என் மலர்tooltip icon

    முக்கிய விரதங்கள்

    இந்த மதத்தில் பெண்கள் கடைபிடிக்கும் விரதங்கள் பல்வேறு நன்மைகளை தரவல்லது. பெண்கள் மாங்கல்ய பாக்கியம் நீடித்திருக்க இந்த சந்திராயன விரதத்தை அனுஷ்டிக்கலாம்.
    பெண்கள் மாங்கல்ய பாக்கியம் நீடித்திருக்க இந்த சந்திராயன விரதத்தை அனுஷ்டிக்கலாம். இந்த விரதத்தை எப்படி கடைபிடிக்க வேண்டும் என்பதை பார்க்கலாம்.சந்திராயன விரதத்தை மேற்கொள்ளுபவன் பவுர்ணமியன்று 15 கவளம், அடுத்த நாள் முதல் 14, 13 என்று குறைத்துக் கொண்டே வந்து அமாவாசை அன்று சுத்த உபவாசம் இருக்க வேண்டும். அடுத்த நாள் ஒரு கவளம் மட்டும் உட்கொண்டு அது முதல் ஒவ்வொன்று கூட்டி பவுர்ணமி அன்று 15 கவளம் உட்கொள்ள வேண்டும்.

    ஒரு மாதத்திற்கு இரண்டு அமாவாசை வந்தால், அது மலமாசம், அந்த மாதங்களில் விரதம், ஓமம், பிரதிக்ஞை-திருவுருவப் பிரதிஷ்டை கூடாது. ஒரு பவுர்ணமி முதல் அடுத்த பவுர்ணமி வரை உள்ள நாட்கள் கொண்டது சாந்திர மாசம்; முப்பது நாட்களை உடையது சவுர மாசம்;சூரியன் ஒரு ராசியில் தங்கி இருக்கும் காலம் சவுர (அ) சூரிய மாதம்; 27 நாட்களைக் கொண்டது நட்சத்திர மாதம் எனப்படும்.

    விரதகாலத்தில் தரையில் உறங்க வேண்டும். ஜபங்களை விடாமல் செய்ய வேண்டும். பிராமணர்களுக்குத் தக்ஷிணை, தானம் தர வேண்டும். பசு, சந்தனக்கட்டை, பாத்திரங்கள், நிலம், குடை, கட்டில் போன்றவை தானப் பொருள்களாகும்.
    பொதுவான விதிகளோடு எந்தக் கடவுளுக்கான விரதமோ அந்த தெய்வத்திற்கான வழிமுறையும் துதிகளும் சேர்த்துக் கொள்ளப்படும்.
    விரதங்களைக் கடைபிடிக்கும் முறைப் பற்றித் தெரிந்து கொண்டு எந்த விரதமானாலும் சுலபமாக அனுசரித்து எண்ணற்ற நற்பலன்களைப் பெறுங்கள். எந்த ஒரு விரதமானாலும், முதல் நாளே வீட்டைக் கழுவி தூய்மைப்படுத்துங்கள். பூஜைகளின்போது கோலம் இரு இழைகளால் அமையவேண்டும் என்பது பொதுவான விதி!

    விரத தினத்தன்று சூரிய உதயத்திற்கு முன்பாக எழுந்து நீராடி தூய ஆடையினை அணிந்து அவரவர் வழக்கப்படி குங்குமம், திருநீறு, சந்தனம் அணியுங்கள். வழிபடப் போகிற தெய்வ உருவங்கள், படங்களை நன்றாகத் துடைத்து சந்தனம், குங்குமம் பொட்டுகள் இட்டு, மலர்களால் அலங்கரியுங்கள்.

    (சில தெய்வங்களை குறிப்பிட்ட மலர் அல்லது இலையால் அர்ச்சிப்பது கூடுதல் பலன்தரும். உதாரணமாக, துர்க்கைக்கு செவ்வரளிப்பூ). அனைத்து பூஜைகளுக்குமே தூய்மையான நீரும், பூவும் அவசியம். முதல் நாளே தனியாக நீரெடுத்து வைத்துக் கொள்ளுங்கள். எல்லா நோன்புகளுக்குமே ஆரம்பமாக பிள்ளையாரை பூஜிக்க வேண்டும்.

    மஞ்சளில் பிடித்து வைத்து வழிபடுவது நல்லது. விரதம் நிறைவடைந்த பின் அல்லது மறுநாள் அந்த மஞ்சள் பிள்ளையாரை நீரில் கரைத்துவிட வேண்டும். விரதத்திற்காக வைக்கப்படும் கலசத்தினை ஆரம்பத்திலேயே சரியான இடத்தில் வைத்துவிடவேண்டும். ஒருமுறை வைத்துவிட்டால், விரத வழிபாடுகள் நிறைவடைந்த பிறகே கலசத்தினை நகர்த்தலாம்.

    அதற்கு முன் நகர்த்தக் கூடாது. ஆணோ பெண்ணோ விரதம் கடைப்பிடிப்பவர் யாராக இருந்தாலும், குடும்பத்துப் பெரியவர்களிடமோ, பெற்றோரிடமோ ஆசிபெற்றும் வாழ்க்கைத் துணையின் அனுமதியோடும் விரதத்தினை மேற்கொள்வது நல்லது. இதனால் விரதகாலத்தில் பிறரால், எதிர்பாராத மனவருத்தங்கள் வராமல் இருக்கும்.

    விரதகாலத்தில் உண்ணாமல் இருப்பதும், அவசியமானால் மிக எளிமையான உணவை எடுத்துக் கொள்வதும் அவரவர் உடல், மன நிலைக்கு ஏற்றபடியானது. அதேசமயம் ஏகாதசி விரதம் போன்ற விரதங்களில் உணவருந்தாமல் இருப்பது அவசியம். எனவே உங்கள் உடல்நிலைக்கு ஏற்ற விரதத்தினை அனுசரிப்பதே நல்லது.

    விரதம் இருக்கும் சமயத்தில் இயன்றவரை இறை சிந்தனையுடன் இருப்பது அவசியம். விரதம் இருக்கும் தினங்களில் முடிந்தவரை பேசுவதைக் குறைத்துக் கொள்ளுங்கள். விரதகாலத்தில் எவர்மீதும் கோபப்படுவதோ, வீண்விவாதங்கள் செய்வதோ கூடாது. பூஜைக்கு உரிய தெய்வத்தின் துதிகள், பாடல்களை அன்று முழுவதுமே கேட்பது, படிப்பது, சொல்வது நல்லது.

