என் மலர்
மற்றவை
- ஜெய்ப்பூரின் மிகவும் பிரபலமான அடையாளங்களில் ஒன்றாகும்.
- பார்வையாளர்களுக்கு கலாச்சாரம் மற்றும் கலை பற்றிய நுண்ணறிவுகளை வழங்குகிறது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் அமைந்துள்ளது ஹவா மஹால். இது ஆயிரம் ஜன்னல் மாளிகை என்றும் "காற்றின் அரண்மனை" என்றும் அழைக்கப்படுகிறது. இது ஜெய்ப்பூரின் மிகவும் பிரபலமான அடையாளங்களில் ஒன்றாகும்.
1799 ஆம் ஆண்டு மகாராஜா சவாய் பிரதாப் சிங் என்பவரால் கட்டப்பட்ட ஹவா மஹால் ராஜபுத்திர கட்டிடக்கலைக்கு ஒரு மிகச்சிறந்த உதாரணம். லால் சந்த் உஸ்தாத் வடிவமைத்த, இது தேன்கூடு போன்ற ஐந்து அடுக்கு முகப்பில் 953 சிறிய ஜன்னல்கள் உள்ளன. சிக்கலான லேட்டீஸ் வேலைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த வடிவமைப்பு அரச குடும்பப் பெண்கள் தெரு விழாக்களைக் காண பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டது.
ஹவா மஹாலின் தனித்துவமான வடிவமைப்பு அதன் ஏராளமான ஜன்னல்கள் மற்றும் பால்கனிகள் சிறந்த காற்றோட்டத்தை அனுமதிக்கிறது. இந்த கட்டிடக்கலை அம்சம் பாரம்பரிய ராஜஸ்தானி கட்டிடக்கலையின் புத்தி கூர்மைக்கு சான்றாகும்.
ஜந்தர் மந்தர், சிட்டி பேலஸ் மற்றும் பரபரப்பான ஜொஹாரி பஜார் போன்றவற்றின் அற்புதமான காட்சிகளை ஹவா மஹாலின் மேல் தளங்களில் இருந்து கண்டு ரசிக்கலாம். பார்வையாளர்கள் அரண்மனைக்குள் இருக்கும் பல்வேறு இடங்களிலிருந்து பிங்க் சிட்டியின் காட்சிகளை அனுபவிக்க முடியும்.
ஹவா மஹாலில் ஒரு சிறிய அருங்காட்சியகம் உள்ளது. இதில் அரச காலத்தின் கலைப்பொருட்கள், சின்ன ஓவியங்கள் மற்றும் நினைவுச்சின்னங்கள், ராஜஸ்தானின் வரலாறு, பாரம்பரிய ராஜஸ்தானி கவசம், ஆயுதங்கள் மற்றும் அரச குடும்பத்தார் பயன்படுத்திய அலங்கார பொருட்கள் போன்றவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இவை பார்வையாளர்களுக்கு கலாச்சாரம் மற்றும் கலை பற்றிய நுண்ணறிவுகளை வழங்குகிறது. ஹவா மஹால் ஜெய்ப்பூரில் கட்டாயம் பார்க்க வேண்டிய இடமாக அமைகிறது.
-ஹேமா ராகேஷ்
- நான் ஆச்சரியப்பட்டேன், அவனுடைய நம்பிக்கையை நினைத்து வாய் அடைத்துப் போனேன்.
- வாழ்வின் ஒவ்வொரு தருணத்தையும் உற்சாகமான விளையாட்டைப் போல ரசிப்போம்.
நான் ஒரு பள்ளி மைதானத்தில் உள்ளூர் கால்பந்து போட்டியைப் பார்த்து கொண்டிருந்தேன்.
நான் அருகில் அமர்ந்திருந்த ஒரு பையனிடம் உங்கள் அணியின் ஸ்கோர் என்ன? என கேட்டேன்.
அந்த பையன் புன்னகையுடன், நாங்கள் 0, எதிரணி 3 என்றான்.
நீ சோர்வடைய வேண்டாம் தம்பி என்று நான் சொன்னென்.
சிறுவன் குழப்பமான பார்வையுடன், என்னை, என் மன உறுதியை சந்தேகிப்பவன் போல ஒரு ஆழமான பார்வை பார்த்து விட்டு,
"நடுவர் இறுதி விசில் அடிக்காத போது, நான் ஏன் மனம் தளர வேண்டும் அங்கிள்?"என தீர்க்கமான கேள்வி ஒன்றை கேட்டான்.
எங்கள் அணி மற்றும் பயிற்சியாளர் மேல் எனக்கு நம்பிக்கை உள்ளது. நாங்கள் நிச்சயமாக வெல்வோம் என உறுதியாக சொல்லிவிட்டு ஆட்டதை கவனித்தான்.
உண்மையாகவே, போட்டி 5 - 4 என சிறுவன் அணிக்கு சாதகமாக முடிந்தது.
வெற்றியை அறிவித்ததும், அவன் என்னை நோக்கி உற்சாகமாக கை அசைத்தான்.
பின் ஒரு அழகான புன்னகையுடன் விடைபெற்றான்.
