், பாண்டிய மன்னன் மீது பலமுறை போர் தொடுத்தும், அவனை வெல்ல முடியவில்லை. இதனால், அவனை வஞ்சகத்தால் கொல்ல முடிவு செய்தான். அதன்படி, அவனுடன் நட்பு கொள்வதாகக் கூறி, நச்சு கலந்த ஆடையை தன்னுடைய சேவகனிடம் பரிசாக அனுப்பி வைத்தான். அந்த ஆடையை அணிந்தவர் எரிந்து சாம்பலாகி விடுவார்.
இறைவன் அருளால், சோழ மன்னனால் தனக்கு ஏற்பட இருந்த சதித் திட்டத்தை பாண்டிய மன்னன் அறிந்து கொண்டான். தனக்கு பரிசாக அனுப்பி வைத்த நச்சு ஆடையை, அதைக் கொண்டு வந்த சேவகனுக்கே அணிவித்தான். சிறிது நேரத்தில் அந்த சேவகன் எரிந்து சாம்பலானான். நச்சு ஆடையை அணியவிடாமல் காப்பாற்றிய சிவபெருமானுக்கு பாண்டிய மன்னன் கோவில் எழுப்பினான். மேலும், இத்தல இறைவனுக்கு 'நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி' என்றும் பெயர் சூட்டினான்.
அதே சமயம் சிவபெருமானின் கோபத்தால் விக்கிரமசோழனின் கண்பார்வை பறிபோனது. பிறகு, தன் தவறை உணர்ந்த விக்கிரமசோழன், பாண்டிய மன்னனிடம் மன்னிப்பு கேட்டான். மேலும், தனக்கு மீண்டும் கண்பார்வை கிடைக்க வேண்டி தேவதானம் வந்து இத்தல இறைவனை வழிபட்டான். அதன் காரணமாக விக்கிரமசோழனுக்கு ஒரு கண்பார்வை மட்டும் கிடைத்தது.
இதையடுத்து மற்றொரு கண்ணுக்கும் பார்வை கிடைக்க வேண்டும் என்று வேண்டினான். அப்போது சிவபெருமான், ''மற்றொரு கண்ணுக்கும் பார்வை வேண்டும் என்றால், இவ்வூரின் அருகிலேயே இன்னும் ஒரு கோவிலை எழுப்பு'' என்று அசரீரியாக ஒலித்தார். அதன்படி அருகில் இருக்கும் சேத்தூர் என்ற இடத்தில் விக்கிரமசோழன் கோவில் கட்டினான். இதையடுத்து, அவனுக்கு மற்றொரு கண்பார்வையும் கிடைத்தது.
அகத்திய முனிவரின் வேண்டுகோளுக்கு இணங்க, உலக மக்களின் நன்மைக்காக பார்வதி தேவி சிவபெருமானை நோக்கி ஊசி முனையில் நின்று தவம் இயற்றினார். இதனால் இங்குள்ள அம்பாள், தவமிருந்த நாயகி என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.
கோவில் அமைப்பு
கோவில் முகப்பு வாசலை தாண்டி உள்ளே நுழைந்ததும், கொடிமர மண்டபம் காணப்படுகிறது. அதில் கொடிமரம் அழகுற காட்சி அளிக்கிறது. அதையடுத்து, கொலுமண்டபம், தியான மண்டபம், அர்த்த மண்டபம், கர்ப்ப மண்டபம் என மண்டபங்கள் காணப்படுகின்றன. கருவறையில் லிங்க வடிவமாக நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி அருள்பாலிக்கிறார். கோவிலை சுற்றி தட்சிணாமூர்த்தி, விஷ்ணு - மகாலட்சுமி, பிரம்மா, சரஸ்வதி, கன்னிமூல கணபதி, வள்ளி - சமேத முருகப்பெருமான், சனீஸ்வரர், சண்டிகேஸ்வரர், பைரவர் ஆகியோர் வீற்றிருக்கிறார்கள். கோவில் வெளிச்சுற்று பிரகாரத்தில் திருக்கொழுந்தீஸ்வரர், கண் கொடுத்த சிவன், கண் எடுத்த சிவன் ஆகிய மூன்று சிவன் சன்னிதிகள் உள்ளன. கண்பார்வை குறைபாடு உள்ளவர்கள், இந்த மூன்று சன்னிதி களையும் வழிபட்டு வந்தால் விரைவில் கண் சம்பந்தப்பட்ட குறைபாடுகள் சரியாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
குழந்தை பாக்கியம் வேண்டி வரும் தம்பதியர், இக்கோவிலில் உள்ள நாகலிங்க மரத்தின் பூக்களை பறித்து சுவாமிக்கு அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். பின்பு, அந்தப் பூக்களை பிரசாதமாக பெற்று உண்டால் குழந்தை பாக்கியம் கிடைப்பதாக நம்பப்படுகிறது.
அமைவிடம்
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் - புளியங்குடி சாலையில் ராஜபாளையத்தில் இருந்து 14 கி.மீ. தொலைவில் உள்ளது தேவதானம். அங்கிருந்து உள்ளே 3 கி.மீ. தூரத்தில் இக்கோவில் அமைந்துள்ளது.