    தெரியாதவர்கள் அந்தக் கடவுளின் பெயரையே திரும்பத்திரும்ப சொன்னாலும் போதும். விரதம் இருப்பது நிச்சயம் பலன்தரும் என்பதை முழுமையாக நம்புங்கள். அதே சமயம் பலனை எதிர்பார்த்து மட்டுமே அனுசரிக்காமல் மனப்பூர்வமாக பக்தியுடன் கடைப்பிடியுங்கள். விரதம் இருப்பதோடு உங்களால் இயன்ற உதவியினை வசதியில் குறைந்தவர்களுக்குச் செய்யுங்கள்.
    இந்துமதத்தில் இருக்கும் பல்வேறு கடவுள்களுக்கும் பல விரதங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. இவை கடவுள் வழிபாட்டிற்கேற்ப மாறுபாடுகளைக் கொண்டுள்ளது.
    இந்துமதத்தில் இருக்கும் பல்வேறு கடவுள்களுக்கும் பல விரதங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. இவை கடவுள் வழிபாட்டிற்கேற்ப மாறுபாடுகளைக் கொண்டுள்ளது.

    விநாயக விரதங்கள் :

    விநாயக சதுர்த்தி
    ஆவணி சதுர்த்தி
    சங்கடஹர சதுர்த்தி விரதம்
    விநாயக சட்டி விரதம்

    சிவ விரதங்கள் :

    ஆனி உத்தரம்
    திருவாதிரை
    சிவராத்திரி
    பிரதோஷ விரதம்
    கேதாரகௌரி விரதம்

    சக்தி விரதங்கள் :

    நவராத்திரி
    வரலட்சுமி நோன்பு
    ஆடிப்பூரம்
    ஆடிச் செவ்வாய்
    பங்குனித் திங்கள்
    மாசி மகம்

    கந்த விரதங்கள் :

    கந்த சஷ்டி
    ஆடிக்கிருத்திகை
    வைகாசி விசாகம்
    தைப்பூசம்

    விஷ்ணு விரதங்கள் :

    ஏகாதசி விரதம்
    விரதம் என்பது ஒரு வகை விஷேட வழிபாடு ஆகும். விரதத்தைக் கடைப்பிடிப்பவர்கள் ஐம்புலன்களையும் அடக்கி, திரிகரண சுத்தியுடன் இருத்தல் வேண்டும்.
    உபவாசம், நோன்பு என்பன விரதத்துடன் தொடர்புடைய சொற்களாகும். உபவாசம் என்னும் சொல் இறைவனின் அருகே வசித்தல் என்ற பொருளைத் தரும். மேலும் ஒரு தினம் அல்லது பல தினங்கள் உணவு வகை எதனையும் விடுத்து இறை தியானத்தில் இருக்கும் நிலையே உபவாசம். விரதம் என்பது ஒரு வகை விஷேட வழிபாடு ஆகும்.

    விரதத்தைக் கடைப்பிடிப்பவர்கள் ஐம்புலன்களையும் அடக்கி, திரிகரண சுத்தியுடன் இருத்தல் வேண்டும். மன அடக்கத்தை மேம்படுத்த முடியும். பெரியோர் கூறும் புண்ணியம் ஏழினுள் ஒன்று. விரதம் அனுஷ்டிப்பதனால் மனம் புத்தி முதலிய உட்கருவிகள் தூய்மை அடையும். இதனால் ஞானம், நல்லறிவு கைகூடும்.

    எண்வகை விரதங்கள்

    1. சந்தாபண விரதம்
    2. மஹாசந்தாபண விரதம்
    3. பிரசமத்திய (அ) கிரிச்சா விரதம்
    4. அதிகிரிச்சா விரதம்
    5. பராக விரதம்
    6. தப்த கிரிச்சா விரதம்
    7. பதகிரிச்ச விரதம்
    8. சாந்தாராயன விரதம்
    அனந்த விரதத்தைப் பற்றி அனந்தனே சொன்ன அதியற்புத திருக்கதையை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்..
    கிருத யுகத்தில், வேத சாஸ்திரங்களில் கரை கண்டவரும் வசிஷ்ட கோத்திரத்தில் பிறந்தவருமான சுமந்தன், தன் மனைவி தீட்சா தேவியுடன் மனமொத்து நல்வாழ்வு நடத்தி வந்தார். அவர்களுக்கு சீலை என்ற மகள் இருந்தாள். சீலை பிறந்த கொஞ்ச நாள்களில் தீட்சா தேவி மரணமடைந்தாள்.
    ‘மனைவி இல்லாவிடில் நாம் செய்யும் தர்ம - கர்ம அனுஷ்டானங்களுக்குக் குறை வருமே!’ என்று எண்ணிய சுமந்தன், கர்க்கசை என்பவளை மறுமணம் செய்தார். கர்க்கசை கடினமான மனம் கொண்டவள். மூத்தாள் மகளான சீலையிடம், மறந்து போய்க்கூட அன்பு செலுத்தாதவள். ஆனால், சீலையோ பெயருக்குத் தகுந்தாற்போல, மிகுந்த சீலத்துடன் விளங்கினாள்.

    சீலைக்குத் திருமணப் பருவம் வந்ததும் கௌண்டின்யர் என்பவருக்கு அவளைத் திருமணம் செய்து வைத்தார் சுமந்தன். கல்யாணம் முடிந்ததும் சுமந்தன், ‘மாப்பிள்ளைக்கு ஏதாவது கொடுக்க வேண்டும்’ என்ற எண்ணத்துடன் கர்க்கசையிடம், ‘‘மாப்பிள்ளைக்கு என்ன கொடுக்கலாம்?” என்று கேட்டார். அவளோ திடீரென்று எழுந்து அறைக்குள் நுழைந்து கொண்டு, ‘‘இங்கு ஒன்றும் இல்லை. போங்கள்” என்று கத்தியவாறு கதவைச் சாத்திக் கொண்டாள்.

    வேறு வழியற்ற நிலையில் சுமந்தன் கொஞ்சம் கோதுமை மாவை மாப்பிள்ளையிடம் தந்து, ``இது வழியில் உபயோகப்படும். வைத்துக் கொள்ளுங்கள்!” என்று சொல்லி மணமக்களை வழியனுப்பி வைத்தார்.

    கௌண்டியன்யர் சீலையுடன் தனது ஆசிரமத்துக்குக் கிளம்பினார். சூரிய உதய காலம். வழிப்பயணத்தைச் சற்று நிறுத்திய கௌண்டின்யர் அங்கிருந்த ஒரு குளத்தில், சந்தியாவந்தனம் முதலான அனுஷ்டானங்களைச் செய்வதற்காகப் போனார்.

    அன்று அனந்த விரத தினமானதால் பெண்கள் பலர், சிவப்பு நிற ஆடை அணிந்து, பய பக்தியுடன் தனித்தனியாக அனந்த பத்மநாப ஸ்வாமியை பூஜை செய்து கொண்டிருந்தனர். மெள்ள அவர்களை நெருங்கிய சீலை, “நீங்கள் என்ன விரதம் செய்து கொண்டிருக்கிறீர்கள்? இதைப் பற்றித் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன்” என்றாள்.

    அந்தப் பெண்களும் அனந்த விரதம் குறித்த நியதிகளை வழிமுறைகளை விரிவாக எடுத்துச் சொன்னார்கள்.