நான் ஆச்சரியப்பட்டேன், அவனுடைய நம்பிக்கையை நினைத்து வாய் அடைத்துப் போனேன்.
அவனது நம்பிக்கை அவ்வளவு அழகான, ஆழமான நம்பிக்கை. என்னை யோசிக்க வைத்தது.
அன்று இரவு வீடு திரும்பியதும், அவன் என்னை கேட்ட கேள்வி எனக்குள் வந்து கொண்டே இருந்தது.
'நடுவர் இறுதி விசில் அடிக்காத போது நான் ஏன் மனம் தளர வேண்டும்?'என்ற அவன் கேள்வி என்னை உறங்க விடவிலை.
வாழ்க்கை ஒரு விளையாட்டு போன்றது....
வாழ்ந்து கொண்டு இருக்கும் போது, நாம் ஏன் பல சமயம் சோர்வடைகிறோம்?.
நமக்கான இறுதி விசில் ஒலிக்காதபோது நாம் ஏன் சோர்வடைய வேண்டும்?.
உண்மை என்னவென்றால், நம்மில் பலர் இறுதி விசிலை நாமாகவே ஊதிக்கொள்கிறோம்..
ஆட்டம் முடியும் முன், மைதானத்தை விட்டு வெளியேறுகிறோம்.
ஆனால், வாழ்க்கை நம்மிடம் இருக்கும் வரை, எதுவும் சாத்தியம் இல்லாமல் இல்லை.,
நம்மிடம் இருக்கும் காலம் பாதியாகவோ, முக்கால் வாசியாகவோ முழுதாகவோ இருக்கலாம்...
அது முக்கியம் அல்ல...
ஆனால், காலம் முடியும் முன், நாமே விசில் அடிக்க கூடாது..
நம் ஆட்டதின் நடுவர் கடவுள்..
அவர் மீதும், உங்கள் மீதும் நம்பிக்கை வையுங்கள்....
எனவே, இன்னும், நடுவர் இறுதி விசிலை அடிக்கவில்லை என்பதை உணர்ந்து, வாழ்வின் ஒவ்வொரு தருணத்தையும் உற்சாகமான விளையாட்டைப் போல ரசிப்போம்..!
-அருள்ராம்
- நீண்ட கால வரையறைகளையும் அது கூறுகின்றது.
- இன்றைய விஞ்ஞானத்துக்கு ஒப்பான முறையில் அன்றே சொன்னது சைவம்.
உலக மதங்களிலேயே இந்து சமயம் ஒன்றுதான் இந்த அண்டம் எண்ணற்ற தடவைகள் மீண்டும் மீண்டும் தோன்றி ஒடுங்குகின்றது என்ற கருத்தை உடையது. இந்து சமயத்தின் கால எல்லை ஒன்றே இன்றைய விஞ்ஞானத்தின் அண்டவியல் கால எல்லையுடன் ஒத்துப்போகின்றது; இது தற்செயலாகத்தான் இருக்க வேண்டும்.
இந்துக்களின் காலக்கணிப்பு சாதாரண நமது ஒரு இரவு பகல் கணக்கிலிருந்து படைப்புக் கடவுள் பிரம்மாவின் இரவு பகல் வரை சொல்கின்றது. இது 8.64 பில்லியன் வருடங்களாகும். இக்காலம் நமது பூமியினதும், சூரியனினதும் காலத்தை விட நீண்டது. இதை விட நீண்ட கால வரையறைகளையும் அது கூறுகின்றது.
கால வாய்ப்பாடு :
60 தற்பரை= 1 விநாடி
60 விநாடி= 1 நாளிகை
60 நாளிகை= 1 நாள்
365 நாள்,15 நாளிகை,31விநாடி,15 தற்பரை = 1 வருடம்.
1 மனித வருடம்= 1 தேவ நாள்
கிருதயுகம்= 17,28,000 வருடம்
திரேதா யுகம்= 12, 96,000 வருடம்
துவாபர யுகம் = 8,64,000 வருடம்
கலியுகம் = 4,32,000 வருடம்
சதுர்யுக மொத்தம்= 43,20,000 வருடம் .... (17,28.000+12,96,000+8,64,000+4,32,000 = 43,20,000)
71 சதுர்யுகம்= 1 மன்வந்தரம்
1000 சதுர யுகம்= 432 கோடி வருடம்
= 1 கற்பம்
4,32,000 வருடங்கள் கொண்ட இன்றைய கலியுகம்;
8,64,000 வருடங்கள் கொண்ட இதற்கு முந்திய துவாபர யுகம்;
அதற்கும் முந்திய 12,96,000 வருடங்கள் கொண்ட திரேதா யுகம்;
அதற்கும் முந்திய 17,28, 000 வருடங்கள் கொண்ட சத்திய யுகம்;
இந்த நான்கு யுகங்களும் சேர்ந்த 43,20,000 வருடங்கள் கொண்ட சதுர் யுகம்;
71 சதுர்யுகங்கள் கொண்டது ஒரு மன்வந்தரம்; (306. 72 மில்லியன் வருடங்கள்)
பதினான்கு மன்வந்தரங்கள் கொண்டது ஒரு கல்பம்.
