என் மலர்tooltip icon

    வழிபாடு

    தலைவிதியை மாற்றும் கோட்டைமேடு சங்கமேஸ்வரர்
    X

    தலைவிதியை மாற்றும் கோட்டைமேடு சங்கமேஸ்வரர்

    • கிழக்கு நோக்கி அமைந்துள்ள இக்கோவிலில் அருள்பாலிக்கும் சிவலிங்கத்தின் மீது பிரம்ம சூத்திரம் வரையப்பட்டுள்ளது.
    • சுவாமியின் இடதுபுறத்தில் அன்னை அகிலாண்டேஸ்வரி தனிச் சன்னிதியில் அருள்பாலிக்கிறார்.

    கோயம்புத்தூர் மாவட்டம் கோட்டைமேடு பகுதியில் பழமை வாய்ந்த அகிலாண்டேஸ்வரி உடனாய சங்கமேஸ்வர சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. ஒரு சமயம் அசுரன் ஒருவன் சிவபெருமானை நோக்கி கடும் தவம் புரிந்து, சாகா வரம் பெற்றான். தேவலோகத்தை ஆள வேண்டும் என்ற ஆசை கொண்ட அந்த அசுரன், தேவர்களையும், முனிவர்களையும் கொடுமைப்படுத்தினான். இதனால் வருந்திய தேவர்கள் இந்திரனிடம் முறையிட்டனர். இந்திரன் அவர்களிடம், சிவபெருமானை வேண்டும்படி கூறினார். அதன்படி, சங்கு புஷ்பங்கள் நிறைந்த இப்பகுதியில் தேவர்களும், முனிவர்களும் சிவபெருமானை வழிபட்டு வந்தனர். அசுரனை அழிக்குமாறு வேண்டினர். அதன்பின், சிவபெருமான் அசுரனை வதம் செய்ததாக கூறப்படுகிறது.

    சிவபக்தனான கரிகால் சோழ மன்னன், குழந்தை வரம் வேண்டி சிவபெருமானை வழிபட்டு வந்தான். ஒரு நாள், சிவன் அற்புதம் செய்த தலங்களில் சிவாலயங்கள் கட்டுவதாக கனவு கண்டான். இது குறித்து தனது குருவிடமும், ஆன்றோரிடமும் ஆலோசனைக் கேட்டான். அதன்படி, சிவன் அற்புதம் செய்த இடங்களில் கோவில்களை எழுப்பினான். அவ்வாறு அவன் கட்டிய சிவாலயங்களில் ஒன்றாக இக்கோவில் விளங்குகிறது.

    கிழக்கு நோக்கி அமைந்துள்ள இக்கோவிலில் அருள்பாலிக்கும் சிவலிங்கத்தின் மீது பிரம்ம சூத்திரம் வரையப்பட்டுள்ளது. இந்த அமைப்பானது, இறைவன் நம் தலைவிதியை மாற்றும் வல்லமை உள்ளவர் என்பதை குறிப்பதாக உள்ளது. மரணத்தருவாயில் உள்ள இளைஞர்கள் இங்கு வந்து வழிபட்டால், அவர்களது தலைவிதி மாறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

    சுவாமியின் இடதுபுறத்தில் அன்னை அகிலாண்டேஸ்வரி தனிச் சன்னிதியில் அருள்பாலிக்கிறார். கோவில் சுற்றுப் பிரகாரத்தில் காசி விஸ்வநாதர், நீலகண்டேஸ்வரர், சூரிய பகவான், காப்பு விநாயகர், தட்சிணாமூர்த்தி, பைரவர் ஆகியோர் காட்சி தருகின்றனர். 63 நாயன்மார்களின் திருவுருவ சிலைகளும் உள்ளன. ஒரு தூணில் மேற்கு நோக்கியபடி ஆஞ்சநேயர் காட்சி தருகிறார்.

    மூலவர் மற்றும் அம்பாளின் சன்னிதிக்கு இடையில் சோமாஸ்கந்தராக உள்ள முருகப்பெருமான், சூரபத்மனை வதம் செய்யும் கோலத்தில் காணப்படுகிறார். இவரது ஆறு முகங்களும் நேராக நோக்கிய நிலையில், 12 கைகளிலும் ஆயுதங்களை தாங்கியபடி காட்சி தருகிறார். கோவில் அமைப்பை பார்க்கும்போது, முருகனே மூலவராக அருள்பாலிக்கும் வகையில் உள்ளது.

    கோயம்புத்தூர் மாவட்டம் கோட்டைமேடு பகுதியில் ஈஸ்வரன் கோவில் வீதியில் இக்கோவில் அமைந்துள்ளது.

    Next Story
    ×