    உடனே சீலை அங்கேயே நீராடி, தகப்பனார் தந்த கோதுமை மாவைப் பயன்படுத்தி, அங்கிருந்த பெண்களின் உதவியுடன் விரதம் தொடங்கி நோன்புக் கயிற்றைக் கட்டிக்கொண்டு முறைப்படி விரதத்தை முடித்தான். அதன்பின் மனத்திருப்தியுடன் கணவருடன் அவரது ஆசிரமத்தை அடைந்தாள்.

    அனந்த விரதம் அளவற்ற ஐஸ்வர்யங்களைச் சீலைக்கு அளித்தது. நவரத்தினங்களும் தங்கமும் அவள் உடலை அலங்கரித்தன. வருடம் தவறாமல் சீலை, அனந்த விரதம் அனுஷ்டித்தாள். அனந்தமான பலன்களுடன் ஆனந்தமான வாழ்வை அனுபவித்தாள்.

    செல்வ மயமான வாழ்வு கௌண்டியன்யரின் சிந்தனையை மாற்றியது போலும். ஒருநாள் சீலையின் கையில் கட்டப்பட்டு இருந்த நோன்புக் கயிற்றைக் கண்ட கௌண்டியன்யர், அந்த நோன்புக் கயிற்றையும் அவளையும் அவமானப்படுத்தினார்.

    சீலை பதறினாள். ‘‘ஸ்வாமி! இது கயிறு அல்ல. அனந்த பத்மநாப ஸ்வாமியையே நான் தரித்து இருக்கிறேன். அந்த ஸ்வாமியின் அனுக்கிரகத்தால் அல்லவா, இவ்வளவு செல்வங்களும் நமக்கு வாய்த்தன” என்றாள். ஆனால், அவள் சொன்னவற்றை கௌண்டின்யர் செவிமடுக்கவில்லை. மிகுந்த கோபத்துடன், மனைவியின் கையிலிருந்த கயிற்றை இழுத்து அறுத்து, எரியும் தீயில் போட்டார்.

    சீலை துடித்தாள். ``அந்த சரடு (கயிறு) அனந்தனின் வடிவம் அல்லவா? அது எரிந்தால் நமது குலமும் வீடும் எரியுமே” என்று கூவியபடி தீயில் இருந்த சரடை எடுத்து அது எரிவதற்குள் பாலில் போட்டாள்.

    நாள்கள் கடந்தன. கௌண்டின்யரின் செல்வம் குறையத் தொடங்கியது. அவரிடம் இருந்த பசுக்களை யாரோ திருடிச் சென்றனர். அவரது வீடு தீப்பிடித்துச் சாம்பலானது. உறவினர்களுடன் சண்டை ஏற்பட்டது. மற்ற எவரும் கௌண்டின்யரிடம் பேசாத ஒரு நிலை உண்டானது.

     கௌண்டின்யர் துயரக் கடலில் மூழ்கினார். மனைவியை அலட்சியப்படுத்தி மாதவனை அவமதித்தால் வந்த வினை இது! என்பதை உணர்ந்ததால், ‘`அனந்தா.. அனந்தா... எங்கே போனாய்? என்னை கைவிட்டு விடாதே” என்று கத்தியபடி காட்டுக்குள் ஓடினார். கண்ணில் கண்டவர்களிடம் எல்லாம், ``அனந்தனைப் பார்த்தீர்களா?” எனக் கேட்டார்.

    அவர் போகும் வழியில், பழங்கள் நிறைந்த மாமரம் ஒன்று இருந்தது. “மாமரமே! அனந்தனைப் பார்த்தாயா?” என்று கேட்டார். “இல்லை!” என்று பதில் வந்தது. கொஞ்ச தூரம் போனதும், ஒரு பசு மாட்டைப் பார்த்தார். ஏராளமாகப் புல் இருந்தும் அதை மேயாமல் அங்கும் இங்குமாக அலைந்துகொண்டிருந்தது அந்த பசு. அதனிடமும், “அனந்தனைப் பார்த்தாயா?” என கௌண்டின்யர் கேட்க, “இல்லை!” என்ற பதிலே வந்தது. இதேபோல் தான் பார்த்த காளை, யானை ஆகியவற்றிடமும் இதே கேள்வி கேட்டு இதே பதில் பெற்றார் அவர்.

    கௌண்டின்யரின் மனம் சோர்வுற்றது. உடல் தளர்ந்தது. நாக்கு உலர்ந்தது. “அனந்தா! அனந்தா!'' என்று கதறினார். அப்போது அவர் முன்னால் தரிசனம் தந்த ஸ்வாமி ஐஸ்வர்யம், தர்ம புத்தி, வைகுண்ட பிராப்தி ஆகிய மூன்று வரங்கள் தந்தார்.

    ஸ்வாமியைத் துதித்து வணங்கிய கௌண்டின்யர், தான் வழியில் கண்ட மாமரம் மற்றும் விலங்குகள் குறித்துக் கேட்டார்.

    “நீ பார்த்த மாமரம், போன பிறவியில் சிறந்த ஒரு பிராமண வித்வான். மாணவர்கள் பலர் வேண்டிக்கேட்டும் கர்வம்பிடித்த அவர், தான் கற்ற கல்வியை எவருக்கும் சொல்லிக் கொடுக்கவில்லை. அதனால் மரம் ஆனார். அடுத்தது பசு, போன பிறவியில் அது நற்குலத்தில் உதித்த பணக்காரன். யாருக்கும் ஒரு பிடி அன்னம்கூட தானம் செய்யாததால், அவனே பசு மாடாகப் பிறந்துள்ளான். இந்தப் பிறப்பில் புல் இருந்தாலும் மேய முடியாமல் அலைகிறான்.

    அடுத்தது காளை. அது போன பிறவியில் கர்வமுள்ள ஒரு அரசனாக இருந்தது. விளையாத (களர்) பூமியை தானம் செய்த பாவத்தால், அவன் இப்போது காளையாகத் திரிகிறான். அடுத்தது யானை. அந்தணனாக இருந்த ஒருவன், தான் செய்த தர்மத்தை விலை பேசி விற்றுப் பணம் பெற்றதால் இப்படி யானையாகப் பிறந்திருக்கிறான்!” என்று விவரித்த ஸ்வாமி அங்கிருந்து மறைந்தார். மனம் மாறிய கௌண்டின்யர் வீடு திரும்பினார். தன் மனைவி சீலையுடன் சேர்ந்து, அனந்த விரதம் செய்து, இழந்த செல்வங்களைப் பெற்று மங்கல வாழ்வு வாழ்ந்தார்.
    சிவராத்திரி தினத்தன்று மன சுத்தியோட ‘ஓம் நமச் சிவாய‘ என்று உச்சரிச்சுக்கிட்டு இருந்தாலே போதும் எல்லா பலன்களும் கிடைக்கும்.
    எல்லா விரதங்களுக்கும் போலவே சிவராத்திரிக்கும் சில விதிகள் இருக்கு. மற்ற பண்டிகைகளைப் போல கிடையாது சிவராத்திரி. கொஞ்சம் கடுமையாகத்தான் விரதம் இருக்க வேண்டும்.