ஒரு கல்பத்தில் ஆயிரம் சதுர்யுகங்கள். இது 432 கோடி வருடங்கள், (43.2 பில்லியன் வருடங்கள்)
ஒரு கல்பத்தை தனது ஒரு பகலாகக் கொண்ட படைப்புக் கடவுள் பிரம்மா,
பிரம்மாவின் ஒரு பகலில் 14 இந்திரர்கள் ஒருவர் பின் ஒருவராக வந்து செல்வர்;
இவ்வாறு இரண்டு கல்பங்கள் பிரம்மாவின் ஒரு நாள்,
720 கல்பங்கள் பிரம்மாவின் ஒரு வருடம்;
இவ்வாறு நூறு வருடங்கள் கொண்டது பிரம்மாவின் ஆயுள்,
(311,040 ட்ரில்லியன் வருடங்கள்)
இது காத்தல் கடவுள் விஷ்ணுவுக்கு ஒரு நாள்,
இவ்விதமாக விஷ்ணுவுக்கு ஆயுள் நூறு வருடம்;
இது அழித்தல் கடவுளான உருத்திரனுக்கு ஒரு நாள்,
ஒரு பிரம்மாவின் வாழ்நாளில் 5, 40, 000 இந்திரர்கள் ஒருவர் பின் ஒருவராக வந்து, வாழ்ந்து, மடிவர்.
இவ்விதமாக கோடிக்கணக்கான பிரம்மாக்களும், விஷ்ணுக்களும், இந்திரர்களும் வந்து போயினர் என்று காலச்சக்கரத்தை இன்றைய விஞ்ஞானத்துக்கு ஒப்பான முறையில் அன்றே சொன்னது சைவம்.
"நூறு கோடி பிரமர்கள் நொந்தினார்
ஆறு கோடி நாராயண ரங்ஙனே
ஏறு கங்கை மணலெண்ணி லிந்திரர்
ஈறி லாதவன் ஈச னொருவனே"
- அப்பர் சுவாமிகள் தேவாரம்
பொழிப்புரை:
நூறுகோடி பிரமர்கள் அழிந்தனர் ; ஆறுகோடி திருமால்களும் அங்ஙனமே ஆயினார்கள் ; நீர் பொங்கிப்பெருகும் கங்கையாற்று மணலைவிட எண்ணிக்கையற்ற இந்திரர் நிலையும் அவ் வண்ணமே ; முடிவற்றவனாய்த் திகழ்பவன் ஒப்பற்றவனாகிய இறைவன் மட்டுமே.
- டாக்டர் லம்போதரன்.
- ஒரு வயதான மனிதர், தன் உடலை, வில் போல பின்னுக்கு வளைத்துக் கொண்டு நடந்து போய்க் கொண்டிருந்தார்.
- தமிழ், தெலுங்கு இரண்டு படங்களின் காட்சிகளும் எடுக்கப்பட்டன.
"ஒரு நாள் வாஹினி ஸ்டூடியோவுக்குள் நடந்து போய்க் கொண்டிருந்தேன். புரொடக்ஷன் மேனேஜர் ஜெகந்நாதன் என்னைப் பார்த்து..
"நாகேஷ், வாஹினியில் தெலுங்கு தமிழ் என இரண்டு மொழிகளிலும் ஒரு படம் எடுக்கிறோம்.. ஜெமினி கணேசன் ஹீரோ..
இன்னிக்கு எடுக்கப்போற சீன் துவக்கத்தில், ஒரு சர்வர் டேபிளைத் துடைப்பது போல் ஒரு காட்சி இருக்கிறது..
அந்த ஒரு ஷாட்டில் நீ நடிக்கணும். எவ்வளவு பணம் வேணும் ? 500 ரூபாய் போதுமில்லையா?" என்று கேட்டார்.
நான் "சரி" என்றதும் காத்திருக்கச் சொன்னார்.
அப்போது அந்தப்பக்கம் ஒரு வயதான மனிதர், தன் உடலை, வில் போல பின்னுக்கு வளைத்துக் கொண்டு நடந்து போய்க் கொண்டிருந்தார்.
அவர் என் கவனத்தை ஈர்த்தார். அவர் கையில் ஒரு சிகரெட் பெட்டியும், ஒரு தீப்பெட்டியும் இருந்தது.
என் குசும்பு புத்தி சும்மா இருக்குமா? கிடுகிடுவென்று அவரிடம் போனேன். அவரது தோள்பட்டையை தொட்டு,
"ரொம்ப கஷ்டப்பட்டு சிகரெட் பெட்டியைத் தூக்கிக்கிட்டு போறாப்போல இருக்கு. என்கிட்ட வேணும்னா கொடுங்க. நான் எடுத்துக்கிட்டு வர்ரேன்" என்றேன்.
அவர் "ஹா..ஹா.." என்று சிரித்து விட்டு தன்பின்னோக்கிய வில் நடையைத் தொடர்ந்தார்.
சிறிது நேரத்தில் எனக்கு அழைப்பு வந்தது. செட்டுக்குள் போனேன்.
ஜெகந்நாதன் "ஒரு முறை ஒத்திகை பார்த்துக்கலாம்" என்றார்.
