search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    அமலாக்கத்துறை சோதனை தவறான முன்னுதாரணத்தை தமிழக அரசு எடுத்து செல்கிறது- கவர்னர் தமிழிசை ஆவேசம்
    X

    அமலாக்கத்துறை சோதனை தவறான முன்னுதாரணத்தை தமிழக அரசு எடுத்து செல்கிறது- கவர்னர் தமிழிசை ஆவேசம்

    • தவறு நடந்தால் அதை விசாரிக்க வேண்டும்.
    • விசாரணை நடத்த பல வழி முறைகள் உள்ளன.

    புதுச்சேரி:

    புதுவை கவர்னர் மாளிகையில் அசாம் மாநில உதய தினம் இன்று காலை கொண்டாப்பட்டது. விழாவில் கவர்னர் தமிழிசை பங்கேற்றார். பின்னர் கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-

    கவர்னர், அமலாக்கத்துறை, வருமானவரித்துறை என அனைத்தும் பா.ஜ.க.வில் சேர்த்து விடுகின்றனர். வேறு எல்லாவற்றையும் பாஜகவில் சேர்த்து விடுங்கள்.

    தமிழக போலீசை தி.மு.க. போலீஸ் என அழைக்கலாமா? அமலாக்கத்துறையில் ஒரு பிரச்சினை நடந்துள்ளது.

    ஒரு அமைச்சர் வீட்டுக்கு சென்றார்கள். அமைச்சர் வீட்டிலிருந்து கட்டி, கட்டியாக, பெட்டி, பெட்டியாக எடுத்தார்கள். அதேபோல அனைத்து தமிழக அமைச்சர்கள், முதலமைச்சர் வீடுகளுக்கும் சோதனைக்கு செல்வோம் என்று கூறினார்களா? இலாகா இல்லாமல் ஒரு அமைச்சர் உள்ளார். அவர் மீது குற்றச்சாட்டு உள்ளது.


    அதற்காக அனைத்து அமைச்சர்கள் மீதும் குற்றம் சொல்ல முடியுமா? எல்லா துறையிலும் பிரச்சினை இருக்கலாம், பிரச்சினைக்குரிய அதிகாரிகள் இருக்கலாம். ஒரு நபருக்காக துறையே மோசமானது, எல்லோரும் லஞ்சம் வாங்குவார்கள், அது மத்திய அரசு அமைப்பு, நாங்கள் மாநில அரசு அமைப்பு எனவே, மத்திய அரசு நிறுவனத்தில் புகுந்து சோதனை நடத்துவோம் என கூறலாமா?

    இந்த பிரச்சினையில் தமிழக அரசு தவறான முன்னுதாரணத்தை எடுத்து செல்கிறது. தவறு நடந்தால் அதை விசாரிக்க வேண்டும். விசாரணை நடத்த பல வழி முறைகள் உள்ளன. அதற்கென தனியாக அதிகாரிகள் உள்ளனர்.

    மத்திய, மாநில அரசு நிறுவனங்கள் இணக்கமாக செயல்பட வேண்டும். ஒருவர் தவறு செய்தால் அவர் எந்த துறையாக இருந்தாலும் தவறுதான்.

    கடந்த கால மத்திய காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி ஆட்சியில் அமைச்சர்கள் மீது எவ்வளவோ ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தது. ஆனால் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசில் ஒரு ஊழல் குற்றச்சாட்டும் ஒருவர் மீதும் கூற முடியாத அளவுக்கு இத்தனை ஆண்டுகளாக செயல்பட்டு கொண்டிருக்கிறது.

    அங்கே சில அதிகாரிகள் செய்யும் தவறுக்கு அரசு மீது குறைகூறுவதா? தமிழகத்தில் வேங்கைவயலில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. நாங்குநேரியில் ஒரு பிரச்சினை நடந்தது. இதனால் தமிழகம் முழுவதும் பட்டியலின மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என முத்திரை குத்த முடியாது. சுப்ரீம்கோர்ட்டு கவர்னரும், முதலமைச்சரும் அமர்ந்து பேச வேண்டும் என தெரிவித்துள்ளது.

    புதுவையில் முதலமைச்சருடன் இணைந்து செயல்படுகிறேன். எனக்கு புறக்கணிக்கும் பழக்கம் இல்லை, அரவணைக்கும் பழக்கம்தான் உள்ளது. மருத்துவக்கல்வி விவகாரத்தில் கவர்னர் கட்டப்பஞ்சாயத்து செய்கிறார் என எதிர்கட்சித்தலைவர் சிவா கூறுகிறார்.

    நான் என்ன கட்டப்பஞ்சாயத்து செய்கிறேன்? எந்த விவகாரத்துக்கும் கவர்னர்தான் காரணமா?

    வெறும் வாய்க்கு கவர்னர்தான் அவலா? எதிர்கட்சித்தலைவர் சிவா கவர்னரையே எதற்கெடுத்தாலும் மென்று வருகிறார். அவருக்கு கொஞ்சம் அவல் வாங்கி கொடுங்கள். அதை மெல்லட்டும்.

    இவ்வாறு கவர்னர் தமிழிசை கூறினார்.

    Next Story
    ×