என் மலர்
வழிபாடு

நாளை விரதம் இருந்து விநாயகரை வழிபடலாம்- மங்கல வாழ்வு அருளும் மாசி சங்கடஹர சதுர்த்தி
- விநாயகருக்குரிய அஷ்டோத்திரங்களைச் சொல்லி வழிபடலாம்.
- முடிந்தவர்கள் மோதகம் செய்து நைவேத்தியம் செய்யலாம்.
மாசி மாதத்தை கும்ப மாதம் என்பார்கள். கும்பத்தில் சூரியன் வரக்கூடிய மாதமே மாசி மாதம் என்று அழைக்கப்படுகிறது. எல்லா தெய்வங்களுக்கும் சிறப்பு மிக்க மாதமாக மாசி மாதம் கருதப்படுகிறது. மாசி மாதத்தில் வருகிற சங்கடஹர சதுர்த்தி விசேஷமானது.
சந்திரன், விநாயகரை நோக்கி தவம் இருந்து அவரது அருளைப் பெற்றான். சந்திரனுக்கு விநாயகர் தரிசனம் தந்தநாள் மாசி மாதம் தேய்பிறை முடிந்து 4-ம் நாள் ஆகும். இதைத்தான் நாம் சங்கடஹர சதுர்த்தி என்கிறோம். தேய்பிறைச் சதுர்த்தியில் சந்திரன் உதயமாகும் போது சதுர்த்தி திதி இருப்பது சிறப்பு. அங்காரகனான செவ்வாய், விநாயகரை பூஜித்ததன் மூலமே நவக்கிரக நாயகர்களில் ஒருவன் என்ற பதவியை பெற்றான். சந்திரன் சதுர்த்தியில் விரதம் இருந்து சங்கடம் நீங்கியதாலேயே இந்த விரதம் சங்கடஹர சதுர்த்தி விரதம் என்று பெயர் பெற்றது.
அந்த வகையில் நாளை (வெள்ளிக்கிழமை) வரும் சங்கடஹர சதுர்த்தி அபூர்வ சக்தி வாய்ந்ததாகும். மாசி சங்கடஹர சதுர்த்தியில், மாலையில் விநாயகரை தரிசித்து, ஸ்ரீகணபதி பெருமானுக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபட வேண்டும்.
ஜாதகத்தில் சந்திரன் மற்றும் செவ்வாய் பலம் குன்றியிருப்பவர்கள், கட்டாயம் சங்கடஹர சதுர்த்தி வழிபாட்டை மேற்கொள்ள வேண்டியது அவசியம். உத்திராயண புண்ணிய காலத்தில் வரும் இந்த மாசி சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருந்து விநாயகரை வழிபடுவது என்பது அனைத்துவிதமான பிரச்சனைகளுக்குமான தீர்வை அளிக்கும்.
காலையில் குளித்துவிட்டு விநாயகரை வழிபட்டு விரதத்தைத் தொடங்க வேண்டும். இயலாதவர்கள் ஒருவேளை உணவு உண்டு விரதமிருக்கலாம். மாலையில் மீண்டும் நீராடி, விநாயகர் வழிபாட்டில் ஈடுபடலாம்.
வீட்டில் விநாயகரை வழிபடுபவர்கள், ஏற்கெனவே வீட்டில் விநாயகர் விக்கிரகமோ, படமோ இருந்தால் அதற்குப் பூஜைகள் செய்யலாம். இருந்தாலும் மஞ்சளில் பிள்ளையார் பிடித்து அதற்குப் பூஜை செய்து, அதற்குப் பின் படம் அல்லது விக்கிரகத்துக்குப் பூஜை செய்ய வேண்டும். விநாயகருக்குரிய அஷ்டோத்திரங்களைச் சொல்லி வழிபடலாம்.
விநாயகர் அகவல் போன்ற தமிழ் பாடல்களை பாடலாம். விநாயகரின் நாமங்களைச் சொல்லி அருகம்புல்லால் அர்ச்சனை செய்ய வேண்டும். விநாயகருக்கு எளிய நைவேத்தியங்களே பிரியம். தனியாகப் பிரசாதங்கள் செய்ய நேரம் கிடைக்காதவர்கள் பொரி, கடலை, வெல்லம் முதலியன வைத்து வழிபடலாம். முடிந்தவர்கள் மோதகம் செய்து நைவேத்தியம் செய்யலாம்.