    மற்ற பண்டிகைகள் எல்லாமே விரதத்துலயும் வழிபாட்டுலயும் ஆரம்பிச்சு விருந்தில் முடியும். ஆனால் சிவராத்திரி அப்படி இல்லை. மனிதர்களுக்கு ரொம்ப முக்கியானது இரண்டு விஷயம். உணவு, நல்ல தூக்கம், இந்த இரண்டையும் விலக்கி, சிவனுக்காக நாம் விரதமிருப்பது தான் இந்த நாளின் நோக்கமாகும்.
    உணவையும் உறக்கத்தையும் விலக்கினால் புலன்கள் தானாகவே அடங்கும்.

    அப்போது இறையுணர்வு பெற முடியும். நினைத்த காரியம் சித்தி ஆகும்.
    ‘சிவராத்திரி விரதம் இருப்பவர்கள் அன்றைய தினம் முழுவதும் உபவாசம் இருப்பது மிகவும் நல்லது. அவ்வாறு இருக்க இயலாதவர்களுக்கு விதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பால், பழங்கள் மட்டுமே சாப்பிட்டு விரதமிருக்கலாம் அல்லது சர்க்கரை வள்ளிக்கிழங்கை உப்பில்லாமல் வேக வைத்து உண்ணலாம் அல்லது சத்துமாவை வெல்லத்துடன் கலந்து ஒரே ஒருவேளை மட்டும் உண்ணலாம்.

    விரதம் இருப்பவர்கள் சிவபுராணம், கோளறு பதிகம், லிங்காஷ்டகம், பஞ்சாட்சர ஸ்தோத்திரம், நடராஜப் பத்து, பரமசிவன் ஸ்தோத்திரங்களைப் படிக்கலாம். தமிழில் திருமறைகளையும் ஓதலாம்.

    சிவராத்திரியன்று பஞ்சாட்ச மந்திரம் உச்சரிப்பதால் மற்ற நாள்களில் நூறு முறை பஞ்சாட்சரம் ஜபித்த பலன் கிட்டும் என்கிறது சாஸ்திரம். அதே போல் தான் லிங்கபுராணம், திருவிளையாடல் புராணம், பெரிய புராணம், திருவாசகம் ஆகியவற்றைப் படித்தாலும் கேட்டாலும் பலன்கள் மற்ற நாள்களை விட அதிகமாகவே கிடைக்கும்.

    சிவராத்திரி விரதத்தின் மகிமையை, சிவன் நந்திக்கு உபதேசித்தார். அதனைக் கேட்ட நந்தி அதை அனைத்துத் தேவர்களுக்கும் கூறினார். அந்தத் தேவர்கள் அனைத்து முனிவர்களுக்கும் ரிஷிகளுக்கும் அதனைக் கூறினார்.

    சிவராத்திரி தினத்தன்று மன சுத்தியோட ‘ஓம் நமச் சிவாய‘ என்று உச்சரிச்சுக்கிட்டு இருந்தாலே போதும் எல்லா பலன்களும் கிடைக்கும்.



    அன்று இரவு பதினான்கு நாழிகையின்போது முறைப்படி விரதமிருந்து சிவனை வழிபட்டால் கோடி பிரம்ம ஹத்திகளும் (பாவங்களும்) விலகும் என்பது உறுதி.
    சிவராத்திரி தினத்தன்று அதிகாலையில் எழுந்து கொள்ள வேண்டும். நீராடிவிட்டு சிவாலயம் ஒன்றிற்குச் சென்று, தான் இன்று சிவராத்திரி விரதம் அனுசரிக்க விருப்பதாகவும் தன்னுடைய விரதம் எவ்விதப் பங்கமும் இல்லாமல் நிறைவேற அருள வேண்டும் என்றும் தன் புலனடக்கத்திற்கு எந்தவிதக் கேடும் வந்து விடக்கூடாது என்றும் எம்பெருமானை வேண்டிக்கொள்ள வேண்டும்.

    பிறகு பூஜைக்குத் தேவையான பொருட்களை எல்லாம் சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும். பொழுது சாயும் வேளையில் குளித்து விட்டு சுத்தமான உடைகளை உடுத்திக் கொள்ள வேண்டும். மூன்று முறை ஆசமனம் செய்து பரமேஸ்வரனைத் துதித்து பூஜையைத் தொடங்க வேண்டும்.

    நான்கு ஜாமங்களிலும் நான்கு சிவலிங்கங்களை மண்ணால் செய்து வழிபட வேண்டும். வேதம் கற்றவர்களைக் கொண்டு மந்திரங்களை உச்சரித்து பூஜையை நிறைவு செய்ய வேண்டும். பால், தயிர், தேன், நெய், சர்க்கரை ஆகியவற்றால் அபிஷேகம் செய்ய வேண்டும்.

    சிவராத்திரியின் முதல் நாள் பிரதோஷ தினம் ஆகையால் மாலையில் நடராஜப் பெருமானையும், சிவ மூலவரையும் வழிபட வேண்டும். சிவராத்திரி இரவில் நான்கு கால வழிபாடு நடைபெறும். முதல் காலத்தில் சோமாஸ்கந்தரையும், இரண்டாம் காலத்தில் தட்சிணாமூர்த்தியையும், மூன்றாம் காலத்தில் லிங்கோத்பவரையும், நான்காம் காலத்தில் ரிஷபாரூடர் என்று அழைக்கப்பெறும் சந்திரசேகரரையும் வழிபட வேண்டும். நான்கு காலங்களிலும் கருவறையிலுள்ள சிவ மூலவரை ஆகம முறைப்படி அபிஷேகங்கள் செய்வித்து வழிபட வேண்டும்.

    மூன்றாம் காலம் லிங்கோத்பவ காலம் ஆகும். அந்நேரத்தில் கருவறைக்குப் பின்னே உள்ள லிங்கோத்பவரை முறைப்படி வழிபட வேண்டும். அந்நேரத்தில் ஸ்ரீருத்ரத்தைப் பாராயணம் செய்தல், ஸ்ரீ சிவ ஸகஸ்ர நாமங்களை உச்சரித்தல், தேவாரத்தில் உள்ள லிங்கபுராண திருக்குறுந்தொகையையும் பாராயணம் செய்தல் வேண்டும்.

    சிவராத்திரி விரதமானது எம பயத்தை நீக்கும். சிவராத்திரியின் நான்காம் காலத்தில் மிருத்யுஞ்சய மந்திரத்தை ஓதுவதால், உடல் பிணிகள் அனைத்தும் விலகும். சிவராத்திரி அன்று தான தருமங்கள் செய்வதால் கோடிப் புண்ணியம் கிடைக்கும். சிவலிங்கம், உருத்திராட்சம், ரத்தினங்கள், நிவேதனப் பொருட்கள், அன்னம் போன்றவைகளைத் தானம் செய்யலாம்.

