என் மலர்
வழிபாடு

ஆனந்த வாழ்வு தரும் அனுமன் ஜெயந்தி
- மார்கழி மாதம் மூல நட்சத்திரமும், அமாவாசையும் இணையும் நாளில் அஞ்சனை மைந்தனாக அனுமன் அவதரித்தார்.
- ஆஞ்சநேயரின் வாலில் நவக்கிரகங்கள் ஐக்கியமாகி இருப்பதாக ஐதீகம்.
ராம நாமம் ஒலிக்கும் இடமெல்லாம் அனுமன் நிச்சயம் இருப்பார் என்பது ஐதீகம். ராமாயணத்தில் ராமருக்கு அடுத்தபடியாக, பக்தர்களால் கொண்டாடப்படும் கடவுள், அனுமன். இவர் அஞ்சனை மைந்தன், வாயு புத்திரன், ராம பக்தன், ராம தூதன், சிரஞ்சீவி, மாருதி, ஆஞ்சநேயர் எனப் பல பெயர்களில் அழைக்கப்படுகிறார். இவர் சிவபெருமானின் ருத்ர அம்சமாக கருதப்படுகிறார். ராம நாமத்தை சொல்பவர்களுக்கு உடனடியாக வந்து அருள்புரியும் அனுமனை வழிபட்டால் வாழ்வில் மகிழ்ச்சியும், புண்ணியமும் வந்துசேரும்.
மார்கழி மாதம் அமாவாசையுடன் வரும் மூலம் நட்சத்திரத்தில் அனுமன் அவதரித்ததாக கூறப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டு அனுமன் ஜெயந்தி மார்கழி மாதம் 4-ந் தேதி (19-12-2025) வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் பக்தர்கள் பலரும் விரதம் இருந்து ஆஞ்சநேயரை வழிபடுவார்கள். சில வட மாநிலங்களில் சித்திரை மாதத்தில் அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுவதும் உண்டு.
ராமாயணத்தில் ராவணனை அழிப்பதற்காக மகாவிஷ்ணு, ராமராக அவதரித்தார். அவருக்கு உதவுவதற்காக தேவர்கள் பலரும் பல சக்திகளை கொடுத்து உதவினர். அதே சமயம், கிஷ்கிந்தை வனப் பகுதியில் கேசரி என்ற வானர அரசனும், அவரது மனைவியான அஞ்சனை தேவியும் வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லாததால், குழந்தை வரம் வேண்டி சிவபெருமானை நோக்கி தவம் இருந்தனர். அவ்வேளையில் ராமருக்கு உதவுவதற்காக சிவபெருமான், தன்னுடைய சக்தியை வாயு பகவானிடம் கொடுத்து ஒரு பெண்ணிடம் சேர்க்கும்படி கூறினார். வாயு பகவான் ஈசனின் சக்தியை அஞ்சனை தேவியிடன் சேர்த்தார். இதன்மூலம் மார்கழி மாதம் மூல நட்சத்திரமும், அமாவாசையும் இணையும் நாளில் அஞ்சனை மைந்தனாக அனுமன் அவதரித்தார்.
அனுமன் ஜெயந்தி அன்று, அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு அனுமன் படத்துக்கு சிவப்பு நிற மலர்கள் சூட்டுங்கள். ஆஞ்சநேயருக்கு விருப்பமான உணவுகளை படைத்து, நெய் விளக்கேற்றி வழிபடுங்கள். அனுமனுக்குரிய பாடல்கள், ராமாயணத்தின் சுந்தர காண்டம் போன்றவற்றை படித்து வழிபடலாம். அதோடு வாழைப்பழம், வெற்றிலை, வெண்ணெய், செந்தூரம் போன்றவற்றை படைக்கலாம்.
வனவாசம் சென்ற ராமன் மனைவியை ராவணன் கவர்ந்து சென்றான். இதையடுத்து சீதையை மீட்கும் முயற்சியில் இருந்த ராமனுக்கு சிறந்த சேவகனாக இருந்தவர் அனுமன். ராமனுக்காக சீதையிடம் தூது சென்று, அவர் கொடுத்த கணையாளியை கொடுத்து சீதையின் மரணத்தை தடுத்தார். மேலும், சீதா தேவி கொடுத்து அனுப்பிய சூடாமணியை ராமரிடம் கொடுத்து, இருவரும் சேருவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர், அனுமன். இதனால் அனுமனை வழிபட்டால் பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வர், கணவன் - மனைவி ஒற்றுமை பலப்படும், ஆனந்த வாழ்வு அமையும் என்பது நம்பிக்கை.
ஆஞ்சநேயரின் வாலில் நவக்கிரகங்கள் ஐக்கியமாகி இருப்பதாக ஐதீகம். எனவே, அவரது வாலில் பொட்டு வைத்து வழிபடலாம். இவ்வாறு வழிபடுபவர்களுக்கு நவக்கிரகங்களின் தோஷம் விலகும் என்பது நம்பிக்கை.
சிவபெருமான், ராமருக்கு உதவி செய்வதற்காக ஆஞ்சநேயராக அவதரித்தார். இதனால் ஆஞ்சநேயரை வழிபட்டால் சிவனையும், பெருமாளையும் வழிபட்ட பலன் கிடைக்கும். ஆஞ்சநேயர் ஜெயந்தி அன்று, ஆஞ்சநேயரை மனதார வழிபட்டால் நினைத்த காரியம் நடக்கும். குடும்பத்தில் துன்பங்கள் விலகும், சகல மங்கலங்களும் வந்துசேரும்.






