search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுவையில் கூட்டணிக்கு காங்கிரஸ்தான் தலைமை- நாராயணசாமி திட்டவட்ட அறிவிப்பு
    X

    புதுவையில் கூட்டணிக்கு காங்கிரஸ்தான் தலைமை- நாராயணசாமி திட்டவட்ட அறிவிப்பு

    • கடந்த கால ஆட்சியில் புதுவையை சேர்ந்த 95 சதவீதம் பேர் அரசு வக்கீல்களாக சென்னை மற்றும் புதுவை கோர்ட்டுகளில் நிரப்பப்பட்டுள்ளது.
    • கோவில், குடியிருப்பு, பள்ளி அருகில் விதிகளை மீறி 100-க்கும் மேற்பட்ட மதுபான கடைகளில் அமைக்க முதலமைச்சர் ரங்கசாமி அனுமதி அளித்துள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை பிரதேச காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் காங்கிரஸ்தான் தான் புதுவையில் முதன்மையான கட்சி என்றும் மதசார்பற்ற கூட்டணி நடத்தும் போராட்டங்களுக்கு காங்கிரஸ் தான் தலைமை தாங்கும் என்று முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கூறினார்.

    இதற்கு புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளரும், எதிர்கட்சி தலைவருமான சிவா எம்.எல்.ஏ. கூறும்போது, நாங்கள் கொள்கையை கூறியே கட்சியை வளர்க்கிறோம். தி.மு.க.வுக்கு காங்கிரஸ் தலைமை தாங்க முடியாது என்றார். இது கூட்டணி கட்சிகளுக்கிடையே சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    குப்பை டெண்டரில் இமாலய ஊழல் நடந்துள்ளது என குற்றச்சாட்டு வைத்தேன். பெங்களூரு ஒப்பந்ததாரருக்கு 2 ஆண்டு காலம் உள்ள நிலையில் அவசர அவசரமாக டெண்டர் வைக்க காரணம் என்ன? குப்பை அள்ளும் டெண்டர் விவகாரத்தில் முதலமைச்சர் அலுவலகம் தலையிடவில்லை என்றால் நீதி விசாரணைக்கு முதலமைச்சர் உத்தரவிட வேண்டும்.

    நிறுத்தப்பட்ட டெண்டருக்கு மேல் நடவடிக்கை எடுத்தால் நீதிமன்றத்துக்கு அரசு பதில் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்.

    கடந்த கால ஆட்சியில் புதுவையை சேர்ந்த 95 சதவீதம் பேர் அரசு வக்கீல்களாக சென்னை மற்றும் புதுவை கோர்ட்டுகளில் நிரப்பப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 35 பேரில் 15 பேர் தவிர்த்து மீதமுள்ளவர்கள் வெளிமாநிலத்தை சார்ந்தவர்கள். கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார்.

    முதலமைச்சரின் பரிந்துரை காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. இந்த நியமனத்தில் கவர்னர் தனக்கு பங்கு இல்லை என கூறுவது உண்மைக்கு புறம்பானது. இதற்கு கவர்னர் பதில் சொல்ல வேண்டும்.

    கோவில், குடியிருப்பு, பள்ளி அருகில் விதிகளை மீறி 100-க்கும் மேற்பட்ட மதுபான கடைகளை அமைக்க முதலமைச்சர் ரங்கசாமி அனுமதி அளித்துள்ளார். மனு கொடுக்க வந்த மக்களிடம் கூடுதலாக 100 மதுபான கடைகள் வைக்கப்போகிறது என பேசியிருக்கிறார்.

    பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் தெரிவித்து வரும் நிலையில் முதலமைச்சர் எதற்கும் வாய் திறப்பதில்லை. மணக்குள விநாயகர் கோவில் யானைக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினோம். யானை உயிரிருந்த விவகாரம் தொடர்பாக விசாரணை வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம்.

    பீட்டா அமைப்பு வழக்கு தொடர்ந்தபோது கடந்த கால ஆட்சியில் தகுந்த பாதுகாப்பு கொடுத்தோம். மக்கள் அனைவரின் எண்ணம் கோவிலுக்கு புதிய யானை வாங்க வேண்டும் என்பதுதான்.

    தமிழகத்தில் மதசார்பற்ற கூட்டணிக்கு தி.மு.க. தான் தலைமை. ஆனால் புதுவையில் இந்த கூட்டணிக்கு காங்கிரஸ்தான் தலைமை. 10 சதவீத இடஒதுக்கீடுக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் காங்கிரஸ் தலைமையில்தான் நடைபெற்றது. எந்த கட்சியும் பெரியது, சிறியது இல்லை. எல்லா கட்சிகளுக்கும் பலம் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×