என் மலர்
கதம்பம்

இந்துக்களின் காலக் கணிப்பு
- நீண்ட கால வரையறைகளையும் அது கூறுகின்றது.
- இன்றைய விஞ்ஞானத்துக்கு ஒப்பான முறையில் அன்றே சொன்னது சைவம்.
உலக மதங்களிலேயே இந்து சமயம் ஒன்றுதான் இந்த அண்டம் எண்ணற்ற தடவைகள் மீண்டும் மீண்டும் தோன்றி ஒடுங்குகின்றது என்ற கருத்தை உடையது. இந்து சமயத்தின் கால எல்லை ஒன்றே இன்றைய விஞ்ஞானத்தின் அண்டவியல் கால எல்லையுடன் ஒத்துப்போகின்றது; இது தற்செயலாகத்தான் இருக்க வேண்டும்.
இந்துக்களின் காலக்கணிப்பு சாதாரண நமது ஒரு இரவு பகல் கணக்கிலிருந்து படைப்புக் கடவுள் பிரம்மாவின் இரவு பகல் வரை சொல்கின்றது. இது 8.64 பில்லியன் வருடங்களாகும். இக்காலம் நமது பூமியினதும், சூரியனினதும் காலத்தை விட நீண்டது. இதை விட நீண்ட கால வரையறைகளையும் அது கூறுகின்றது.
கால வாய்ப்பாடு :
60 தற்பரை= 1 விநாடி
60 விநாடி= 1 நாளிகை
60 நாளிகை= 1 நாள்
365 நாள்,15 நாளிகை,31விநாடி,15 தற்பரை = 1 வருடம்.
1 மனித வருடம்= 1 தேவ நாள்
கிருதயுகம்= 17,28,000 வருடம்
திரேதா யுகம்= 12, 96,000 வருடம்
துவாபர யுகம் = 8,64,000 வருடம்
கலியுகம் = 4,32,000 வருடம்
சதுர்யுக மொத்தம்= 43,20,000 வருடம் .... (17,28.000+12,96,000+8,64,000+4,32,000 = 43,20,000)
71 சதுர்யுகம்= 1 மன்வந்தரம்
1000 சதுர யுகம்= 432 கோடி வருடம்
= 1 கற்பம்
4,32,000 வருடங்கள் கொண்ட இன்றைய கலியுகம்;
8,64,000 வருடங்கள் கொண்ட இதற்கு முந்திய துவாபர யுகம்;
அதற்கும் முந்திய 12,96,000 வருடங்கள் கொண்ட திரேதா யுகம்;
அதற்கும் முந்திய 17,28, 000 வருடங்கள் கொண்ட சத்திய யுகம்;
இந்த நான்கு யுகங்களும் சேர்ந்த 43,20,000 வருடங்கள் கொண்ட சதுர் யுகம்;
71 சதுர்யுகங்கள் கொண்டது ஒரு மன்வந்தரம்; (306. 72 மில்லியன் வருடங்கள்)
பதினான்கு மன்வந்தரங்கள் கொண்டது ஒரு கல்பம்.
ஒரு கல்பத்தில் ஆயிரம் சதுர்யுகங்கள். இது 432 கோடி வருடங்கள், (43.2 பில்லியன் வருடங்கள்)
ஒரு கல்பத்தை தனது ஒரு பகலாகக் கொண்ட படைப்புக் கடவுள் பிரம்மா,
பிரம்மாவின் ஒரு பகலில் 14 இந்திரர்கள் ஒருவர் பின் ஒருவராக வந்து செல்வர்;
இவ்வாறு இரண்டு கல்பங்கள் பிரம்மாவின் ஒரு நாள்,
720 கல்பங்கள் பிரம்மாவின் ஒரு வருடம்;
இவ்வாறு நூறு வருடங்கள் கொண்டது பிரம்மாவின் ஆயுள்,
(311,040 ட்ரில்லியன் வருடங்கள்)
இது காத்தல் கடவுள் விஷ்ணுவுக்கு ஒரு நாள்,
இவ்விதமாக விஷ்ணுவுக்கு ஆயுள் நூறு வருடம்;
இது அழித்தல் கடவுளான உருத்திரனுக்கு ஒரு நாள்,
ஒரு பிரம்மாவின் வாழ்நாளில் 5, 40, 000 இந்திரர்கள் ஒருவர் பின் ஒருவராக வந்து, வாழ்ந்து, மடிவர்.
இவ்விதமாக கோடிக்கணக்கான பிரம்மாக்களும், விஷ்ணுக்களும், இந்திரர்களும் வந்து போயினர் என்று காலச்சக்கரத்தை இன்றைய விஞ்ஞானத்துக்கு ஒப்பான முறையில் அன்றே சொன்னது சைவம்.
"நூறு கோடி பிரமர்கள் நொந்தினார்
ஆறு கோடி நாராயண ரங்ஙனே
ஏறு கங்கை மணலெண்ணி லிந்திரர்
ஈறி லாதவன் ஈச னொருவனே"
- அப்பர் சுவாமிகள் தேவாரம்
பொழிப்புரை:
நூறுகோடி பிரமர்கள் அழிந்தனர் ; ஆறுகோடி திருமால்களும் அங்ஙனமே ஆயினார்கள் ; நீர் பொங்கிப்பெருகும் கங்கையாற்று மணலைவிட எண்ணிக்கையற்ற இந்திரர் நிலையும் அவ் வண்ணமே ; முடிவற்றவனாய்த் திகழ்பவன் ஒப்பற்றவனாகிய இறைவன் மட்டுமே.
- டாக்டர் லம்போதரன்.