நான், ஒரு சிறு டவலை வாங்கி, தோளில் போட்டு, தட்டு, டம்ளர்கள் போடுகிற பக்கெட்டை எடுத்துக் கொண்டேன்.
டேபிளில் இருந்த ஒரு டம்ளரை, மேலே தூக்கிப் போட்டுவிட்டு, அந்த டேபிளை சுத்தம் செய்துவிட்டு, மறுபக்கம் வேகமாக வந்து, கீழே விழப்போகும் டம்ளரை லாவகமாக பக்கெட்டில் பிடித்துக் கொண்டேன்.
"சபாஷ், ரொம்ப நல்லா நடிக்கிறயேப்பா" என்று ஒரு குரல் கேட்டது.
செட்டுக்கு வெளியே ஒருவரின் நடையை கேலி பண்ணினேனே..அதே மனிதர் தான் – வாஹினி ஸ்டூடியோ அதிபரான சக்ரபாணி.
"சார் கொஞ்ச நேரத்துக்கு முன், நீங்க நடந்து வந்துகிட்டு இருந்தபோது, யாருன்னு தெரியாம உங்களை கேலி பண்ணிட்டேன். தயவு செஞ்சு மன்னிச்சுடுங்க.." என்று காலில் விழாத குறையாக கெஞ்சினேன்.
"அதை நான் எப்பவோ மறந்தாச்சு. நீ நல்லா நடிக்கிறயே.." என்றவர், அடுத்தபடியாக..
"உனக்கு எவ்வளவு பணம் பேசியிருக்கு ?" என்று கேட்டார்.
500 ரூபாய் என்றார் ஜெகந்நாதன்.
"தமிழ்ல நடிக்கத்தானே 500 ரூபாய் பேசியிருக்கு. தெலுங்குலயும் நீயே பண்ணிடு. இரண்டுக்குமா சேத்து 1000 ரூபாய் வாங்கிக்கோ…" என்றார்.
எனக்கு கனவா, நனவா என்று சந்தேகமே வந்து விட்டது.
தமிழ், தெலுங்கு இரண்டு படங்களின் காட்சிகளும் எடுக்கப்பட்டன.
புரொடக்ஷன் மேனேஜர் ஜெகந்நாதனை கூப்பிட்டு, 1000 ரூபாய்க்கு செக் எழுதிக் கொண்டு வரச் சொன்னார்.
நான் "சார் சார் செக்கெல்லாம் வேண்டாமே" என்றேன்.
அவரோ என்னப்பார்த்து சிரித்தபடி"வாஹினி பெரிய கம்பெனி. செக்கெல்லாம் திரும்ப வராது. பயப்படாதே" என்றார்.
"அதுக்கு இல்லை சார் ! எனக்கு அவசரமா பணம் தேவைப்படுது. அதனால் பணமா கொடுத்தீங்கன்னா ரொம்ப சௌகரியமா இருக்கும்" என்றேன்.
"அப்படியா .. சரி" என்று சொல்லி, ஜெகந்நாதனிடம்,
"காரில் இவரை அழைச்சிட்டு நேரே பேங்குக்கு போய், செக்கை பணமா மாத்திகொடுத்து விடு. இவரையும் அவரது இடத்தில் கொண்டு போய்விட்டு விட்டு வா" என்றார்.
அந்த ஆயிரம் ரூபாயை, என் வாழ்வில் மறக்கவே முடியாது. அந்தப் பணத்தில், ஒரு பட்டுப்புடவை, ஒரு தாலி, பிரவுன் கலரில் ஒரு பேண்ட் வாங்கி –நான் காதலித்த ரெஜினாவை பதிவுத் திருமணம் செய்து கொண்டேன்."
-சிங்காரவேலு பாலசுப்பிரமணியன்.
- சைப்பிரஸ் மரங்களால் ஆன காடு இருக்கிறது.
- ஆற்றின் கரை ஓரங்களில் இலைகளுடன் மரங்கள் இருந்தன.
அமேசான் மழைக்காடுகளைத் தெரியும். கடலுக்கு அடியில் அமேசானை விட பெரிய மழைக்காடுகள் இருப்பது தெரியுமா?
ஆம். கடலுக்கு அடியிலும் காடுகள் உள்ளன. கெல்ப் (Kelp) காடுகள் என்பது இந்த கடலடி காடுகளுக்கு உள்ள இன்னொரு பெயர்.
மெக்சிகோ வளைகுடாவில் அறுபதடி ஆழத்தில் சைப்பிரஸ் மரங்களால் ஆன காடு இருக்கிறது. இந்த காடு, 60 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பனியூழி காலத்து காடாம்.
கடல்மட்டம் இப்போது இருப்பதைவிட 400 அடி குறைவாக இருந்த காலத்தில் நிலத்துக்கு மேலே இருந்த காடு இது. இப்போது கடலுக்கடியில் இருக்கிறது.
கடலடியில் உள்ள காடுகளின் மொத்த பரப்பளவு 6 மில்லியன் முதல் 7.2 மில்லியன் சதுர கிலோ மீட்டர். ஆக, அமேசான் காடுகளை விட பெரிய காடுகள் ஆழ்கடலுக்கு அடியில்தான் இருக்கின்றன.