    நான்கு காலங்களிலும் சிவபெருமானுக்கு பஞ்ச வில்வ தளங்களால் பஞ்சமுக அர்ச்சனை செய்ய வேண்டும். நான்காம் காலத்தில் மட்டும் செய்தால் கூடப் போதுமானது. பஞ்சமுக அர்ச்சனை செய்து, ஐந்து வகை அன்னங்களை சிவபெருமானுக்குப் படைத்தல் வேண்டும்.

    சிவராத்திரி அன்று கண் விழித்திருந்து விரதமிருந்து இறைவனை வணங்கும் போது முழுமையான இறைவன் அருள் கிடைக்கும். நினைத்த காரியம் நடக்கும்.
    சிவராத்திரி அன்று கண் விழித்திருந்து விரதமிருந்து இறைவனை வணங்கும் போது முழுமையான இறைவன் அருள் கிடைக்கும். நினைத்த காரியம் நடக்கும்.

    விரதம் கடைப்பிடிப்போர் முதல் நாள் ஒரு பொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசமாய் காலையில் குளித்து சிவ சிந்தனையுடன் கண் விழித்திருந்து நான்கு ஜாம வழிபாடு செய்ய வேண்டும். அடுத்த நாள் காலையில் தீர்த்தமாடி, சுவாமி தரிசனம் செய்து அடியார்களுடன் உணவருந்தி விரதத்தை நிறைவு செய்தல் வேண்டும். சிவராத்திரிக்கு மறுநாள் சிவபுராணம் படித்தோ அல்லது கேட்டோ, பகல் பொழுதைக் கழிக்க வேண்டும்.

    மனம் போனபடி போகும் புலன்களைக் கட்டுப்படுத்துவதே விரதம் இருப்பதன் அடிப்படை நோக்கமாகும். உணவை தவிர்க்கும் போது உணர்வுகளைக் கட்டுப்படுத்துவது என்பது எளிது என்று கருதப்படுகிறது. தினமும் நாம் அனுபவிக்கும் நித்திரை தாமத குணத்தின் வெளிப்பாடு என்றும், விழித்திருப்பதன் மூலம் அந்தக் குணம் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது என்றும் சொல்லப்படுகிறது. இவ்வாறு உணவையும் உறக்கத்தையும் கட்டுப்படுத்துவதன் மூலம் நாம் சாதாரண விழிப்பு நிலையையும், விழிப்பற்ற உறக்க நிலையையும் கடந்து மிக உயர்ந்த உணர்வு விழிப்பு நிலைக்கு செல்கிறோம்.

    சாதாரண விழிப்பு, உறக்க நிலைகள் இறைவனை உணர்வதற்குத் தடையாக இருப்பனவாகக் கருதப்படுகின்றன. தினமும் விழிப்பு நிலைக்கும் தூக்க நிலைக்கும் போய் வரும் நாம் உயர் விழிப்பு நிலை பற்றி உணர்வதேயில்லை. சிவராத்திரியில் விரதமிருந்து உறக்கத்தைத் தவிர்க்கும் போது புலன்கள் கட்டுப்படுகிறது. அந்த நிலையில் நின்று இறைவனைப் போற்றி வழிபடும் போது உணர்வுகள் வெண்ணை போல உருகி, நாம் உயர்ந்த விழிப்பு நிலைக்குச் செல்ல வழி வகுக்கிறது.
    வாழ்வில் இருளை அகற்றி ஒளியை மேற்கொள்ள சிவராத்திரியில் நாம் விழித்திருந்து, விரதமிருந்து சிவனை வழிபட்டால் அசுவமேத யாகம் செய்த பலன் கிடைக்கும்.
    வருடத்தில் இரண்டு ராத்திரிகள் சிறப்பு வாய்ந்தவையாக சொல்லப்படுகிறது. அவற்றைக் கொண்டாடுவதன் மூலம், நமக்கு நல்ல பலன் கிடைக்கும் என்று முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளனர். அதில் ஒன்று நவராத்திரி. மற்றொன்று சிவராத்திரி.

    பெண்களுக்கு ஒன்பது நாள் ‘நவராத்திரி’. ஆண்களுக்கு ஒருநாள் ‘சிவராத்திரி’ என்று சொல்லி வைத்திருக்கிறார்கள். முன்பெல்லாம் பெண்கள் வீட்டிலேயே அதிகம் இருந்ததால் விரதங்களையும், வழிபாடுகளையும் தொடர்ந்து தினம்தோறும் செய்து வருவார்கள். எனவே நவராத்திரி விழாவை ஒன்பது நாட்களும் பெண்கள் தெய்வ வழிபாடாக வைத்து, முத்தாய்ப்பாக அம்பிகை பேரில் வெற்றி பெற்ற நாளை “விஜயதசமி” என்று கொண்டாடினர்.

    ஆண்கள் பொருள்தேடும் பொருட்டும், தொழில் துறையில் ஈடுபடுவதாலும் தெய்வ வழிபாட்டிற்கென்று சிறிது நேரம்தான் ஒதுக்க இயலும். அதையும் வருடத்தில் ஒருநாள் முழுவதும் ஆறுகால பூஜையிலும் சிவனை நினைத்து வழிபட்டு சிவாலயங்களில் சிவன் சன்னிதியில் அமர்ந்து சிவன் பெயரை உச்சரித்தால் ஒரே நாளில் ஓர் ஆண்டிற்கான முழுப்பலனும் நமக்குக் கிடைக்கும். அதனால் தான் ஆண்களுக்கு “சிவராத்திரி” விரதம் சிறப்பான பலனைக் கொடுக்கின்றது.

    மாலை 6 மணி முதல் அதிகாலை 6 மணி வரை ஒவ்வொரு காலங்களிலும், சகல சிவாலயங்களிலும் பூஜைகள் நடைபெறும். அதில் பன்னிரெண்டு மணிக்காலம் எனப்படும் நேரத்தில் காவல் தெய்வமாக விளங்கும் பைரவருக்குரிய ஆலயத்தில் இருந்து அருள்வழங்கும் சிவபெருமானையும், உமையவளையும் வழிபட்டால் சீரும், சிறப்பும், செல்வாக்கும் நமக்கு வந்து வரும். இதுபோன்ற ஆலயத்தை வழிபடுவதற்கு முன்னால், விநாயகப் பெருமான் இருக்கும் ஆலயத்தில் விநாயகர், சிவன், உமையவளை வழிபட்டு வருவது நல்லது. இதுபோன்ற அமைப்புள்ள இரண்டு ஆலயங்களும் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகில் உள்ள பிள்ளையார்பட்டி, வைரவன்பட்டி ஆகிய ஊர்களில் இருக்கின்றன.

    சிவராத்திரி முழுவதும் தூங்காமல் விழித்திருந்து சிவனின் நான்கு கால பூஜைகளிலும் சிறப்பாக வழிபட்டால் எதிர்ப்புகள் அகலும். இன்னல்கள் தீரும். மதிப்பும், மரியாதையும் உயரும். மகத்தான வாழ்வும் அமையும்.

