search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுச்சேரி பா.ஜ,க எம்.எல்.ஏ.க்களுக்கு போனில் கொலை மிரட்டல்- நாகை வாலிபர் சிக்கினார்
    X

    நரேந்திரன்.

    புதுச்சேரி பா.ஜ,க எம்.எல்.ஏ.க்களுக்கு போனில் கொலை மிரட்டல்- நாகை வாலிபர் சிக்கினார்

    • ஏதோ குடிகாரன் பேசுவதாக நினைத்துக்கொண்ட கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ, இதனை பெரிதுபடுத்தவில்லை.
    • பின்னணியில் யார் உள்ளார்கள் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி காலாப்பட்டு தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏவாக இருப்பவர் கல்யாணசுந்தரம். நேற்று காலை இவர் வழக்கம்போல் நடைபயிற்சி சென்று கொண்டிருந்தார். அப்போது எம்.எல்.ஏவுக்கு போன் செய்த மர்மநபர், முன்னாள் அமைச்சர், எம்.எல்.ஏ கல்யாணசுந்தரம் தானே, எனக்கேட்டு தகாத வார்த்தைகளால் திட்டினார்.

    அதற்கு கல்யாண சுந்தரம் எம்.எல்.ஏ. அந்த நபரிடம் யார் வேண்டும் எனக் கேட்ட போது, உங்களுக்கு பதில் சொல்ல முடியாது. என்னை ஏதும் உங்களால் செய்ய முடியாது, பாக்குறீங்களா? எனக்கூறி மிரட்டல் விடுத்தார்.

    இதையடுத்து கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ. என்னுடைய தொலைபேசி எண் உங்களுக்கு எப்படி கிடைத்தது எனக்கேட்ட போது, காரைக்காலில் ஒருவரிடமிருந்து வாங்கினேன் என்றார்.

    இதையடுத்து கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ. இப்போது உனக்கு என்ன வேண்டும் எனக் கேட்டபோது, என்னிடம் வைத்துக்கொள்ளாதீர்கள் எனக்கூறி போனை துண்டித்துவிட்டார்.

    ஏதோ குடிகாரன் பேசுவதாக நினைத்துக்கொண்ட கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ, இதனை பெரிதுபடுத்தவில்லை.

    இதற்கிடையே திருபுவனை தொகுதி பா.ஜனதா ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ அங்காளனுக்கு நேற்று மாலை சொல்போனில் பேசிய மர்ம நபர், என்னிடம் மோத வேண்டாம், நீங்கள் முன்னாள் அமைச்சரா இருந்தா என்ன? என்கிட்ட வச்சுக்காதீங்க எனக்கூறி அங்காளன் எம்.எல்.ஏ.வை திட்டினார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த அங்காளன் எம்.எல்.ஏ. திருக்கனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் மிரட்டல் விடுத்த நபரின் செல்போன் எண்ணை ஆய்வு செய்தனர்.

    விசாரணையில் கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ மற்றும் அங்காளன் எம்.எல்.ஏ. ஆகிய இருவரையும் தொலைபேசியில் மிரட்டியது ஒரே நபர் என்றும், ஒரே எண்ணை பயன்படுத்தியதும் தெரியவந்தது.

    மேலும் அந்த செல்போன் நாகை மாவட்டத்தில் இருந்து பேசியது பதிவாகி இருந்தது.

    இதனால் உஷாரான போலீசார், காரைக்கால் மாவட்ட போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அந்த எண்னை வைத்து விசாரணை நடத்தியதில் எம்.எல்.ஏ.க்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த வர் நாகப்பட்டினத்தை அடுத்த செம்பியன்மகாதேவி கிராமத்தை சேர்ந்த நரேந்திரன் (வயது40) என்பது தெரியவந்தது.

    அவரை கைது செய்ய காரைக்கால் போலீசார் நாகப்பட்டினம் விரைந்தனர். அங்கு பதுங்கியிருந்து நரேந்திரனை பிடித்து காரைக்கால் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நரேந்திரன் எதற்காக எம்.எல்.ஏ.க்களுக்கு மிரட்டல் விடுத்தார்? இதன் பின்னணியில் யார் உள்ளார்கள் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×