சரி கடலுக்கு அடியில் காடுகள் மட்டும்தான் இருக்குமா? இல்லை ஆறுகளும்(!) இருக்கும்.
மெக்சிகோ நாட்டின் துலும் கடற்பகுதியில் அனடோலி என்பவரும், அவருடைய நண்பர்களும் ஸ்கூபா நீர்மூழ்கி உடையணிந்து முக்குளித்து கொண்டிருந்தனர். அப்போது கடல்தரையில், ஆறு ஒன்று ஓடுவதை அவர்கள் கவனித்தனர்.
நிலத்தில் ஓடும் ஆற்றில் எப்படி வெள்ளம் போகுமோ, அதைப்போல அந்த கடலடி ஆற்றிலும் வெள்ளம் ஓடியது. அந்த ஆற்றின் கரை ஓரங்களில் இலைகளுடன் மரங்கள் இருந்தன.
இந்த கடலடி ஆற்றுக்கு, 'செனோட்டே ஏஞ்சலிட்டா' (குட்டி தேவதை) என்று அவர்கள் பெயர் சூட்டினர்.
ஆனால், மெக்சிகோ அருகே துலும் பகுதியில் மட்டுமல்ல, கருங்கடல், ஆஸ்திரேலியா, போர்த்துக்கல் நாடுகளுக்கு அருகே உள்ள கடற்பகுதிகளிலும் ஆறுகள் ஓடுவது தெரிய வந்திருக்கிறது.
-மோகன ரூபன்
- உலகின் முதல் மோட்டார் சைக்கிள் பிறந்துவிட்டது.
- 5 ஆயிரம் சைக்கிள் கடைக்காரர்கள் முன்வந்து பண உதவி செய்தனர்.
இரண்டாம் உலகப் போர் முடிந்திருந்த நேரம் ஜப்பானின் பொருளாதாரம் சாம்பலாக்கப்பட்ட காலக்கட்டம்.
ஜப்பான் முழுதும் பெட்ரோல் தட்டுப்பாடு. கார்கள் எல்லாம் முடங்கிவிட்டன.
எல்லோரும் நடக்கிறார்கள் அல்லது சைக்கிளில் செல்கின்றார்கள்.
சோய்செரோ ஹோண்டா, வீட்டில் அமர்ந்திருந்தார்.
அருகில் சைக்கிள் நின்றது. சற்றுத் தொலைவில் புல்வெட்டும் இயந்திரம் இருந்தது..
அந்தப் புல்வெட்டும் இயந்திரத்தில் உள்ள மோட்டாரைக் கழற்றி, இந்த சைக்கிளில் இணைத்தால் என்ன என்று ஹோண்டாவுக்கு ஒரு புத்தம் புது ஐடியா தோன்றியது.
அடுத்த நொடியில் காரியத்தில் இறங்கினார் ஹோண்டா. புல்வெட்டும் இயந்திர மோட்டாரைக் கழற்றி எடுத்து, தனது சைக்கிளில் அவர் பொருத்திய போது உலகின் முதல் மோட்டார் சைக்கிள் பிறந்துவிட்டது.

அதை எடுத்துக்கொண்டு ஆனந்தமாக சுற்றி வந்தார் ஹோண்டா. அதேபோன்று எங்களுக்கும் செய்துகொடு என்று மொய்க்கத் தொடங்கினர் மக்கள்.
அவரும் சளைக்காமல் செய்து கொடுத்தார். அதன் விளைவு என்ன ஆயிற்று?
அந்த ஊரில் மோட்டார் தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டது. இதையே பெரிய தொழிலாக மாற்றினால் என்ன என்று சிந்தித்தார் ஹோண்டா.
கையில் பணமில்லை, வங்கிகள் கடன் தரத் தயாராகவில்லை. தனது தொழில் திட்டத்துக்கு பண உதவி செய்யுமாறு வேண்டுகோள் விடுத்து, ஜப்பானில் உள்ள 18 ஆயிரம் சைக்கிள் கடைக்காரர்களுக்கு கடிதம் எழுதினார்.
முதலீடு செய்யும் சைக்கிள் கடைக்காரர்கள், மோட்டார் சைக்கிள் விநியோகஸ்தர்களாக நியமிக்கப்படுவார்கள் என உறுதி அளித்தார். 5 ஆயிரம் சைக்கிள் கடைக்காரர்கள் முன்வந்து பண உதவி செய்தனர். ஹோண்டா மோட்டார் சைக்கிள் நிறுவனம் உதயமானது.
- மகிழ்ந்து போன கவிஞர் அந்தக் காரை தன்னுடைய கார் போலவே எண்ண துவங்கினார்.
- அடுத்த நாள் காலை நண்பரிடம் இருந்து வெளிநாட்டுக் காரை எடுத்து கொள்ள எண்ணினார்.