    ‘சிவாய நம என்று சிந்தித்து இருப்பவர்களுக்கு அபாயம் ஒருநாளும் இல்லை’ என்று முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட சிவனை, சிந்தையில் நிறுத்திக் கொண்டாட வேண்டிய நாளான ‘மகாசிவராத்திரி’ மாசி மாத தொடக்கமான முதல் தேதியில் (செவ்வாய்க்கிழமை) வருகிறது. கிருஷ்ணபட்சம் சதுர்த்தி திதியன்று, அமாவாசைக்கு முதல்நாள் இந்த விழா கொண்டாடப்படுகிறது.

    உமாதேவி விளையாட்டாக சிவபெருமான் கண்களைத் தன்னுடைய திருக்கரங்களால் மூடியதால், உலகமே இருளால் சூழப்பட்டது. அந்த நாள்தான் சிவராத்திரி என்று புராணங்கள் சொல்கின்றன. அந்த இரவில் ஒளி வேண்டித் தவித்த தேவர்களுக்கு எல்லாம் ஒளிகொடுக்க, சிவன் தனது நெற்றிக் கண்ணைத் திறந்ததாகவும் கருதப்படுகின்றது. எனவே இருள்மயமான வாழ்க்கை ஒளிமயமாக மாற எல்லோருமே இந்த விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.

    சிவராத்திரி அன்று நள்ளிரவு 11.30 மணி முதல் ஒரு மணி வரை லிங்கோத்பவர் காலமாகும். அந்த நேரத்தில் வழிபாடு செய்தால் நற்பலன்கள் நமக்குக் கிடைக்கும். வலம்புரிச் சங்கால் அபிஷேகம் செய்து வில்வ இலையால் அர்ச்சனை செய்து, சுத்த அன்னத்தை ஈசனுக்கு நைவேத்தியமாக படைத்து, சிவனுக்குரிய பாடல்களைப் பாடி பஞ்சாட்சரத்தை பலமுறை சொன்னால் பாவங்கள் விலகும். யோகங்கள் சேரும்.

    ‘நமசிவாய நமசிவாய நல்லமந்திரம்

    நாளும் சொன்னால் நல்ல நேரம் நமக்கு வந்திடும்!

    பொற்கிழியைத் தருமி வாங்க உதவி செய்தவன்!

    புகழ்கொடியை நாட்டிவைக்க அருள்கொடுப்பவன்!

    நற்பதவி நமக்கு வர சிவனை வணங்குவோம்!

    நமசிவாய மந்திரத்தை நாளும் சொல்லுவோம்’

    என்று சிவன் பதிகம் எடுத்துரைக்கின்றது. எனவே சிவராத்திரியன்று சிவனை வணங்குவோம். செல்வ வளம் நாம்பெறுவோம்.

    சிவராத்திரி விரத பலன்

    ‘கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்று அவ்வையார் பாடி வைத்தார். ஆலயம் இல்லாத ஊரில் அடியெடுத்து வைக்கக் கூட ஆன்றோர்கள் யோசித்திருக்கிறார்கள். அந்த ஆலயம் இரவு முழுவதும் திறந்திருக்கின்ற திருநாள்தான் சிவராத்திரி.

    வருடம் 365 நாட்களிலும் முறையாகச் சிவபெருமானை வழிபட முடியாதவர்கள் கூட, ஒரு நாளாகவும், திருநாளாகவும் கொண்டாப்படும் சிவராத்திரி இரவில் விடிய விடிய விழித்திருந்து சிவனை வழிபட்டால் நல்ல பலன் யாவும் வீடு வந்து சேரும்.

    இந்த விழிப்பு விரதமானது ‘மங்கலம் தரும் மகா சிவராத்திரி’ என்றும், ‘செல்வ வளம் தரும் சிவராத்திரி’ என்றும், ‘சொர்க்கத்தை வழங்கும் தூய சிவராத்திரி’ என்றும், ‘எதிர்ப்புகளை அகற்றும் இனிய சிவராத்திரி’ என்றும், ‘காரிய வெற்றி வழங்கும் கனிவான சிவராத்திரி’ என்றும் மக்களால் வர்ணிக்கப்படுகின்றது.

    சிவன் பெயரை உச்சரித்து உச்சரித்து சிறப்புகளை பெற்ற அறுபத்து மூவரைப் போல நீங்களும் மாற வேண்டுமானால் தேர்ந்தெடுக்கவேண்டிய நாள் சிவராத்திரி. வாழ்வில் இருளை அகற்றி ஒளியை மேற்கொள்ள நாம் விழித்திருந்து, விரதமிருந்து சிவனை வழிபட்டால் அசுவமேத யாகம் செய்த பலன் கிடைக்கும்.

    -“ஜோதிடக்கலைமணி” சிவல்புரிசிங்காரம்.
    புரட்டாசி மாதத்தில் வரும் வளர்பிறை சதுர்த்தசியன்று அனந்த பத்மநாதனைத் தியானித்துக் கடைப்பிடிக்கவேண்டிய விரதம், அனந்த சதுர்த்தி விரதம்.
    விரத நாளன்று காலையில் நீராடி, தூய்மையான ஆடை அணிந்து, பூஜைக்குரிய இடத்தைப் பசுஞ்சாணத்தால் மெழுகி, ஐந்து விதமான வண்ணங்களில் கோலம் போட்டு, தீர்த்தக் கலசம் வைத்து அனந்த பத்மநாபனைத் தியானித்து பூஜை செய்ய வேண்டும்.

    பூஜையின்போது, ஐந்து படி கோதுமை மாவில் வெல்லம் சேர்த்து, 28 அதிரசங்கள் செய்ய வேண்டும். இவற்றில் 14 அதிரசங்களை வேதியர்களுக்குத் தந்து, தாம்பூலம் மற்றும் தட்சிணையும் வழங்க வேண்டும். மீதியை நாம் உண்ண வேண்டும்.

    அதேபோன்று, பூஜைக்குரிய பொருள்கள் அனைத்தும் 14 என்ற எண்ணிக்கையில் இருக்க வேண்டும். பக்தியுடன் இந்த விரதத்தைச் செய்தால் தீராத வினைகளெல்லாம் தீரும். அளவிட முடியாத ஐஸ்வர்யங்கள் வந்து சேரும். 14 வருடங்கள் இந்த விரதத்தை முறைப்படி கடைப்பிடித்து வழிபடும் அன்பர்களுக்கு நல்லன யாவும் வசமாகும். அவருக்குத் தோல்வி என்பதே இல்லை என்கின்றன ஞான நூல்கள்.

    மிக அற்புதமான இந்த விரதத்தைக் கண்ண பரமாத்மா, பாண்டவர்களுக்கு உபதேசித்தார்.