ஆலயங்களுக்குச் சென்று வழிபாடு செய்பவர்கள், விநாயகருக்கு செய்யப்படும் அபிஷேக ஆராதனைகளைத் தரிசனம் செய்வது மிகவும் சிறப்பு மிக்கதாகும்.
விநாயகருக்கும் சந்திரனுக்கும் செய்யப்படும் தீபாராதனைகளைத் தரிசனம் செய்ய, நம் கஷ்டங்கள் எல்லாம் தீரும். தொடர்ந்து 9 சங்கடஹர சதுர்த்தி நாளில், விநாயகர் ஆலயம் சென்று வணங்கி வந்தால் சகல துன்பங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை.
வளர்பிறை, தேய்பிறை என மாதத்திற்கு இருமுறை சதுர்த்தி வருவது உண்டு. இவற்றில் தேய்பிறையில் வரும் சதுர்த்தி சங்கடஹர சதுர்த்தி ஆகும். வளர்பிறையில் வரும் சதுர்த்தியை விட தேய்பிறை சங்கடஹர சதுர்த்தி நாளில் அதிகமானவர்கள் விரதம் இருந்து விநாயகப் பெருமானை வழிபடுவது உண்டு.
சங்கடம் என்றால் துன்பம், ஹர என்றால் அறுப்பது. எப்படிப்பட்ட துன்பத்தையும் அழிக்கக் கூடிய சக்தி வாய்ந்த சதுர்த்தி விரதம் என்பதாலேயே சங்கடஹர சதுர்த்தி அன்று அதிகமானவர்கள் விரதம் இருக்கிறார்கள்.
துன்பங்கள், தடைகள், மனக்குழப்பங்கள், நஷ்டம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் சங்கடஹர சதுர்த்தி அன்று விரதம் இருந்து வழிபடுவது சிறப்பு. காரணம், சந்திர பகவானுக்கு விநாயகர் சாப விமோசனம் அழித்ததால் தோன்றிய விரதம் என்பதால் ஜாதகத்தில் சந்திரனின் நிலை பாதிக்கப்பட்டிருக்கும் போது ஏற்படும் பலவிதமான துன்பங்களில் இருந்து விடுபட நினைப்பவர்கள் சங்கடஹர சதுர்த்தி அன்று விரதம் இருந்து, விநாயகப் பெருமானுக்கு அருகம்புல் சாற்றி வழிபடலாம்.
சனி தோஷத்திற்கு உள்ளாகிறவர்கள் இவ்விரதத்தை அனுஷ்டித்தால், சனியின் வேகம் குறையும். ஏழரை சனி, அஷ்டமத்து சனி, அர்த்தாஷ்டம சனி போன்றவற்றின் பிடியில் இருப்போர் விநாயகரின் அருள் கிடைத்து விடுதலை அடைவார்கள். சனி தோஷம் உள்ளிட்ட கிரக தோஷங்களால் பாதிக்கப்பட்டவர்கள் மாசி சங்கடஹர சதுர்த்தி நாளில் விநாயகரை 11 முறை வலம் வந்து, தோப்புக்கரணம் இட்டு ஆனைமுகனை வழிபட்டால் கிரகங்களால் ஏற்படும் பாதிப்புக்களில் இருந்து மீள முடியும்.
விநாயகருக்கு எள் உருண்டை நைவேத்தியமாக படைத்து வழிபட்டால் சனி பகவானின் பிடியில் இருந்து தப்பிக்கலாம். வீட்டில் செல்வம் பெருகும், செய்யும் தொழில் விருத்தியடையும், குழந்தை பாக்கியம் உண்டாகும், செய்யும் காரியம் வெற்றி பெறும், ஞானம் கிடைக்கும்.
முழு முதற் கடவுளான விநாயகரை வழிபட ஏற்ற நாள் திங்கட்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை ஆகும். இந்த ஆண்டு மகிமை நிறைந்த மாசி மாதத்தில் விநாயகருக்கு உரிய வெள்ளிக்கிழமையில் சங்கடஹர சதுர்த்தி வருவதால் இந்த நாள் மிகவும் விசேஷமானதாக கருதப்படுகிறது.






