என் மலர்
வழிபாடு

யோக நிலையில் அருள்பாலிக்கும் தட்சிணாமூர்த்தி
- பிரம்ம தேவரின் மகன்களான சனகாதி முனிவர்கள் நால்வருக்கும் தட்சிணா மூர்த்தியாக, சிவபெருமான் உபதேசித்துக் கொண்டிருந்தார்.
- யோக தட்சிணாமூர்த்தியின் கோலம் அரிதானது.
திருவண்ணாமலை மாவட்டம் நெடுங்குணம் எனும் இடத்தில் தீர்க்காஜலேஸ்வரர் கோவில் உள்ளது. இத்தலத்தின் மூலவர் தீர்க்காஜலேஸ்வரர், அம்பாள் பாலாம்பிகை ஆவர். இக்கோவில் சுகப் பிரம்ம ரிஷி வழிபட்ட தலம் ஆகும். இக்கோவிலில் சிவபெருமானின் 64 வடிவங்களில் ஒன்றான யோக தட்சிணா மூர்த்தி எழுந்தருளி இருப்பது தனிச் சிறப்பாகும்.
ஒரு சமயம் பிரம்ம தேவரின் மகன்களான சனகாதி முனிவர்கள் நால்வருக்கும் தட்சிணா மூர்த்தியாக, சிவபெருமான் உபதேசித்துக் கொண்டிருந்தார். அப்போது நால்வரும் யோக நிலையைப் பற்றியும் எடுத்துரைக்க வேண்டினார்கள். அவர்களின் வேண்டுதலை ஏற்று யோகம் பற்றியும், அதன் உட்கருத்துப் பற்றியும் சிவபெருமான் எடுத்துரைத்தார்.
ஆனால் சனகாதி முனிவர்களுக்கு தெளிவு ஏற்படவில்லை. இதனால் சிவபெருமான் தாமே யோக நிலையில் அமர்ந்து மவுனத்தின் மூலமாக ஞானமும், நிஷ்டையும் கைகூடும் தன்மையை போதித்து அருளினார். சிவபெருமானின் இத்திருக்கோலத்தை 'யோக தட்சிணாமூர்த்தி' என்று போற்றுகின்றன.
யோக தட்சிணாமூர்த்தியின் கோலம் அரிதானது. இரு பாதங்களையும் குத்திட்டு, குறுக்காக வைத்து, யோகபட்டயம் தரித்து, முன் இரண்டு கரங்களையும் முழங்கால்கள் மீது நீட்டி, பின் இரண்டு திருக்கரங்களில் அட்சய மாலை மற்றும் கமண்டலம் ஏந்தி காட்சி தருகிறார்.
இந்த யோக தட்சிணாமூர்த்தியை இலுப்பெண்ணெய், வேப்பெண்ணெய், நல்லெண்ணெய் ஆகியவை கொண்டு விளக்கேற்றி வழிபட்டால் செவ்வாய் தோஷம் விலகும். கல்வியில் மேன்மை பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மேலும், இக்கோவிலில் உள்ள சப்தகன்னிமார் மிகவும் சக்திவாய்ந்தவர்கள். இவர்களுக்கு அபிஷேகம், ஆராதனை செய்து வழிபட்டால் மழை பொழிந்து, விவசாயம் செழிக்கும் என்கிறார்கள்.
திருவண்ணாமலையில் இருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் நெடுங்குணம் எனும் இடத்தில் இத்தலம் அமைந்துள்ளது.






