search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலகக்கோப்பை கிரிக்கெட்  - இங்கிலாந்தை 64 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி
    X

    உலகக்கோப்பை கிரிக்கெட் - இங்கிலாந்தை 64 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி

    உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இங்கிலாந்தை 64 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது
    லண்டன்:

    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான 32-வது லீக் ஆட்டம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, ஆஸ்திரேலியாவின் ஆரோன் பிஞ்ச், டேவிட் வார்னர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் தொடக்க முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆஸ்திரேலியா 22.4 ஓவரில் 123 ரன்கள் எடுத்திருக்கும்போது டேவிட் வார்னர் 53 ரன்களில் ஆட்டமிழந்தார். 
    அடுத்து பிஞ்ச் உடன் கவாஜா ஜோடி சேர்ந்தார். கவாஜா 23 ரன்னில் ஆட்டமிழந்த போதிலும், பிஞ்ச் சிறப்பாக விளையாடி 115 பந்தில் சதம் அடித்தார். ஆனால் சதம் அடித்த அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார்.

    சிறப்பான தொடக்கம் மூலம் 300 ரன்னைத் தாண்டும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நடுநிலை வீரர்களான மேக்ஸ்வெல் 12 ரன்னிலும், ஸ்மித் 38 ரன்னிலும், ஸ்டாய்னிஸ் 8 ரன்னிலும் வெளியேற ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் அப்படியே படுத்துவிட்டது. விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி 27 பந்தில் 38 ரன்கள் அடிக்க ஆஸ்திரேலியா 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 285 ரன்கள் சேர்த்தது.

    இதையடுத்து, 286 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது.



    தொடக்க வீரர் ஜேம்ஸ் வீன்சி முதல் ஓவரிலேயே ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார். பின்னர் வந்த ஜோ ரூட் 8 ரன்களிலும், இயன் மோர்கன் 4 ரன்களிலும் அடுத்தடுத்து தங்கள் விக்கெட்டுகளை இழந்து வெளியேறினர். சற்று நிலைத்து நின்று ஆடிய பென் ஸ்டோக்ஸ் 89 ரன்கள் எடுத்து மிச்சல் ஸ்டார்க் பந்து வீச்சில் அவுட் ஆனார்.

    இறுதியில், 44.4 ஓவரில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 221 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் ஆஸ்திரேலிய அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

    ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேசன் மெஹ்ரண்டப் அதிகபட்சமாக 5  விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா அரைஇறுதிக்கு தகுதி பெற்றதுடன், புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.
    Next Story
    ×