கவியரசர் கண்ணதாசனிடம் ஏற்கனவே ஒரு அம்பாஸிடர் கார் இருந்தும், தன் நண்பர் வைத்திருந்த வெளிநாட்டு கார் மீது விருப்பம். அந்த நண்பரும் அதை விற்கப் போகிறார் என்பதை தெரிந்துகொண்ட கவிஞர், அதை தரவேண்டுமென்று விலையும் பேசி முடித்து விட்டார். முழு தொகையும் தர கண்ணதாசனிடம் பணமில்லை. அப்போது மூன்றில் ஒரு பங்கு பணம் தருவதாகவும், பின்னர் மீதியை விரைவில் தருவதாகவும் சொல்ல நண்பரும் சரி என்று சொல்லிவிட்டார். மகிழ்ந்து போன கவிஞர் அந்தக் காரை தன்னுடைய கார் போலவே எண்ண துவங்கினார்.
அடுத்த நாள் காலை நண்பரிடம் இருந்து வெளிநாட்டுக் காரை எடுத்து கொள்ள எண்ணினார். இதற்கிடையே அந்த நண்பரிடம் சிலர் , 'கவிஞர் கடன் விசயத்தில் ரொம்ப மோசமென்றும், எனவே நண்பரின் மீதி பணம் வருவது கஷ்டம்'என்றும் சொல்ல நண்பர் பீதியானார்.
அடுத்தநாள் காலை கவிஞர் வண்டியை எடுத்து வர ஓட்டுனருடன் நண்பர் வீட்டுக்குபோக, அந்த நண்பரோ அந்த கார் தனக்கு மிகவும் ராசியானது என்றும், அதை விற்க தன் மனைவி மற்றும் குடும்பத்தாருக்கும் விருப்பமில்லை'என்றும் சொல்ல, கவிஞர் ஏமாற்றத்துடன் திரும்பினார்.
தான் மிகவும் விரும்பி தன்னுடயதாகவே எண்ணி இருந்த கார் தனக்கு கிடைக்கவில்லையே என்ற மனவருத்தம் இருந்தபோது அன்று மதியம் இரண்டு மணிக்கு, எழுத அமர்ந்த கவிஞருக்கு அன்று காலை நடந்த விஷயம் பாதிக்க, இயக்குனர் ராமண்ணா இயக்கத்தில் எம்.ஜி.ஆர். நடித்து வரவிருந்த 'பணக்கார குடும்பம்' படத்துக்கு சோகப் பாடலின் பல்லவியை இப்படி எழுதினார். " பல்லாக்கு வாங்கப்போனேன் ஊர்வலம் போக – நான் பாதியிலே திரும்பி வந்தேன் தனிமரமாக" என்று மெல்லிசை மன்னர்களின் இசையில் அமைந்த சாகாவரம் பெற்ற பாடல்களில் இப்படி தான் பிறந்தது .
-சந்திரன் வீராசாமி
- சென்னை ரிக்ஷாக்காரர்கள் பல ஆங்கிலச் சொற்களை தமிழுக்கு கொண்டு வந்தனர்.
- இங்கிலாந்தில் இருந்து கப்பலில் வந்திறங்கும் ஆங்கிலேயர்கள்.
"பேஜாரு "- வார்த்தை எப்படி வந்தது?
சென்னை ரிக்ஷாக்காரர்கள் பல ஆங்கிலச் சொற்களை தமிழுக்கு கொண்டு வந்தனர்.
அவற்றில் ஒன்று தான் பேஜாரு.
அந்தக் காலத்தில் இங்கிலாந்தில் இருந்து கப்பலில் வந்திறங்கும் ஆங்கிலேயர்களை,
இன்று வெளியூர்வாசிகளை ஆட்டோக்காரர்கள் கையைப் பிடித்து இழுப்பதைப் போல, ரிக்ஷாக்காரர்கள் அன்பாய் படுத்தி எடுத்திருக்கிறார்கள்.
இதனால் கடுப்பாகும் சில ஆங்கிலேயர்கள்
don't badger me (என்னை நச்சரிக்காதே) என்று சொல்லித் தவிர்த்து இருக்கின்றார்கள்.
வெள்ளைக்காரன் சொன்ன அந்த badger-ஐ, நம்ம ரிக்ஷாக்காரர்கள் அப்படியே தங்களின் குப்பத்திற்கு எடுத்துச் சென்று பேஜார் ஆக்கிவிட்டார்கள்.
- இந்திரன் ராசேந்திரன்
- நாயின் துரத்தலுக்கு பயந்து வாகனத்தினை வேகமாக செலுத்தினால் அந்த நாயும் வேகமாக துரத்தி வாகனம் விபத்தில் சிக்கும் அபாயம் உண்டாகும்.
- நாய் துரத்தினால் வாகனத்தினை சட்டென பயப்படாமல் நிறுத்தினால் நாய் அருகில் வந்து பார்த்து எதிர்பார்த்த நாய் இல்லாத நிலையினைக் கண்டு குழம்பி நின்று விடும்.
தெருநாய்கள் ஏன் திடீரென தெருவில் போகும் வாகனங்களை குரைத்துக் கொண்டே துரத்த ஆரம்பிக்கிறது?
அதற்கான அறிவியல் பூர்வமான காரணம் என்ன ? அதனால் ஏற்படும் விபத்துகளை தவிர்க்க என்ன வழி?