    பாண்டவர்கள் வனவாசம் இருந்த காலத்தில் அடுக்கடுக்காகத் துயரங்கள் வந்துகொண்டிருந்தன. எதற்கும் சலிக்காத தர்மபுத்திரரின் மனதிலும் சஞ்சலம் தலை நீட்டியது. ‘தெய்வமே! ஏன் இப்படி?’ என்று அவர் மிகவும் கவலையில் ஆழ்ந்திருந்தபோது, கிருஷ்ண பகவான் அவர்களைச் சந்திக்க வந்தார்.

    அவரை வணங்கி வரவேற்ற தர்மபுத்திரர், தங்களுக்கு தொடர்ந்து ஏற்படும் இன்னல்களை அவரிடம் விளக்கி, அவற்றிலிருந்து மீண்டு வர வழிகாட்டுமாறு பிரார்த்தித்தார். கிருஷ்ணரும் அவர்களுக்கு மிக அற்புதமான ஒரு வழியைச் சொன்னார்.

    “தர்மா! அனைவரது பாவங்களையும் நீக்கி, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிவைக்கும் ‘அனந்த விரத’த்தைப் புரட்டாசி மாத வளர்பிறைச் சதுர்த்தசியன்று செய்ய வேண்டும். இது புகழ், நலன்கள், நற்குழந்தைகள் ஆகியவற்றை அளிக்கும். பாவங்கள் அனைத்தையும் போக்கும்!” என்றார் கண்ணன்.

    தர்மரின் மனதில் மகிழ்ச்சி துளிர்விட்டது. அத்துடன் சேர்ந்து ஓர் ஐயமும் எழுந்தது. `அனந்தர் என்ற தெய்வம் யார்?’ என்பதுதான் அது. தனது சந்தேகத்தை கண்ணனிடமே கேட்டார். ‘‘யது குலோத்தமா! அந்த அனந்தன் என்பவர் யார்? ஆதிசேஷனா, தட்சகனா, பிரம்ம தேவனா அல்லது பரப்பிரம்ம வடிவமா?”

    கண்ணன் புன்னகையோடு பதில் சொன்னார்: ‘‘குந்தி அமைந்தா! அனந்தன் என்பவன் நானே; வேறு எவருமில்லை! பகல், இரவு, மாதம், வருஷம், யுகம் என்னும் காலங்கள் எல்லாம் என் வடிவமே. அனந்தன் என்னும் பெயரால் பூமியின் பாரத்தைக் குறைக்கவும் தீயவர்களை அழிக்கவும் வசுதேவருடைய வீட்டில் பிறந்தேன். அனைத்தும் என் வடிவமே என்பதை அறிந்து கொள். இந்திரன், அஷ்ட வசுக்கள், ஏகாதச ருத்திரர்கள், துவாதச ஆதித்தியர்கள், சப்தரிஷிகள், மலைகள், நதிகள், மரங்கள் முதலியன என வடிவங்களே!” என்றவர், அந்த விரதத்தின் மகிமை குறித்தும் பகிர்ந்துகொண்டார்.

    கண்ணன் சொன்ன விரதம் இது. இதன்படி விரதம் இருந்து, சகல பாக்கியங்களையும் பாண்டவர்கள் பெற்றார்கள். இதை அனந்த சதுர்த்தசி விரதம் என்றும் சொல்வார்கள்.
    விரதம் என்பதற்கு ஒன்றையே எண்ணி அதில் மனம் லயித்திருத்தல் என்பது பொருள். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    விரதம் என்பதற்கு ஒன்றையே எண்ணி அதில் மனம் லயித்திருத்தல் என்பது பொருள். வரித்தல் என்பதிலிருந்தே விரதம் என்ற சொல் பிறந்தது என்று கூறலாம்.

    வரித்தல் என்பதற்கு கை கொள்ளுதல் அல்லது ஏற்றுக் கொள்ளுதல் என்பது பொருள். உணவு உண்ணாமலிருத்தலும் மிதமாக உணவை உண்பதும் தீயவற்றை நீக்கி நல்லவற்றை உண்பதுமாகிய உணவு நியமமே “விரதம்” என அழைக்கப்படுகிறது.

    ஆனால் இது விரதத்தின் முதற்நிலை என்றுதான் சொல்ல வேண்டும். இவ்வாறு இருத்தலே முழுமையான விரதம் என்று கூற முடியாது. மனம் அடங்கக் கற்பதே விரதத்தின் முதற்படியாகும்.

    உணவை ஒழித்து இருப்பது விரதம் அல்ல. எண்ணங்களை ஒடுக்கி, சிந்தைகள் ஏதும் இல்லாமல் இருப்பதே ‘விரதம்’ என்கிறார் ரமணர். குரங்கு போல் அலைந்து திரியும் மனத்தை அடக்கி நிறுத்தி இறைவன் திருவடியில் நிலைத்திருத்தலே சிறப்பான விரதத்தின் முதற்படி என்று கூறலாம்.
    மகாசிவராத்திரி அன்று அதிகாலையில் நீராடி, தூய ஆடைகளை அணிந்து விரதத்தை ஆரம்பித்து பகல் முழுவதும் ஜெபம், பாராயணத்தில் ஈடுபட வேண்டும்.
    மகாசிவராத்திரி பூஜையை வீட்டில் செய்ய விரும்புபவர்கள் அதிகாலையில் நீராடி, தூய ஆடைகளை அணிந்து பகல் முழுவதும் ஜெபம், தியானம், பாராயணம் போன்றவைகளில் ஈடுபட வேண்டும். மாலையில் வீட்டில் ஒரு தூய்மையான இடத்தில் அல்லது பூஜை அறையில் சிவன் படத்தையோ அல்லது சிவலிங்கத்தையோ அலங்காரம் செய்து பிரதிஷ்டை செய்ய வேண்டும். இரவு 4 காலமும் பூஜை செய்ய வேண்டும்.

    இரவு முழுவதும் கண் விழிக்க முடியாதவர்கள் குறைந்த பட்சம் லிங்கோற்பவ காலத்திலாவது கண்டிப்பாக கண்விழித்து பூஜை செய்ய வேண்டும்.

    அதிகாலை 3 மணிக்கு வில்வ இலை மற்றும் மலர்களால் தீபாராதனை காண்பிக்க வேண்டும். இடைப்பட்ட நேரத்தில் குடும்பத்துடன் அமர்ந்து `சிவாய நம நமச்சிவாய' என மந்திரம் சொல்லலாம். சிவன் தொடர்பான பாடல்கள், கதைகளை கேட்கலாம். சினிமா, டி.வி. பார்க்கக் கூடாது.

    முதல் ஜாமத்தில் சுத்த அன்னம், காய்கறி ஆகியவற்றையும், வில்வ பழத்தையும், நிவேதனம் செய்ய வேண்டும். இரண்டாம் ஜாமத்தில் லட்டு, பலாப்பழத்தையும், மூன்றாம் ஜாமத்தில் நெய் கலந்த பலகாரங்கள், பாயசம், மாதுளம் பழங்களையும் நிவேதனம் செய்து வணங்கி வழிபட வேண்டும். நான்காம் ஜாமத்தில் கோதுமையால் செய்யப்பட்ட பலகாரம் மற்றும் கிடைக்கும் பழங்களை நிவேதனம் செய்ய வேண்டும்.