அதற்கான சரியான காரணம் என்னவெனில் துரத்தப்படும் வாகனமானது எங்கேயாவது நின்று இருந்தபோது அதன் மீது அந்த பகுதியில் வசித்த ஒரு தெரு நாய் அதன் சிறுநீரைக் அந்த வாகனத்தின் மீது கழித்து தனது எல்லையை வரையறுத்து இருக்கும்.
தற்போது அந்த சிறுநீர் மணத்துடன் வாகனமானது இன்னொரு நாயின் எல்லைக்குள் நுழையும் போது இங்குள்ள நாய் அந்த சிறுநீரை மோப்பம் பிடித்து அந்த வாகனத்தினை எதிரி நாயாக பாவித்து துரத்த ஆரம்பிக்கும்.
நாயின் துரத்தலுக்கு பயந்து வாகனத்தினை வேகமாக செலுத்தினால் அந்த நாயும் வேகமாக துரத்தி வாகனம் விபத்தில் சிக்கும் அபாயம் உண்டாகும்.
ஆகவே அப்படி நாய் துரத்தினால் வாகனத்தினை சட்டென பயப்படாமல் நிறுத்தினால் துரத்தி வரும் நாய் அருகில் வந்து பார்த்து எதிர்பார்த்த நாய் இல்லாத நிலையினைக் கண்டு குழம்பி நின்று விடும்.
அடுத்து வீட்டுக்கு சென்ற பின்னர் முதல்வேலையாக நீரை வாகனத்தின் மீது பீய்ச்சி அடித்து நாயின் சிறுநீர் மணம் போகும்படி கழுவி விடவும்.
-லாயர் செந்தில் குமார்
- இஞ்சி சாறு சுடுநீரில் கலந்து தேன் கலந்து சாப்பிட குடல் புண்கள் சரியாகும்.
- சீரகம் தண்ணீரில் கொதிக்க வைத்து குடிக்க ஜீரணத்தை அதிகரிக்கும்.
எலுமிச்சை பழம், பூண்டு, இஞ்சி, மிளகு, சீரகம், சிவப்பு மிளகாய், வெந்தயம், விளக்கெண்ணெய், கிராம்பு, பட்டை..
இவை எல்லாமே நாள்பட்ட பல நோய்களையும் பல தீவிர உடல் தொந்தரவுகளையும் குறைக்கக்கூடிய மருந்துகள்...
சுடுநீரில் எலுமிச்சை சாறு கலந்து குடிக்க உடலில் நீர்ச்சத்து அதிகமாகும்..
பூண்டு ரத்த அழுத்தத்தை குறைத்து ரத்த நாள அடைப்புகளை சரி செய்யும்.
இஞ்சி சாறு சுடுநீரில் கலந்து தேன் கலந்து சாப்பிட குடல் புண்கள் சரியாகும்.
மிளகு நாள்பட்ட சளியை முறிக்கும் ..
சீரகம் தண்ணீரில் கொதிக்க வைத்து குடிக்க ஜீரணத்தை அதிகரிக்கும்.
சிவப்பு மிளகாய் ரத்தத்தை நீர்மம் ஆக்கி உடல் உட்புற காயங்களையும் ரத்த நாள காயங்களையும் சரி செய்யும்..
வெந்தயம் இரவில் வாயில் போட்டு தண்ணீர் குடித்து வர உடல் சூட்டை தணித்து அடி வயிற்று வலி, மூலம், பௌத்திரம் போன்ற தொந்தரவுகளை சரி செய்யும்...
விளக்கெண்ணெய் 10 மில்லி பூண்டுடன் சாப்பிட்டு வர பித்தப்பை கற்கள், அடி வயிற்று வலி இன்னும் அனைத்து வகையான உடல் சூடு பிரச்சனைகளும் சரியாகும்..
கிராம்பு உடல் சூட்டை சரி செய்து ஓட்டத்தை சீராக்குகிறது..
பட்டை ரத்தத்தை சுத்தி படுத்தி ரத்த அழுத்தத்தை சரி செய்கிறது.
மரபு மருத்துவம் எளிமையானதாக இருக்கிறது .நோயைப் பற்றிய பயமே மனிதனை மருந்துகளுக்கு அடிமை ஆக்குகிறது.
-ரியாஸ்
- மயில்கள் அழகு, அன்பு மற்றும் புத்துணர்ச்சியின் அடையாள சின்னம்.
- வீட்டின் வாஸ்து தோஷத்தை நீக்க 8 மயில் இறகைப் பயன்படுத்த வேண்டும்.
மயிலைத் தூய்மை மற்றும் பாசிட்டிவ் சக்தியின் அம்சமாக நம் முன்னோர்கள் கருதினார்கள். மயில் இறகுகள் வீட்டில் இருப்பது சுபமானது. மயில்கள் அழகு, அன்பு மற்றும் புத்துணர்ச்சியின் அடையாள சின்னம். அதிர்ஷ்டத்தை ஈர்க்க, வீட்டில் மயில் இறகுகளை வைப்பார்கள் நம் முன்னோர்கள். மயில் இறகுகள் வீட்டில் உள்ள எதிர்மறை சக்தியை நீக்கி, நேர்மறை சக்திகளையும் ஈர்க்கிறது.
கிருஷ்ணன் தேய்பிறை ரோகிணியில் பிறந்தார் எனவே அவருக்குரிய பஞ்சபட்சி மயில். அவர் தனது பக்ஷிக்குரிய இறகைத் தலையில் எப்பொழுதும் அணிந்திருப்பார். அதனால் அவர் இறங்கிய செயல்கள் அனைத்திலும் வெற்றியே கண்டார்.
(1) மயில் இறகை வீட்டிலிலோ வீட்டு முகப்பிலோ வைப்பது வாஸ்து தோஷம் மற்றும் திருஷ்டி தோஷத்தைப் போக்கும்.
(2) மயில் தோகையை காயத்துடன் வைத்து கட்டுப் போடா காயம் விரைவில் ஆறும்.
(3) எந்தக் காயத்திக்கும் மயில் இறகைத் தொட்டு தைலம் அல்லது எண்ணெய் போட்டு வர விரைவில் குணமாகும்.
(4) திருஷ்டி தோஷத்திற்கு மந்திரிப்பவர்கள், மயிலிறகினாள் மந்திரித்து, தலை முதல் பாதம் வரை தடவி விடுவார்கள். இதனால் ஒருவர் உடலில் தாக்கங்களை உண்டாக்கியுள்ள திருஷ்டி/ செய்வினை தோஷங்கள் விலகும்.
(5) மயில் தோகையினால் ஆன விசிறிகளை வாங்கி, தினமும் சிறிது நேரம் நமக்கு நாமே வீசிக்கொள்ள, எதிர்மறை சக்திகள் நம்மை விட்டு அகலும்.
வாஸ்து தோஷம் நீங்க:-
வீட்டின் வாஸ்து தோஷத்தை நீக்க 8 மயில் இறகைப் பயன்படுத்த வேண்டும். அந்த எட்டு மயில் இறகையும் ஒன்று சேர்த்து, ஒரு வெள்ளை நிற கயிற்றினால் கட்டி, பூஜை அறையில் வைத்து "ஓம் சோமாய நமஹ" என்ற மந்திரத்தை உச்சரித்து வர வேண்டும்..
சனி தோஷம் நீங்க:-
சனி தோஷம் நீங்குவதற்கு, மூன்று மயில் இறகை ஒன்று சேர்த்து கருப்பு நிற கயிற்றினால் கட்டி, சிறிது பாக்கை நீரில் போட்டு, அந்நீரைத் தெளித்தவாறு "ஓம் சனீஸ்வராய நமஹ" என்று தினமும் 21 முறை உச்சரிக்க வேண்டும்...
செல்வவளம் அதிகரிக்க:-
அலமாரி நகை மற்றும் பணம் வைக்கும் அலமாரியில் ஒரு மயில் இறகை வைக்க வேண்டும். இதனால் அந்த அலமாரியில் செல்வம் அதிகம் சேர்வதோடு, நிலைக்கவும் செய்யுமாம்...
எதிர்மறை ஆற்றல்கள் நீங்க:-
மயில் இறகை வீட்டின் முன் வைப்பதால், வீட்டினுள் எதிர்மறை ஆற்றல்கள் நுழைவதைத் தடுப்பதோடு, வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்களும் நீங்கும்...
அன்யோன்யம் மற்றும் புரிதல் கூட:-
திருமணமான தம்பதியர்கள், தங்களின் படுக்கை அறையில் மயில் இறகை வைத்திருப்பதன் மூலம், தம்பதியருக்குள் இருக்கும் பிரச்சனைகள் நீங்கி, அன்யோன்யம் மற்றும் புரிதல் அதிகரிக்கும்...
- சிவசங்கர்
- மூன்று பண்புகளை பின்பற்ற வேண்டும் என்றார்.
- கணவனா? மனைவியா? பிரச்சனை அங்குதானே ஆரம்பிக்கிறது..". என்று கேட்டார்.
ஒரு நிகழ்ச்சியில் வேதாத்திரி மகரிஷி பேசிக்கொண்டிருந்தார். அதாவது இல்லற வாழ்க்கை சிறப்பாக அமைய,
விட்டுக் கொடுப்பது..
அனுசரித்துப் போவது..
பொறுத்துப் போவது..
ஆகிய மூன்று பண்புகளை பின்பற்ற வேண்டும் என்றார்.
அப்போது ஒரு பெண் எழுந்து, விட்டுக் கொடுப்பது என்று பொதுவாக சொல்கிறீர்கள்.
"யார் விட்டுக் கொடுப்பது?
கணவனா? மனைவியா?
பிரச்சனை அங்குதானே ஆரம்பிக்கிறது..". என்று கேட்டார்.
அதற்கு வேதாத்திரி மகிரிஷி பதிலளிக்கையில்,
"யாரிடம் அன்பு அதிகமாக இருக்கிறதோ,
யார்அறிவாளியோ..
அவர்கள்தான் முதலில் விட்டுக் கொடுப்பார்கள்.
அவர்கள்தான் அனுசரித்துச் செல்வார்கள்.
அவர்கள்தான் பொறுத்துப் போவார்கள்" என்றார்.
உங்கள் வீட்டில் இனி யார் விட்டுக் கொடுத்துப் போவது என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் அன்பர்களே!.
- சாய் ராமசாமி