    ஒவ்வொரு ஜாமத்தில் பூஜை முடிந்ததும் தங்களால் முடிந்த அளவு தானங்கள் செய்ய வேண்டும். விடிந்ததும் நீராடி, நித்ய கடன்களை முடித்து விட்டு சிவன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து பிரார்த்தனை செய்து உணவு உண்ண வேண்டும்.
    மகாசிவராத்திரியன்று இரவில் முறைப்படி விரதம் இருந்து சிவனை வழிபட்டால் கோடி பிரம்மஹத்தி தோஷம் விலகும். சிவலோக பதவி கிட்டும்.
    13-2-2018 மகாசிவராத்திரி

    சிவபெருமானை வழிபடுவதில் முக்கியமான, முக்தியைத் தரும் விரதம் மகாசிவராத்திரி விரதம். இந்த விரதம் மாசிமாதம் தேய்பிறை சதுர்த்தியன்று கடைப்பிடிக்கப் படுகிறது. அன்று இரவு முழுவதும் சிவாலயங்களில் பூஜைகளும், அபிஷேகங்களும் நடைபெறும். பஞ்சாட்சர மந்திரம் ஒலிக்கும். சிவராத்திரி விரதம் இருப்போருக்கு சிவனின் இடப்பாகத்தில் வீற்றிருக்கும் அம்பிகையும் அருள்புரிகிறாள்.

    சிவபெருமான், லிங்கத்தில் எழுந்தருளி அருள்புரிகின்ற நாளே சிவராத்திரி. பிரம்மதேவனும், திருமாலும் தங்களில் யார் பெரியவர் என்று தெரிந்து கொள்வதற்காக, ஈசனின் அடி, முடிகளை தேடினர். அவர்கள் இருவருக்கும் எட்டாமல் அண்ணாமலையார் அருள் ஜோதியாக ஒளி வீசிய நாளே சிவராத்திரி என்றும் சொல்லப்படுகிறது.

    தேவர்களும், அசுரர்களும் அமுதம் வேண்டி திருப்பாற்கடலை கடைந்தபோது அதில் இருந்து ஆலகால விஷம் தோன்றியது. அந்த நஞ்சினை பெருமான் உண்டு உலகை காத்து அருளினார். சதுர்த்தசியன்று தேவர்கள் பூஜை செய்து அர்ச்சித்து வழிபட்டனர். அந்த நாளே சிவராத்திரி என்று சொல்பவர்களும் உண்டு.

    ஒரு காலத்தில் உலகம் அழிந்து யாவும் சிவபெருமானிடம் ஒடுங்கியது. அந்தகாரம் சூழ்ந்த அந்த இருளில் பார்வதி சிவபெருமானை ஆகமங்களில் கூறியுள்ள படி நான்கு காலம் வழிபட்டாள். அவ்வாறு அவளால் வழிபட்டதன் நினைவாக தொடர்ந்து சிவராத்திரி கொண்டாடப்பட்டு வருகிறது.

    அந்த இருளில் பார்வதி தேவி பரமனை நோக்கி இந்நாளில் நான் எவ்வாறு வழிபட்டேனோ அப்படியே வழிபடுவோருக்கு இப்பிறவியில் செல்வமும், மறுபிறவியில் சொர்க்கமும் இறுதியில் மோட்சமும் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டாள். பரமசிவனும் அப்படியே ஆகட்டும் என்று அருள்பாலித்தார். அதன்படியே அன்று முதல் சிவராத்திரி சிறப்புடன் கொண்டாடப்பட்டு வருகிறது.



    மகாசிவராத்திரியன்று இரவில் முறைப்படி விரதம் இருந்து சிவனை வழிபட்டால் கோடி பிரம்மஹத்தி தோஷம் விலகும். சிவலோக பதவி கிட்டும். காசியில் முக்தி அடைந்த பலன் கிடைக்கும். சகல செல்வங்களும், நிறைந்த மங்கல வாழ்வு உண்டாகும் என சிவபுராணத்தில் கூறப்பட்டுள்ளது. மகாசிவராத்திரி விரதம் இருப்பவர்கள் சிவராத்திரி அன்று அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு வீட்டில் உள்ள சிவன் படத்திற்கு பூஜை செய்து அருகில் உள்ள சிவன்கோவில்களுக்கு சென்று சிவனை தரிசனம் செய்ய வேண்டும்.

    முடியாதவர்கள் சிவாலயங்களுக்கு சென்று நான்கு காலங்களிலும் நடைபெறும் விசேஷ பூஜை அபிஷேகங்களை கண்டு களிக்கலாம். பால், தயிர், நெய், தேன், பூஜை பொருட்களை கொடுக்கலாம். அன்று முழுவதும் உபவாசம் இருக்க வேண்டும். நான்கு சாமப்பூஜைகளில் இரவு 11.30 மணிக்கு மேல் 1 மணிக்குள் நடைபெறும் சிவபூஜையே தலை சிறந்தது.

    இது லிங்கோற்பவ காலம். விசுவ ரூபதரிசன நேரம். உருவமற்ற சிவன் உருவம் பெற்று லிங்கோற்பவ மூர்த்தியாக லிங்கத்திலே திருக்காட்சி தரும் புனிதமான நேரம் இதுவே. பிரம்மாவும், விஷ்ணுவும் சிவனின் முடி, அடிகளை காண முயலும் தோற்றம் அப்போது புலனாகிறது. சிவ தரிசனம் கிடைக்கிறது. மும்மூர்த்திகளும் அங்கே தரிசனம் தருவதால் அவர்களின் பேரருளும் பக்தர்களுக்கு கிடைக்கும். சிவராத்திரி தினத்தன்று முழு உபவாசத்தை கடைப்பிடிப்பதால் எம்பெருமான் வாழ்நாள் முழுவதும் காப்பாற்றுவதுடன் மகிழ்ச்சியையும், வாழ்வில் முன்னேற்றத்தையும் அளிப்பார் என புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

    சிவராத்திரி நாள் முழுவதும் உபவாசம் இருக்க முடியாதவர்கள் தண்ணீர், பால், பழங்களை உண்ணலாம். மகாசிவராத்திரி விரதத்தை முறைப்படி செய்பவர்கள் முக்தியை எய்துவர். இந்த விரதத்தை 24 ஆண்டுகள் செய்து வர வேண்டும். அவ்வாறு முடியாதவர்கள் 12 ஆண்டுகளாவது தொடர்ந்து அனுஷ்டிக்க வேண்டும். இதனால் விரதம் இருப்பவர்கள் முக்தியை அடைவதுடன், அவர்களின் சந்ததியில், 21 தலைமுறையினருக்கு கூட பலன் கிட்டும்.
    ×